லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் பூந்தோட்ட முகாம் மக்களின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வவுனியா வடக்கு சின்ன அடம்பன் இராசபுரம் பகுதியில் அமைக்கப்படும் லைக்கா கிராமத்தின் பணிக்கு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
லைக்கா கிராம வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் தனது வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.
மேலும் சம்பந்தன் உரையாற்றுகையில்,
பூந்தோட்ட மக்கள் உட்பட வடக்கு தமிழ் மக்கள் லைக்கா நிறுவனத்தின் வீட்டுத்திட்டத்தினை வரப்பிரசாதமாகக் கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசித்து வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சர்வதேச அரங்கிற்கு சென்றுள்ளமையினால் இத்தகைய வேலைத்திட்டங்கள் எமது மண்ணில் நடைபெறுகின்றது.
உண்மையில் லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் ஞானம் அறக்கட்டளையின் இணைத் தலைவர் ஞானம்பிகை ஆகியோரின் தாயக தமிழ் மக்கள் சார்ந்த அபிவிருத்தி மற்றும் மனிதாபிமானப் பணிகள் பாராட்டத்தக்கது.
மேலும் இத்தகைய தாயக மக்களுக்கு பயனுள்ள வேலைத்திட்டங்களை புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் எமது உறவுகள் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.
மேலும் லைக்கா நிறுவனத்தின் பணி மென்மேலும் தொடர தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment