சிறுவர் இல்லத்தில் இருக்கும் விபூசிகாவை அவரது தாயார் ஜெயக்குமாரியுடன் இணைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் அனுமதி மறுத்துள்ளார்.
மகா தேவா சைவச் சிறுவர் இல்லத்தில் இருக்கும் தனது மகளை விடுவித்து, தன்னுடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார் ஜெயக்குமாரி.
இந்த மனு மீதான விசாரணை இன்று காலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, பின்னர் பிற்போடப்பட்டு பிற்பகலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜெயக்குமாரி சார்பாக சட்டத்தரணிகளான எஸ்.விஜயராணி, ம.கிறேசியன், என்.சுந்தர சர்மா, எச்.றைகான், எஸ்.துஸ்ஸியந்தி ஆகியோர் மன்றில் ஆஜராகினர்.
சிறுவர் இல்லத்திலிருந்து சிறுமி விபூசிகாவை விடுவித்து தாயாருடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் தமது வாதத்தில் எடுத்துக் கூறினர்.
ஜெயக்குமாரி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவர் மீதும் பயங்கரவாத குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தாயார் தடுத்து வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி சிறுவர் இல்லத்திலும் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இருவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்திலிருந்து விடுதலையாகவில்லை. அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸாரிடமிருந்து கடிதம் கிடைக்கப்பெற்றால் மாத்திரமே தாயாருடன் சிறுமியை சேர்க்க முடியும். அதுவரையில் சிறுமியை சிறுவர் இல்லத்தில் இருந்து விடுவிக்க முடியாது என்று நீதவான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment