June 9, 2015

தலைவர் பிரபாகரனின் படங்கள், உருவச்சிலைகளை பொலிஸார் கைப்பற்றி இருப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் - பழ.நெடுமாறன்!

தமிழகத்தின் பல ஊர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் படங்கள், உருவச்சிலைகளை பொலிஸார் கைப்பற்றி இருப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல் என உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கண்டித்துள்ளார்.

தஞ்சையில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு 8-வது மாநாடு உலகத்தமிழர் வாழ்வுரிமை மாநாடாக வருகிற 14ம் திகதி நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. இதில் கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு, நிறைவரங்கம் போன்றவை நடைபெறுகிறது.

இதில் பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.   வடக்கு மாகாண குழு உறுப்பினர் ஆனந்தி அந்த நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனது கணவரும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருமான எழிலன் என்ற சசிதரன் 2009-ம் ஆண்டில் போர் நெருக்கடி நிகழ்ந்த காலத்தில் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

கனிமொழியின் ஆலோசனையின் பேரில் எழிலனும், அவருடன் பலரும் சரண் அடைந்தனர். ஆனால் அவர்களைப்பற்றி எந்த தகவலும் எங்களுக்கு தெரியவில்லை. இது தொடர்பாக கனிமொழியை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்தும் முடியவில்லை என கூறி உள்ளார். இதற்கு கனிமொழி சார்பில் தி.மு.க.வினர் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அளித்துள்ள பதில் வேடிக்கையாக இருக்கிறது.

விடுதலைப்புலிகளை சரணடையுமாறு யாரும் ஆலோசனைக் கூறவில்லை என்றும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இந்திய அரவை வற்புறுத்தி வந்த நிலையில் அது நிறைவேறாமல் போனபோது, விடுதலைப் புலிகளை எப்படி சரணடைய சொல்வோம். புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தாங்களாகவே முடிவு எடுப்பார்களே தவிர, வெளியாட்களின் ஆலோசனைகளை கேட்க மாட்டார்கள் என்பதை அந்த இயக்கத்தை பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் இலங்கை போர் முடிந்த பிறகு 2011-ம் ஆண்டில் எங்கள் மீது கனிமொழி பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் எங்களிடம் ஆலோசனை கேட்ட போது ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு சரணடையுமாறு கூறிய போது நெடுமாறனும், வைகோவும் சரணடைய வேண்டாம் என்றும், போரை தொடருங்கள் எனவும் அவர்களுக்கு தவறான வழிகாட்டுவதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை இப்போது இளங்கோவனே மறுத்திருப்பது விசித்திரமாக உள்ளது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதை சிறிசேனவின் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வருகிறது. எனவே சிறிசேனவை சர்வதேச நாடுகள் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஊர்களில் பிரபாகரனின் படங்கள், உருவச்சிலைகளை பொலிஸார் கைப்பற்றி இருப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல். அரசியல் சட்டம் வழங்கி உள்ள உரிமைகளை பறிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அரசு தனது போக்கை திருத்திக்கொள்ளாவிட்டால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கவில்லை என இல.கணேசன் கூறியிருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். இதுவரை தமிழக மீனவர்களை, இலங்கை மீனவர்கள் தாக்கவில்லை. இலங்கை கடற்படை தான் தாக்கி உள்ளது. அதை தடுத்து தமிழக மீனவர்களை காப்பாற்ற இந்திய கடற்படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment