June 7, 2015

கருணாகுழு விவகாரம்: டெய்லிமிரர் ஆசிரியரை மிரட்டிய கோத்தபாய!

கிழக்கு மாகாணத்தில் கருணா குழுவினரின் செயற்பாடுகளை அம்பலப்படுத்திய டெய்லிமிரர் பத்திரிகை ஆசிரியரை, அப்போதைய பாதகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அச்சுறுத்தியது அம்பலமாகியுள்ளது. விக்கிலீக்ஸ் தகவல்களின் மூலம் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கருணாகுழு தம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை, அப்படியொரு ஆயுதக்குழுவே இல்லையென இலங்கையரசு அடித்துக் கூறி வந்த நிலையில், அதுபற்றிய வலுவான ஆதாரங்களை 2007 ஆம் ஆண்டு டெய்லி மிரர் பத்திரிகை வெளியிட்டது. அதுபற்றிய தகவல்களை தொடர்ச்சியாக அந்தக்காலப்பகுதியில் வெளியிட்டு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கோத்தபாய ராஜபக்ச, அந்த பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க லியநாராச்சியை தொடர்புகொண்டு மிரட்டியமை விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இருந்து தெரியவந்திருக்கிறது. கருணாகுழுவே அவரை கொல்லுமென கோத்தபாய மிரட்டியுள்ளார்.
கோதபாயவின் அச்சுறுத்தலையடுத்து, கருணாவை லியனாராச்சி தொடர்பு கொண்டுள்ளார். லியனாராச்சியுடன் பேசிய கருணா, தனது உறுப்பினர்கள் அவருக்கு எந்த கெடுதலையும் செய்யமாட்டார்கள் என்று உறுதியளித்ததாகவும் தெரியவருகிறது.
இதேவளை, இந்த சம்பவம் குறித்து அப்போதைய ஜனாதிபதி மகிந்தவும் அறிந்து வைத்திருக்கிறார். அவர் லியனாரச்சியிடம் வருத்தம் தெரிவித்ததுடன், அவரது பாதுகாப்பு குறித்த கவனமாக இருக்குமாறும் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பில் லியனாராச்சியை தொடர்பு கொண்டதை கோதபாய பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அவரை தான் அச்சுறுத்தவில்லை என்று கூறியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment