April 22, 2015

வருகின்றது சிவாஜியின் அடுத்த பிரேரணை!

இனப்பிரச்சினைக்குத்தீர்வு காண சர்வதேச சமூகத்தையும், ஐக்கிய நாடுகள் சபையையும் அழைக்கவேண்டும்" என்ற பிரேரணையை எதிர்வரும் 30 ஆம் திகதி அமர்வில் எடுத்துக்கொள்ளக்கோரி வடக்குமாகாண சபைக்கு அனுப்பிவைத்துள்ளார் கூட்டமைப்பு சார்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

கடந்த வருடம் மே மாதம் குறித்த பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும் சில விடயங்களை நீக்கும் பொருட்டு அந்தப்பிரேரணை சபை அமர்வில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் அதன் திருத்திய வடிவத்தை மீண்டும் சபைக்கு சமர்ப்பித்துள்ளார் சிவாஜிலிங்கம்.

இதுகுறித்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் அவர் செவ்வாய்க்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடத்தினார். இந்த ஊடக சந்திப்பில் அவர் தெரிவிக்கையினில் கடந்த எட்டுவார காலமாக நான் ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றப்பயணத்தை மேற்கொண்டு,; பிரதிநிதிகளை சந்தித்தேன். முப்பது நாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழர்களின் பிரச்சினை சம்பந்தமாக முழுமையாகக் கலந்துரையாடினேன்.

இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அனந்தி சசிதரன் உட்பட புலம் பெயர் நாடுகளில் வாழும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். முக்கியமாக, காணமற்போனவர்கள், சரணடைந்தவர்கள் சம்பந்தமான விசாரணையை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவியையும் சந்தித்துக் கலந்துரையாடினோம். இந்தக் குழுவினர் இலங்கையில் பத்து நாள்கள் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர். எனவே இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் குழு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று நாம் கோரிக்கை விடுத்தோம்.- என்றார்.

இதனிடையே எதிர்வரும் 30 ம்திகதி சபை அமர்விற்கென முன்வைத்துள்ள பிரேரணையினை நேரடியாக வடமாகாண பேரவைத்தலைவரிடம் தான் கையளித்ததாக தெரிவித்த சிவாஜிலிங்கம் அத்துடன் முதலமைச்சரிடம் பிரேரணைக்கு ஆதரவு கோரி சந்தித்திருந்தார்.

No comments:

Post a Comment