April 20, 2015

கனடாவில் போதையின் உச்சத்தில்!

குளிர்நிறைந்த மார்ச் மாதத்தின் நள்ளிரவுப் பொழுதில் போதை தலைக்கேறிய நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுவதும், அதனை தடுக்க முனைந்த தமிழ் யுவதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தரையில் வீழ்த்துவதுமான ஒளிப்பதிவு ஒன்றை பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் அண்மையில் கிட்டியது.

ஸ்காபுரோவில் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் அரங்கேறிய இந்தக் கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளின் ஒளிப்பதிவு அன்று காலை 9 மணியளவில் எனது பார்வைக்கு வந்தது. காவல்துறையினரின் இந்தக் கைதுகளை எதிர்க்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர் மற்றும் யுவதிகள் காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்புவதையும் இந்த ஒளிநாடா பதிவு செய்திருந்தது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான ரொறன்ரோ காவல்துறையினரின் கண்மூடித்தனமான நடவடிக்கையா என்ற கேள்வியுடன் இந்த ஒளிப்பதிவு குறித்த விபரங்களை திரட்ட முனைந்தேன். இந்தத் தேடலின் நடுவில் காத்திருந்தது எனக்கான அதிர்ச்சியின் ஆரம்பம்.
இணையத்துக்காக இலங்கதாஸ் பத்மநாதன்
SAAAC (South Asian Autism Awareness Centre) எனப்படும் தெற்காசிய மதியிறுக்க விழிப்புணர்வு மையம் மார்ச் மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை மாலை நிதிசேகரிப்பு நிகழ்வொன்றை (Radiant Night 2015) நடத்தியிருந்தது. SAAAC வருடாந்தம் நடத்தும் நிதிசேகரிப்பு நிகழ்வின் ஆறாவது வருட நிகழ்வு இதுவாகும். மதியிறுக்க விழிப்புணர்வை மையமாகக் கொண்டு அதற்கான செயற்பாடுகளுக்கு நிதிசேகரிப்பதே இந்த இரவு விருந்து மற்றும் நடன நிகழ்வின் குறிக்கோளாகும். இதுபோன்ற நிதிசேர் நிகழ்வுகள் பல்வேறு அமைப்புக்களினாலும் (தமிழ் உட்பட) முன்னெடுக்கப்படுவது வழமையானதொன்றாகும்.
இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய சென்சர் செய்யப்பட்ட ஒளிபதிவின் ஒரு பகுதி
பதில் இல்லாத கேள்விகள் . . . .
தெற்காசிய மதியிறுக்க விழிப்புணர்வு மையத்தின் Radiant Night நிதிசேகரிப்பு நிகழ்வின் ஒளிப்பதிவை முழுமையாகப் பார்வையிட்ட பின்னர் மனதில் பல கேள்விகள் எழுந்தன. SAAAC முன்னைய வருடங்களில் நடத்திய நிதிசேகரிப்பு நிகழ்வுகளின் ஒளிப்பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் தகவல்களைச் சேகரித்தபோது அதிர்ச்சிகரமான காட்சி கண்முன் விரிந்தது.
மதுவின் மயக்கத்திலும் போதைவஸ்தின் உச்சத்திலும் கடும் குளிரின் மத்தியிலும் நிலை தடுமாறி நிற்கும் தமிழ் இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை இந்த நிதிசேர் நிகழ்வில் வருடங்கள் செல்லச் செல்ல அதிகரித்து வருகின்றதை புகைப்படங்கள், ஒளிப்பதிவுகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களின் வாக்குமூலங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவை தவிர மண்டபத்தின் உள்ளேயும், மண்டப வாகனத் தரிப்பிடத்தில் தரித்து நிற்கும் வாகனங்களிலும் அரங்கேறும் ‘காட்சிகள்’ அனைவருமே வெட்கித் தலைகுனியும் வகையில் அமைந்தவை.
இவை அனைத்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத் தெரியாமல் இந்த வருடம் மாத்திரம் நடைபெற்றவையல்ல. கடந்த சில வருடங்களாக இதுபோன்ற நிலையே இந்த நிதிசேகரிப்பு நிகழ்வு நடைபெற்ற மண்டபங்களில் அரங்கேறியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக நிகழ்வு முடிவடைந்த பின்னர் அதிகரித்துச் செல்லும் மதுபோதையின் பாவனை மற்றும் இளைஞர் யுவதிகளின் நடவடிக்கை குறித்து சில ஊடகவியலாளர்கள், தொண்டர்கள் மற்றும் அனுசரணையாளர்களினால் தெற்காசிய மதியிறுக்க விழிப்புணர்வு மையத்தின் நிர்வாகிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் SAAAC நிர்வாகிகள் தொடர்ந்து வந்த வருடங்களில் இதனைத் தடுப்பதற்கான (அல்லது கட்டுப்படுத்துவதற்கான) நடவடிக்கைகள் எதனையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக இந்த விடயம் குறித்து பாராமுகமாக நடந்துகொண்டதன் விளைவு இன்று வெளிவர ஆரம்பித்துள்ள பல ஒளிப்பதிவுக் காட்சி SAAAC மீது பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.
சமூக அமைப்பொன்றின் நிதிசேகரிப்பு நிகழ்வொன்றில் வெளிப்படையான கேள்விக்குரிய பல சமூக சீர்கேடுகள் அரங்கேறுவதை ஏன் அந்த அமைப்பு கண்டும் காணாத நிலையில் கையாளுகின்றது என்பது இதில் பிரதான கேள்வியாகும். இதன் பின்னணி என்ன என்பதை ஆராய்வதை தவிர்த்து இதுபோன்று இனியும் தொடராமல் இருப்பதற்கு SAAAC மீது அக்கறை கொண்டவர்கள் அழுத்தம் பிரயோகிக்க வேண்டியது அவசியமாகும்.
ரொறன்ரோவில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் மத்தியில் இந்த நிகிசேகரிப்பு நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதை பலரிடம் பேசும்போது உணரமுடிந்தது. இந்த வருட நிதிசேகரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் யுவதிகள் சிலரிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த நிதிசேகரிப்பை ஒரு இரவு களியாட்ட நிகழ்வாகவே அவர்கள் நோக்குகின்றனர். இதனை சாதகமாக்கி SAAAC தனது திட்டங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியைச் சேகரிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு ஆரம்பமாகி இந்த வருடம் வரை நடைபெற்ற ஆறு நிதிசேகரிப்பு நிகழ்வுகளில் வருடாந்தம் சேகரிக்கப்படும் நிதியின் தொகை அதிகரித்துச் சென்றுள்ளது. 2010ஆம் ஆண்டு தனது முதலாவது நிதிசேகரிப்பு நிகழ்வில் 25,000 டொலர்களை மாத்திரம் சேகரித்த SAAAC ஒரு கட்டத்தில் நிதிசேகரிப்பு நிகழ்வு மூலம் மாத்திரம் 200,000 டொலர்கள் வரை சேகரித்துள்ளது. வருடாந்தம் சேகரிக்கப்படும் நிதியின் தொகை அதிகரிக்கின்றது என்பதற்காக அங்கு நடைபெறும் சீர்கேடுகளுக்கு SAAAC நிர்வாகம் புறமுதுகு காட்டுகின்றதா என்ற கேள்வி தவிர்க்கமுடியாததொன்றாகும்.
Radiant Night Gala 2015 நிதிசேகரிப்பு நிகழ்வில் கடந்த வருடமும் இந்த வருடமும் காவல்துறையினரால் கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வருடம் நடைபெற்ற நிகழ்வில் 15 பாதுகாப்பு அதிகாரிகளும் இரண்டு காவல்துறை அதிகாரிகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் கட்டணம் செலுத்தப்பட்டு கடமையில் ஈடுபடுத்தப்பட்டதை ஏற்பாட்டாளர்களே உறுதிப்படுத்தினார்கள். ஒரு சமூக அமைப்பின் நிதிசேகரிப்பு நிகழ்வுக்கு காவல்துறை அதிகாரிகள் இருவர் உட்பட மொத்தம் 17 பாதுகாவலர்களின் அவசியம் என்ன? 17 பாதுகாவலர்களின் தேவை இருந்ததை உணர்ந்த SAAAC நிர்வாகம் அதற்கான காரணம் என்ன என்பதை ஏன் உணரவில்லை? அந்தக் காரணத்தை கண்டறிந்து ஏன் அது தொடராமல் தடுக்கவில்லை?
கடந்த வருடங்களில் இந்த நிதிசேகரிப்பு நிகழ்வுக்கான அனுசரணை வழங்கிய நிறுவனங்கள் சில இந்த வருடம் தமது ஆதரவை வழங்கவில்லை. நிதிசேகரிப்பு நிகழ்வில் மேற்கொள்ளப்படும் அதிகரித்த மதுபான விற்பனை மற்றும் அதனுடன் தொடர்புடைய சீர்கேடான நடவடிக்கைகள் குறித்து SAAAC தொடர்ந்தும் மௌனம் காத்துவருவதான குற்றச்சாட்டு இவர்களிடம் உள்ளது.. கடந்த வருட அனுசரணையாளர்களுடன் கலந்துரையாடும்போது இதனைத் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. இந்த அனுசரணையாளர்களில் பலரும் தமது அதிருப்தியை SAAAC நிர்வாகிகளிடம் ஏற்கனவே பகிர்ந்துகொண்டுள்ளதாக எமது உரையாடலின்போது உறுதிப்படுத்தினர். இவர்களின் அதிருப்தியின்மை ஏன் SAAAC நிர்வாகிகளினால் கருத்தில் கொள்ளப்படவில்லை?
SAAAC தந்த பதில்கள் . . .
கேள்விகள் பலவற்றுடன் தெற்காசிய மதியிறுக்க விழிப்புணர்வு மையத்தின் இயக்குனர் கீதா மூர்த்தியை சந்தித்தோம். தமது நிதிசேகரிப்பு நிகழ்வில் அதிகளவில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதற்கு மண்டப உரிமையாளர்களே பொறுப்பு என்ற பரந்துபட்ட குற்றச்சாட்டுடன் அவருடனான கலந்துரையாடல் ஆரம்பமானது. SAAAC நிர்வாகம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டாமா என்ற கேள்விக்கு ‘எதிர்வரும் காலங்களில் இந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படும்’ என்ற உறுதிப்பாட்டை கீதா மூர்த்தி வழங்கினார். எமது உரையாடலின்போது இந்த விடயம் ஏற்கனவே தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதை அவர் ஏற்றுக்கொண்டாலும், இதற்கான பொறுப்பை SAAAC முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற தனது பதிலில் உறுதியாக இருந்தார்.
தமது நிதிசேகரிப்பு நிகழ்வுக்காக எவரையும் தாங்கள் விருந்தினர்களாக அழைப்பதில்லை எனவும், அங்கு சமூகமளிக்கும் சிலரது நடவடிக்கைகளுக்கு SAAAC பொறுப்பாளியாகமுடியாது எனவும் அவர் கூறியது நொண்டிச் சாட்டாகவே தோன்றியது. மதியிறுக்க விழிப்புணர்வுக்கான நிதிசேகரிப்பில் மதுபானம் விற்பனை செய்யப்படவேண்டுமா இல்லையா என்பது உட்பட அங்கு நடைபெறும் அனைத்து விடயங்களுக்கும் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் நிதிசேகரிப்பு நிகழ்வின் ஏற்பாட்டாளரான SAAAC பொறுப்பாளி என்பதுதான் உண்மை. ஓன்ராரியோ மாகாணத்தில் பொதுநிகழ்வு (நிதிசேகரிப்பு உட்பட) மதுபான விற்பனை குறித்த சட்டமும் இதனையே உறுதிப்படுத்துகின்றது. Radiant Night Gala 2015 நிதிசேகரிப்பு நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பும் வழியில் ஒருவர் மதுபோதையில் வாகனம் செலுத்திச் சென்று விபத்துக்குள்ளானால் அதனால் ஏற்படும் இழப்புக்களுக்கு அந்த நிகழ்வை நடத்திய SAAAC அமைப்பு பொறுப்பேற்கவேண்டும். இந்த நிலையை SAAAC ஏற்றுக்கொண்டு பொறுப்பான முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்பு நியாயமானதே.
மதியிறுக்கம் குறித்த விழிப்புணர்வு இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு அவசியமானதொன்றாகும். இருந்தபோதிலும் ஒரு முழு சமுதாயத்தின் மீதும் கேள்விக்கணைகளை வீசும் வகையில் அதற்காக நிதிசேகரிப்பு நிகழ்வுகள் வடிவமைக்கப்படக்கூடாது. இந்த விடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறின், எதிர்வரும் காலங்களில் இளைஞர் யுவதிகளை குடிபோதையில் ‘மிதக்கவிடுவதே’ நிதிசேகரிப்பின் இரகசியம் என பலரும் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவதற்கு SAAAC தவறான ஒரு உதாரணமாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.
மதுபோதையும், கொண்டாட்டமும். குதூகலமும் மாத்திரம் நிதிசேகரிப்பு நிகழ்வின் தூண்டுகோள்களாக இருப்பது தவறு. தாம் கலந்துகொள்ளும் நிகழ்வின் பின்னணி என்ன? வழங்கும் நிதி யாரைச் சென்றடைகின்றது? அதன் மூலம் உதவிபெறுபவர்கள் யார்? போன்ற கேள்விகளுக்கான தெளிவு நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு இருக்கவேண்டும். இந்தத் தெளிவு தமது நிதிசேகரிப்பு நிகழ்வில் கலந்துகொள்ளும் இளைஞர் யுவதிகளில் பலருக்கும் இல்லை என்பதை கீதா மூர்த்தி எம்முடனான உரையாடலின்போது சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தில் தெளிவு இல்லாதவர்களுக்கு சரியான வகையில் பதில்களும், விளக்கங்களும், தகவல்களும் வழங்கப்படவேண்டும். இதில் ஊடகங்களின் பொறுப்பும் பங்கும் மிகப்பெரியது.
SAAAC என்றால் என்ன?
2008ஆம் ஆண்டு இரண்டு குடும்பங்களுடன் ஆரம்பமான SAAAC குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதை மறுக்கமுடியாது. தற்போது ஜந்து மொழிபேசும் 120க்கும் அதிகமான குடும்பங்களுக்கு SAAAC தனது சேவையை வழங்குகின்றது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் இலவச மற்றும் கட்டணம் செலுத்தப்படும் சேவைகள் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. எட்டு முழுநேர ஊழியர்கள் ஜந்து பகுதிநேர ஊழியர்கள் உட்பட நூறுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் SAAAC அமைப்பின் சேவைகளை வழங்க உறுதுணையாகவுள்ளனர். தெற்காசிய சமூகத்தில் இருந்து இதுபோன்றதொரு சேவை நிறுவனம் உருப்பெற்றுள்ளமை மகிழ்ச்சியானதும் வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். கீதா மூர்த்தி மற்றும் அவருடன் இணைந்துள்ள பலரும் மதியிறுக்க விழிப்புணர்வு என்பதை தமது வாழ்நாள் திட்டமாகக் கொண்டுள்ளார்கள் என்பதும் அதற்காகவே முழு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள் என்பதும் அவர்களுடன் உரையாடும்போது புலனாகின்றது.
SAAAC போன்ற அமைப்புக்களின் சேவை எந்தக் காலகட்டத்திலும் அவசியமானது. அவர்கள் தமது சேவையை தடங்கலின்றி வழங்குவதற்கு நிதி அவசியமாகின்றது. இதுபோன்ற நிகழ்வுகள் மூலமே தேவையான நிதியை ஒரே நேரத்தில் சேகரிப்பது சாத்தியமாகின்றது. ஆனாலும் இந்த அவசியங்களையும் சாத்தியங்களையும் காரணமாக்கி ஒரு சமூதாயத்தையே தவறான வழியில் இட்டுச் செல்வதை ஏற்றுக்கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது.
SAAAC தனது நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு இதுபோன்ற சம்பவங்களுக்கும் விமர்சனங்களுக்கும் இடம்கொடுக்காமல் தன்னை சமுதாயத்தோடு இணைத்து சமுதாயத்தைக் கண்டியெழுப்புகின்ற ஒரு அமைப்பாக மாறவேண்டும். சமுதாயத்தினால் தானும் வளர்ந்து அதேவேளை சரியான தனது வழிநடத்தலினால் சமுதாயத்தையும் வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பில் SAAAC போன்ற அமைப்புக்கள் உள்ளன. கடந்த சில வருடங்களாக நிதிசேர் நிகழ்வுகளில் ஏற்பட்ட தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை SAAAC உறுதிப்படுத்த வேண்டும். இதில் தவறுமாயின் சமுகத்தினால் SAAAC தனிமைப்படுத்தப்பட்டு கைவிடப்படும் அபாயம் உள்ளது.
இந்தச் சவாலுக்கு SAAAC தயாரா?



SAAAC_2015

No comments:

Post a Comment