August 4, 2015

முதலமைச்சரிற்கு நெருக்குதல்! நம்பிக்கையில்லா பிரேரணை வருமென அச்சுறுத்தல்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு முதலமைச்சர் நடுநிலை வகிக்கப்போவதான அறிவிப்பின் மத்தியில் அவரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்னெடுத்து பதவி
கவிழ்க்கப்போவதாக அவரது சக அமைச்சர்கள் இருவர் அச்சுறுத்தியுள்ளமை தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளது. இரு அமைச்சர்கள் சுமந்திரன், மாவையோடு உள்ள அதேவேளையில், முதலமைச்சருக்கு நெருக்கமான இரு அமைச்சர்களே முதலமைச்சருக்க எதிராக நடக்கும் சதிகளை அம்பலப்படுத்தியதாக தெரியவருகிறது.

வடமாகாணசபை அமைச்சர்கள் இருவர் முன்னதாக முதலமைச்சரினை நேரில் சந்தித்து தேர்தலில் நடுநிலை வகிக்கும் முடிவை மீள் பரிசீலினை செய்யுமாறு கோரியதாக தெரியவருகின்றது. தங்களது அறிவிப்பினால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். மக்களிற்கு தெளிவுபடுத்தவும் கூட்டமைப்பின் ஒற்றுமையினை வலியுறுத்தவும் பிரச்சாரங்களில் கூட்டமைப்பிற்கு ஆதவாக செயற்பட அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதேவேளை, சிறீலங்கா புலனாய்வுத் துறையோடு தொடர்புடைய டான் ரீவியில் தோன்றிய சட்டத்தரணி சிறீகாந்தா அச்சுறுத்தும் பாணியில் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்த கானொளியையும் பதிவு விரைவில் வெளியிடும்.

குறிப்பாக தற்போதைய சூழலில் சம்பந்தனது வெற்றியென்பது கூட கேள்விக்குறியாகியிருப்பதாகவும் கிழக்கில் பிரதிநிதித்துவம் இழக்கப்படாலாமெனவும் சுட்டிக்காட்டியதாக தெரியவருகின்றது. குறிப்பாக கூட்டமைப்பில் போட்டியிட அனுமதி கோரிய விடுதலைப்புலிகள் முக்கியஸ்தர் ரூபனிற்கு இடம் வழங்க மறுத்திருந்த நிலையில் அவர் தற்போது பகிரங்கமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளமை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளனர்.

சுமந்திரன் - மாவை நெறிப்படுத்தலில் சி.வீ.கே சிவஞ்ஞானம் இரண்டு மாகாண அமைச்சர்களைத் தூண்டிவிட்டுள்ளார். ஏனைய ஒரு அமைச்சரை அணுகிய போது, குறித்த அமைச்சர் மறுப்புத் தெரிவித்ததோடு, முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அகற்றிவிட்டு அந்த பதவியை கைப்பற்ற சி.வி.கே சிவஞ்ஞானம் துடிப்பதாகப் பதிவு செய்தியாளருக்கு தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள முதலமைச்சர் பதவி இழப்பது பற்றி தனக்கு கவலையில்லையெனவும் மக்கள் மற்றும் புலம்பெயர் உறவுகள் தனது அறிவிப்பிற்கு பலத்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியதாக தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு இம்முறை முன்னிறுத்தி வாக்கு கோருவதற்கு ஒரு தலைவர் இன்றி அல்லாடி வருகின்றது. சம்பந்தன், சுமந்திரனை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தால் மக்கள் கவனத்திலெடுக்கமாட்டார்களென்ற அடிப்படையில் முதலமைச்சரினை முன்னிறுத்தி பிரச்சாரங்களிற்கு அனைவருமே திட்டமிட்டிருந்தனர்.

கிளிநொச்சியில் வேட்பாளரான சிறீதரன் பகிரங்கமாகவே முதலமைச்சரது படங்களை இணைத்து பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முதலமைச்சரது ஆதரவ கிடைக்காததால், சயந்தன் மற்றும் சுகிர்தனைத் தொடர்ந்து இன்று மற்றுமொரு மாகாணசபை உறுப்பினரான கஜதீபன் சுமந்திரனுக்கு ஆதரவான பிரச்சாரத்தை கைதடியில் ஆரம்பித்துள்ளார்.

No comments:

Post a Comment