April 20, 2015

அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் வழியில் சென்று தமிழீழ விடுதலையை வென்றெடுப்போம் - தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி!

எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துகொள்கிறோம்.தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவத்திற்கு எதிராக 31 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 27வது நினைவு நாள் (19.04.2015).


அமைதியை காக்கவென தமிழீழத்திற்கு வந்திருந்த இந்தியபடைகளின் அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் அறவழியில் போராட்டங்களை நடாத்தி கொண்டிருந்த காலப்பகுதியில் மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னனி உண்ணாவிரத போராட்டங்களை நடாத்த முடிவெடுத்தனர்.

1988ம் ஆண்டு பெப்ரவரி 16ம் திகதி *இந்திய அமைதிப்படை ஈழத்தில் நடத்தும் போர் நிறுத்தப்பட வேண்டும். *விடுதலைப்புலிகளுடன் பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும். எனும் கோரிக்கைகளை முன் வைத்து அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மா டேவிட் அவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

அவ்வேளையில் தான் பத்து பிள்ளைகளின் தாயான பூபதி கணபதிப்பிள்ளை (அன்னை பூபதி) அவர்கள் தாமாகவே முன் வந்து 1988 மார்ச் 19 அன்று உண்ணாநோன்புப் போராட்டத்தை தொடங்கினார். அவர் உண்ணாநோன்புப் போராட்டத்தை தொடங்கும் போதே “சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது” என கடிதம் எழுதி வைத்திருந்தார். இந்திய இராணுவத்தினரால் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும் கைது செய்த போதிலும் போராட்டத்தை நிறுத்தாமல்உறுதியுடன் உண்ணாநோன்பை தொடர்ந்தார்.

போராட்ட கோரிக்கைகள் எதுவும் இந்திய இராணுவத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் நீர் மட்டுமே அருந்தி 31 நாட்கள் உண்ணாநோன்பை மேற்கொண்டு வந்த அன்னை பூபதி 1988 ஏப்ரல் 19 அன்று 56 வயதில் மட்டக்களப்பில் உயிர்நீத்தார். அன்னை பூபதி அவர்களின் நினைவு நாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாளாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தமிழீழ மண்னையும், தமிழீழ விடுதலையையும் நேசித்த அன்னை பூபதி மற்றும் நாட்டுப்பற்றாளர்களுக்கு தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தமது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. அத்துடன் அவர்களின் வழியில் சென்று அவர்களின் கனவுகனளயும், இலட்சியங்களையும் வென்றெடுப்போம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறது.

நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

No comments:

Post a Comment