August 7, 2015

இரண்டாம் தரப் பிரஜைகளாக தமிழ் மக்கள் வாழமுடியாது என்கிறார் சம்பந்தன்!

இலங்கைத்தீவில் இரண்டாம் தரப் பிரஜைகளாக எமது தமிழ் மக்கள் ஒருபோதும் வாழமுடியாது. எனவே, அனைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
வீடு சின்னத்திற்கு வாக்களித்து எமது உரிமைகளை வென்றெடுப்போம்.
– இவ்வாறு அறைகூவல் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன்.
நேற்றிரவு புதன்கிழமை திருகோணமலையில் உள்ள தனது இல்லத்தில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் பிரச்சினை தற்போது சர்வதேச மட்டத்தை அடைந்துள்ளது. ஆனால், இன்னும் தீர்வு கிட்டவில்லை. ஏறத்தாழ 65 வருடங்களாக எமது போராட்டம் தொடர்கின்றது. தந்தை செல்வாவால் பல அரசியல் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் பின் – 1985இற்குப் பின் 30 வருடங்களாக எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடி பல சாதனைகளை நிலைநாட்டினார்கள். அப்போராட்டமும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முடிவுக்கு வந்தது.
யுத்தம் முடிந்து 6 வருடங்கள் கடந்தபோதும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்கும் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறி பொறுப்புக்கூறும் விடயத்தில் இருந்து விலகி தமிழ் மக்களை நசுக்குவதிலே குறியாக இருந்தார். இந்நிலையில், 2011ஆம் ஆண்டு உலகின் வல்லரசான அமெரிக்கா சென்று அங்கு இராஜாங்க அமைச்சரை நாம் சந்தித்தோம்.
போர்க்குற்றங்கள் விடயத்தில் சர்வதேச விசாரணையை அதன் பின் சிறீலங்கா எதிர்கொண்டது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரும் ஐ.நா. விசாரணை அறிக்கை இலங்கை அரசியலில் பல அழுத்தங்களை எதிர்கொள்ளலாம். எனவே, இந்நிலையில் இந்தப் பொதுத் தேர்தல் சர்வதேச ரீதியில் அதிமுக்கியமானதாகும்.
திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர, 5 தமிழ்க் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சியினர் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள்? இவர்கள் யாரை சந்திக்கின்றார்கள்? இவர்கள் 5 வீதமான வாக்குகளைக் கூட பெறமாட்டார்கள். இவ்வாக்குகள் கூட எமக்குக் கிடைக்கவேண்டும்.
இந்த வாக்குகள் எமக்குக் கிடைப்பதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை நாம் பெறுவதுடன் போனஸ் ஆசனத்தையும் பெறமுடியும். அபிவிருத்தி என்பது தேவைதான். ஆனால், இரண்டாம் தரப் பிரஜைகளாக எமது தமிழ் மக்கள் வாழ முடியாது.
ஒருமித்த நாட்டுக்குள் இறைமை பகிர்ந்தளிக்கப்படவேண்டும். உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் காணி, பாதுகாப்பு, கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், கால்நடை வளாப்பு உட்பட சகல அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கக்கூடிய தீர்வையே நாம் கேட்டு நிற்கின்றோம் – என்றார்.

No comments:

Post a Comment