June 9, 2015

பிரித்தானியாவில் தென் ஆபிரிக்கா நாட்டின் அரசியல் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் (ICET) விளக்க அறிக்கை!

தங்களின் சுயநலன் கருதாது, ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்தும், எங்களை இன அழிப்பில் இருந்து காப்பாற்றுவதோடு எங்களின் குறிக்கோளை அடைய உதவ சர்வதேச நாடுகள் எவை முன் வந்தாலும் நாம் அதை வரவேற்கிறோம்.

அந்த வகையில் சென்ற மே மாதம் 25ந் திகதி இலண்டனில் தென் ஆபிரிக்கா நாட்டின் உத்தியோகபூர்வமான அழைப்பின் பேரில் அவர்களது அரசியல்  குழுவுடன் நடைபெற்ற சந்திப்பில் 14 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழத்தமிழர் மக்கள் அவையின் 5 பிரதிநிதிகள் 2 மதியுரைஞர்  அடகங்கலாகக் கலந்துகொன்டனர்.

அத்தோடு இந்த சந்திப்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் அமெரிக்க தமிழர் அரசியற் செயலவை ஆகிய அமைப்புக்களும் கலந்துகொண்டன. அதே தினம், உலகத் தமிழர் பேரவை எனும் இரு அமைப்புகளின்    பிரதிநித்துவத்தையும், தனி நபர்களையும் கொண்ட அமைப்பு தனியாக தென் ஆபிரிக்கா நாட்டின் அரசியல் குழுவுடன் சந்திப்பொன்றை நடாத்தியது என அறிகிறோம்.

எமது இச் சந்திப்பானது ஒரு பேச்சுவார்த்தை நிகழ்வாக அல்லாது ஒரு பிராரம்ப உசாவல் ஆகவே கருதப்படல்வேண்டும். அதாவது மிக மிக ஆரம்பத்தில் அமையும் ஒரு கருத்துப் பரிமாற்றமே.

இச் சந்திப்பில் தென் ஆபிரிக்கா நாடு தாம் வரலாறில் எதிர்கொண்ட அடக்குமுறைகளையும், அதிலிருந்து விடுதலை அடைந்த அனுபவத்தையும் ஈழத்தமிழர் ஆன எம்முடன் பகிர்ந்துகொண்ட அடிப்படையில் இலங்கை இனப்பிரச்சனைக்கும் உள்நாட்டு பொறிமுறை ஊடாக அரசியல் தீர்வொன்றினை காணமுடியும் என்று அவர்கள் நம்புவது எமக்கு விளங்கியது.

இருப்பினும்  கலந்து கொண்ட எமது பிரதிநிதிகள் தென் ஆபிரிக்கா எதிர்கொண்ட நிறவெறி இனஒடுக்குமுறைக்கும் தமிழீழ மக்கள் எதிர்கொள்ளும் இன அழிப்புக்கும், மற்றும் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தேடிக்கொண்ட இறையாண்மை சார்ந்த தேசிய இனப்பிரச்சனைக்கும் நீண்ட, நெடிய வேறுபாடுகள் இருக்கின்றன என்று தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. 

அத்தோடு அனைத்துலக ஈழத்தமிழர் அவையாகிய நாம் ஆறு தசாப்தங்களாக ஈழத்தமிழர்களுடன் சிங்கள அரசியல் தலைமைகள் செய்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டதன் அடிப்படையில் சிங்கள பேரினவாத அரசோடு ஒரு உள்நாட்டு பொறிமுறை ஊடாக அரசியல் தீர்வொன்றினை காண முடியாது என்பதை மீள்வலியுறித்தினோம்.

இலங்கைத் தீவில் உள்நாட்டு பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்ட அனைத்து நகர்வுகளையும் 65 வருடங்களுக்கும் மேலாக சிங்கள பேரினவாத அரசு ஈழத்தமிழர்கள் மீது ஒரு கட்டமைப்புசார் இனஅழிப்பை அவிழ்த்து விடுவதற்கு வாய்ப்பாக பயன்படுத்தியது-பயன்படுத்தி வருகிறது.

மேற்கூறிய நிலைப்பாட்டுடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை ஒரு சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளலாமா என யோசிப்பதற்கு முன்நிபந்தனைகளாக தமிழர் தாயகத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு கீழ்க்காணும் விடயங்களை ஏற்று உடனடியாக நடைமுறைப்படுத்தல்வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வடமாகாண  சபையின் இன அழிப்பு தீர்மானத்தை கவனத்தில் எடுத்தல், தமிழின அழிப்புக்கான அனைத்துலக சுயாதீன விசாரணை,தமிழர் தாயகத்தில் இருந்து உடனடியாக அரச படைகளை வெளியேற்றல்,தமிழர் நிலங்களை உடனடியாக உரியவர்களுக்கு திருப்பிக்கொடுத்தல். அரசியல் யாப்பின் 6ஆம் திருத்தத்தினை அகற்றல், பயகரவாத தடைச்சட்டத்தினை அகற்றுதல், போர்க்கைதிகளையும் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்தல், ஆகியவற்றை உள்ளடக்கிய 17 முன் நிபந்தனைகள். அத்தோடு ஒரு நிரந்தர அரசியற் தீர்வு என்பது வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தாயகத்திலும், புலத்திலும், தமிழ் நாட்டில் வதியும் ஏதிலிகளிடையேயும் சர்வசன வாக்கெடுப்பு மூலமே நிறுவப்படவேண்டும் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.

இச் சந்திப்பு சார்ந்து பலதரப்பட்ட செய்திகள் வதந்திகளாக பரவிவரும் நிலையில் புலம் பெயர் தமிழரின் பிரதிநிதிகளாக அவர்களின் வேணவாவை மட்டுமே எமது அடிப்படையாகக்கொண்டு வெளிப்படைத்தன்மையுடன் நாம் செயல்படுவதை உறுதியளிக்கும்வகையில் இவ்வூடக அறிக்கையை வெளியிடுகிறோம். 

No comments:

Post a Comment