May 26, 2015

தேசிய ரீதியில் கிளிநொச்சி பாடசாலை மாணவி டென்சிகா முதலிடம்! பழைய மாணவர் சங்கம் வாழ்த்து!

இலங்கையில் பியகமவில் நடைபெற்ற தேசிய மட்ட மாணவர்களுக்கிடையிலான மெய்வன்மை போட்டியில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
தேவதாஸ் டென்சிகா 15 வயது பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில்
முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
அதேவேளை பளை மத்திய கல்லூரியில் இருந்து தேசிய மட்டப் போட்டியில் 20 வயது பிரிவில் உயரம் பாய்தலில் மூன்றாம் இடத்தை பெற்ற மாணவி சுகிர்தாவுக்கும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
பழைய  மாணவர் சங்கம் சார்பாக அதன் செயலாளர் பொன்.காந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்
போரினால் பாதிக்கப்பட்டு ஏழ்மையும் வறுமையுமாய் விரியும் எமது கிராமங்களில் ஒன்றான இரத்தினபுரம் கிராமத்தை சேர்ந்த எமது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவச்செல்வம் தேவதாஸ் டென்சிகா இலங்கையின் மாணவர்களுக்கிடையிலான தேசிய மட்டப் போட்டியொன்றில் முதலிடம் பெற்றிருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது.
இந்த வெற்றியின் மூலம் மாணவி டென்சிகா எமது பாடசாலையையும் ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்தையும் பெருமை கொள்ள வைத்திருக்கின்றார். அத்துடன் இரத்தினபுரம் என்ற ஒரு சிறிய கிராமத்தை தன் வெற்றியால் அழகுபடுத்தியிருக்கின்றார்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பது போல டென்சிகாவின் தந்தையார் தேவதாஸ் (சின்னவன்) சிறந்த உதைபந்தாட்ட வீரர் ஆயினும் விபத்தொன்றின் காரணமாக அவர் விளையாட முடியாதவராகிவிட்டார்.
தன் விளையாட்டு கனவை தன் பிள்ளைகள் மூலம் அவர் காணமுனைவதன் அடையாளமே டென்சிகா. ஏழ்மையான குடும்பத்தின் நட்சத்திரமாக இப்பொழுது டென்சிகா சாதித்திருக்கின்றாள்.
டென்சிகாவின் சாதனையின் பின்னிருக்கும் பயிற்சியாளர் நடராஜலிங்கம் முகுந்தனுக்கும் பாடசாலையின் அதிபர் ரவீந்திரனுக்கும் அதுபோல மாணவி சுகிர்தாவை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் கமலமோகனுக்கும் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க நிர்வாகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
எமது அன்புக்குரிய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று உலகெலாம் பரந்திருக்கும் பழைய மாணவர்களே மற்றும் சமுக ஆர்வலர்களே! மாணவி டென்சிகாவை இன்னும்  மேலும் சிறந்ததொரு சாதனையாளராக மாற்றவேண்டுமாயின் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் எல்லோருக்கும் உண்டு. அவருக்கு பயிற்சிக்கும் போட்டிக்குமான விலையுயர்ந்த சப்பாத்துக்கள் துறைக்கான ஆடைகள் போஷாக்கான உணவு என்பன அவசியம் என்பதால் அவற்றை பெற்றுக்கொள்வதற்கான அனுசரணைகளை வழங்க வேண்டியது எமது கடமையென்பதையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம்.

No comments:

Post a Comment