April 24, 2015

வட பிராந்திய இ.போ.சபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ( படங்கள் இணைப்பு)

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய அலுவலகம் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என இரு தனித்தனியான அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளமையினை கண்டித்து இன்றைய தினம் யாழ்.பேருந்து
நிலையத்தில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மதியம் 12 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேவை பகிஸ்கரிப்பு போராட்டத்தினால் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்க தொடங்கினார்கள்.
அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், அ பரம்சோதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுக்களை நடாத்தினார்கள்.
ஒரு வார கால அவகாசம் தருமாறும், அதற்குள் பிரதமருடன் இது தொடர்பில் எடுத்து கூறி வட பிராந்தியத்தை இரண்டாக பிரிக்க விடாது தடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உறுதி அளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி மொழியை அடுத்து அனைவரும் தமது போராட்டத்தை கைவிட்டனர். 
ஒரு வார காலத்திற்குள் தீர்வு கிடைக்க பெறாவிடின் தொடர் போராட்டத்தில் குதிப்போம் என தெரிவித்து 1 மணி நேர போராட்டத்தினை கைவிட்டு சேவையில் ஈடுபட்டனர்.
வடமாகாண போக்குவரத்து சபை இரண்டாக பிரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு கேதீஸ் முகாமையாளராகவும், வன்னிக்கு அஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய 7 சாலைகளை கொண்ட வட பிராந்தியத்தில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர், கிளிநொச்சி ஆகியவற்றை யாழ். பிராந்தியமாகவும் மன்னார் வவுனியா, முல்லைத்தீவு ஆகியன கொண்ட வன்னி பிராந்தியமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment