யாழ்.மாவட்டத்தில் நாளுக்கு நாள் பல்வேறு கோணங்களில் அதிகரித்துச் செல்லும் குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த இரகசிய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என்று யாழ்.வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம் வலியுறுத்தி உள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(05.5.2015) இடம்பெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்ய மக்கள் அஞ்சுகின்றனர்.காரணம் பொலிஸ் நிலையத்திலிருந்து குற்றவாளிகளுக்குத் தகவல்கள் செல்லுகின்றமையே.ஆனால் குற்றச் செயல் நடைபெற்றால் அந்தக் கிராம மட்டங்களிலுள்ள அமைப்புக்களுக்கு அங்கு என்ன நடைபெற்றது என்ற தகவல்களெல்லாம் தெரிந்திருக்கும்.அதே போன்று போதைப் பொருள்,வாள்வெட்டுக் கும்பல் தொடர்பான தகவல்களும் தெரிந்திருக்கும்.எனவே அவர்களுடைய தகவல்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்கான பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அமைக்கப்படும் குழு நடவடிக்கை எடுக்கும் போது அந்தப் பகுதிப் பொலிஸ் நிலையத்துக்குத் தெரியாமல் நடவடிக்கை எடுக்கக் கூடிய அதிகாரத்தினை வழங்க வேண்டும்.
இவ்வாறான இரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே அதிகரிக்கும் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment