August 5, 2015

பூநகரி பூவரசம்தீவில் ஆட்டிலறிக் குண்டுகள்!

யாழ்ப்பாணம் – பூநகரிக்கு இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியில் அமைந்துள்ள பூவரசம்தீவில் சட்டவிரோதமான முறையில் ஆட்டிலறி, மோட்டார்
குண்டுகளை கொண்டு வந்து களஞ்சியப்படுத்தி, அதிலிருந்து வெடி மருந்துகளை வேறாக்கி விற்பனை செய்து வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பூவரசம் தீவில் கடந்த சில காலமாக இந்த சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து பொலிஸ் குழுவொன்று நேற்று பூவரசம் தீவிற்கு சென்றுள்ளது.

இதன் போது, அங்கு வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த வெடி பொருட்கள் இறுதி யுத்தம் இடம்பெற்ற கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வெடிபொருட்களிலிருந்து வெடிமருந்துகள் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த சட்டவிரோத செயலை எந்தக் குழுவினர் மேற்கொண்டு வந்தார்கள் என்பதும், இவர்கள் யாருக்கு இதனை விற்பனை செய்தார்கள் என்பதும் இதுவரையில் வெளிவராத தகவல்களாக இருக்கும் நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளில் இறங்கியுள்ளனர்.

தற்சமயம், விசேட அதிரடிப்படையினர் குறித்த இடத்தை முற்றுகையிட்டுள்ளதுடன், அப்பகுதியில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்களை அங்கேயே வைத்து செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத மீன்பிடி முறைகள் வடக்கு கடற்பரப்பில் கையாளப்பட்டு வரும் நிலையில், அதற்காகவே,இந்த வெடிகுண்டுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களே இந்த வெடி பொருட்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவித்ததாகக் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment