August 7, 2015

மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக புலனாய்வு பிரிவு விசாரணை!

வெள்ளை வானில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது தொடர்பாக, புலனாய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதாகவும், அது முடிந்த பின்னர், தமது விசாரணை அறிக்கையை வெளியிடுவோம் என்றும் சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுதொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

“மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தொடர்பாக சிறிலங்கா இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

புலனாய்வுப் பிரிவின் விசாரணை முடிந்ததும் அந்த அறிக்கையைப் பெற்று ஆராய்வோம். அதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தின்  இறுதி அறிக்கை வெளியிடப்படும்.

சிறிலங்கா கடற்படையினர், சிறிய படகுகளைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பயன்படுத்த வேண்டாமென அறிவுறுத்தப்படவில்லை. கடற்படையினர் 24 மணிநேரமும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், சிறிய துப்பாக்கியால் செய்ய வேண்டிய விடயத்தை பெரிய துப்பாக்கியால் செய்ய வேண்டிய அவசியமில்லை.

மேலும், சிறிலங்கா இராணுவத்தினரை தனித்து எங்கும் செல்ல வேண்டாம் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

ஆயினும், இராணுவத்தினர் எங்கும் தனித்து பயணிக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் மூன்று பேர் இணைந்தே பயணிப்பார்கள்.

ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட கடத்தலில், இரண்டு இராணுவ கேணல்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி எந்தவிதமான தகவலும் எமக்கு வரவில்லை.

அவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் குற்றவியல் சட்டத்தின் கீழ் அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment