ஐ.நாவின் விசாரணைகளைத் தள்ளிப்போடுதல் – இப்படியொரு முடிவுதான் இந்த முறை வருமென்பதை ஏற்கனவே நண்பர்களுக்குள் கதைத்திருந்தோம். சமூக
வலைதளங்களிலும் இதுதொடர்பிலான பதிவிடல்களை மேற்கொண்டோம். வாதிட்டோம், சொற் போரிட்டோம். ஆனால் வென்றது, இம்முறையும் இலங்கை அரசுதான்.
இந்தத் தீர்மானப் பிற்போடுதல் குறித்து எங்களைப் போன்ற பலரும் ஏற்கனவே அறிந்திருந்தாலும், உத்தியோகபூர்வ முடிவு நேற்று அறிவிக்கப்பட்டதும் கவலையையும், எங்கள் அரசியலின் இயலாமையையும் எண்ணி விசனம் கொண்டோம். யாரோடு நோவது, எல்லோருமே நொந்தவர்கள்தானே, எனவேதான் நொந்தவர்களிலும், மிகவும் நொந்தவர்கள் இந்தத் தள்ளிப்போடல் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை பதிவுசெய்ய முடிவெடுத்தேன்.
அதிலும் சர்வதேசத்தை அதிகம் நம்பியிருக்கும் தரப்புக்களை முதலில் இலக்குவைத்தேன். காணாமல் போனவர்களைத் தேடும் உறவுகள்தான் முதன்மையானவர்கள். இலங்கை அரசு இதற்கு தீர்வே தராது என்பதிலும், தகுந்த தீர்வைத் தரவேண்டும் – தமது பிள்ளைகளை, ஆண் துணைகளை மீட்டுத்தரவேண்டும் என்பதிலும் விடாப்பிடியாக இருப்பவர்கள் அந்நத் தரப்பினரே. அவ்வாறானவர்களில் ஒருவர் திருமதி செல்வரத்தினம். முல்லைத்தீவை சேர்ந்தவர். கணவனைத் தேடிவருகின்றார். அழைப்பெடுக்கும்போது இரவு சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
“ஓ சொல்லுதம்பி”
“என்ன நடக்குதம்மா.
எப்பிடியிருக்கிறியள். என்ன சமையல்? சாப்பிட்டாச்சோ”
ஓ இப்பத்தான் மத்தியான சமையல் ராசா.(மாலை 4.48 மணி) வேலையால வந்தன்.
என்ன விசேசம்
“ஐ.நா விசாரணைய தள்ளிப்போடுறதா சொல்லியிருக்கினம். இதுபற்றி என்ன நினைக்கிறியள் எண்டு கேட்கத்தான் எடுத்தனான்” நான் என்ன தம்பி நினைக்கிறது. என்னட்ட இதுகள கேட்காதையுங்கோ. களைச்சிப்போய் இருக்கிறன். வேலைத்தளத்தில கதைச்சவ. இருந்த நம்பிக்கை விட்டுப்போச்சு. எப்பிடியாவது வெளிநாடுகள் அழுத்தம் குடுத்து என்ர மனுசனையும், அதேமாதிரி காணாமல் போன பிள்ளையளயும் விடுதலை செய்துடுவினம் எண்டு நம்பிக் கொண்டிருந்தன். எல்லா போராட்டடங்களுக்கும் போறதும் வெளிநாடுகள் இதைப் பார்த்தாவது ஏதாச்சும் முடிவு சொல்லும் எண்டுதான். ஆனால் இப்ப ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்திவைக்கிறதாக சொல்லி எங்கள கைவிட்டுப் போட்டுது. வெளிநாட்டுக்காரர் மீது இருந்த நம்பிக்கையும் போச்சு” – பேசிமுடிக்க அவரின் சுவாசச்சத்தம் என்காதுகளை அடைக்கிறது.
“சரி அம்மா, சாப்பிடுங்கோ”.
காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு அடுத்தபடியாக அதிகளவில் சர்வதேசத்தை எதிர்பார்த்திருப்பவர்கள் மீளக்குடியமர்த்தப்படாத வலி. வடக்கு மக்கள்தான். அவர்களின் எனக்கு மிகவும் நெருக்கமானவர் வருணன் (30). இப்போது உடுவில் பகுதியில் இருக்கின்ற அகதிகளுக்கான நலன்புரி நிலையத்தில் வசிக்கின்றார். சொந்த ஊரை விட்டு அகதியாகப் புறப்படும்போது வருணன் முன்பள்ளி சென்றுகொண்டிருந்தார். இப்போது அந்த அகதிக்கு திருமணமாகி, அதே அகதியின், அகதிக் குழந்தை முன்பள்ளி போகிறான்.
“அண்ண, என்ன சொல்லுது ஐ.நா” நான் கேள்வியை முடிக்கமுதல் வருணன் முந்தினார்.
“ஐ.நாவும் மண்ணாங்கட்டியும். சும்மா கடுப்பேத்தாதையுங்கோ தம்பி. எத்தின வெள்ளக்காரர் வந்து எங்கள சுத்தி பாத்தவங்கள். எப்பிடியாவது எங்கட ஊருகளுக்கு அனுப்பிடுவாங்கள், அதுக்கு ஏதும் செய்வாங்கள் எண்டுதானே எல்லாரிட்டயும் நம்பி நம்பி கதைச்சம். கடைசியா கழுத்தறுத்துப்போட்டாங்கள். இந்தக் கழுத்தறுப்புப் புத்திய கூட்டமைப்புக்காரரிட்ட இருந்து படிச்சிருப்பாங்கள் போல. இண்டைக்கு காலையில் பேப்பர பாத்ததும் இனிமேல் எவன் வந்தாலும் அடிச்சிச்சாத்தோனும் போல இருந்தது. எங்கள கைவிடுறதெண்டால் ஒரேதா விடுங்கோ. ஏன் தொட்டுத் தொட்டு கொடுமப்படுத்துறியள்? எத்தினபேர் வந்தியள் எங்களிட்ட? உலத்த நம்பி பிரயோசனம் இல்ல தம்பி. இதைப்பற்றி கதைச்சும் பிரயோசனம் இல்ல தம்பி”.
பின்னர் முகாம் பிரச்சினைகளை, குறைபாடுகளைப் பட்டியலிட்டார் வருணன். சில சாக்குப்போக்குகளை சொல்லிவிட்டு, அனந்தி அக்காவுக்கு அழைப்பைப் போட்டேன். அனந்தி சசிதரன். முன்னாள் போராளி எழிலனின் மனைவி. கணவன் இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல்போனவர். அன்றிலிருந்து காணாமல் போனவர்களைத் தேடிப் போராடுபவர்களில் ஒருவராகத் தன்னை மாற்றிக்கொண்டார். அந்தப் போராட்டத்தை அரசியலோடு இணைந்து முன்னெடுப்பதற்காக வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார். கடந்த காலங்களில் சர்வதேச மட்டத்தில் காணாமல் போனோர் விடயம், இன அழிப்பு விவகாரம் முதலியன குறித்து பல்வேறு தரப்பினருடம் பேசி வந்திருக்கிறார். அழைப்பெடுத்தவுடன் எந்த பில்டப்பும் தரவில்லை. “இப்ப கொஞ்சம் பிசி, இத்தின மணிக்கு எடுங்கோ” என்று சொல்லவில்லை.
“என்ன தம்பி, சொல்லுங்கோ, இண்டைக்கு சிவராத்திரிதானே கோயிலுக்கு போய்க்கொண்டிருக்கிறன். பிரச்சினையில்ல, என்ன வேணும், சொல்லுங்கோ” கேட்டேன் கேள்வியை,
“போரினால் மிகவும் பாதிக்கப்பட்டவள் என்றவகையிலும், பாதிக்கப்பட்ட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்றவகையிலும் மிகவும் சோர்வடைந்திருக்கிறேன். இவ்வளவு காலமும் நாங்கள் செய்த போராட்டங்களுக்கும், பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்மார்களினதும், கணவன்மாரை இழந்த மனைவிமார்களினதும், தந்தையரை, தனயனை, சகோதரியை, சகோதரனை இழந்த எங்கள் அடுத்த தலைமுறையினரதும் கண்ணீரை அவமதித்திருக்கிறது ஐ.நா.
இவ்வாறானதொரு முடிவை அறிவித்ததன் மூலம் நடுநிலை வகிக்க வேண்டிய ஐ.நா எங்களைக் கைவிட்டிருக்கின்றது. உலகம் முழுவதும் இனப்படுகொலைக்குள்ளாகும் இனங்களுக்கு ஆதரவாகு குரல்கொடுத்துவரும் ஐ.நா, தமிழர்களில் மட்டும் தன் நடுநிலைமைத்தன்மையைக் கடைப்பிடிக்கத் தவறியிருக்கின்றது. இங்கு பாரிய இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கையில் மௌனம் சாதித்துவிட்டு, எல்லாம் முடிந்தபின்னர், இனிமேலும் இவ்வாறானதொரு தவறு நடக்காமல் உலகத்தைக் கவனித்துக்கொள்ளுமளவுக்கு ஐ.நாவின் மெத்தனப்போக்கு தமிழர் விடயத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. இப்போது அதன் உச்சமான முடிவை ஐ.நா அறிவித்திருக்கிறது. இவ்வளவுகாலமும் ஏதாவது ஒரு நம்பிக்கையை ஐ.நா மீது தமிழர்கள் வைத்திருந்தார்கள். இலங்கைக்கு சார்பாகவும், மேற்கு நாடுகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவுமே ஐ.நா இவ்வாறானதொரு தள்ளிவைத்தலை செய்திருக்கிறது. இப்போது எங்களுக்கு ஒன்றுமட்டுமே தெளிவாகப் புரிகிறது. ஐ.நா பாதிக்கப்படும் மக்களுக்காக குரல்கொடுக்கும் அமைப்பல்ல. அது அரசியல் அதிகார சக்திகளின் அமைப்பு. அவர்களின் நலனுக்காக மட்டும் செயற்படும் அமைப்பு”- சைக்கிள் மிதித்துக்கொண்டே கதைத்துமுடித்தார். அனந்தியை தெரிவுசெய்த அத்தனை வாக்களர்களுக்கும் ஒரு சல்யூட் அடிக்க வேணும்போலிருந்தது.
“நன்றி அக்கா” – இதுபோதும் கொஞ்சம் அறிவுபூர்வமாக உணர்வுகளைத் தாண்டிப் பேசக்கூடிய ஒருவர் வேண்டுமே. யாரைப்பிடிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவர் சிக்கினார். இவர் யாழ். பல்கலையின் ஒரு விரிவுரையாளர். முன்பொரு நேர்காணலுக்காக சந்தித்திருக்கிறேன். பெயர் குறிப்பிட விரும்பாது அவ்வப்போது கருத்துச் சொல்பவர். இந்தச் சந்தர்ப்பத்திலும் அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாமே “ சொல்லுங்கோ சேர்”.
இலங்கையில் மைத்திரி – ரணில் அரசைப் பெற்றறெடுத்த அமெரிக்கா, இந்தியா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது குழந்தைக்கு நாடாளுமன்றத் தேர்தலுடாகப் பல்லு முளைக்கும்வரை, அக்குழந்தை அழக்கூடிய எதனையும் செய்யமாட்டாது. அதில் ஐ. நா விவகாரம் முக்கியமானது.
பயங்கரவாத அழிப்பு என்ற பெயரில் இலங்கையில் தமிழர்களை அழிக்க உதவி செய்த யாரும் இலங்கை மீதான போர்க் குற்ற விசாரணைக்கு அல்லது சர்வதேச நீதி மன்ற விசாரணைக்கு விரும்பமாட்டார்கள். அனுமதிக்கவும்மாட்டார்கள். ஏனெனில் விசாரணையென்று ஒன்று நடந்தால் அதில் சிக்கிக்கொள்ளப்போவதும் அவர்கள்தான். ஆயுதம் கொடுத்தவரில் இருந்து ஆளணி வழங்கியவர்கள் வரை விசாரணை நீளும். எனவே இந்த விசாரணை, தீர்மானம் என்பனவெல்லாம் தத்தம் அரசியலுக்கானதாகவே பயன்படுத்தப்பட்டுவருகின்றது. இது சர்வதேச அரசியல்.
உள்நாட்டளவில் பார்த்தால், மைத்திரி – ரணில் கூட்டு சிங்கள வாக்காளர்களுக்கு இப்படியொரு விசாரணை நடத்த ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்த பின்னரே அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். இது தமிழர்களுக்கும், தமிழர்களுக்குத் தலைமைதாங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் தரப்பிற்கும் தெளிவாகவே தெரியும். இப்போது மறுபடியும் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதில் வெற்றிபெறுவதாயின், தமிழர்களுக்கு முக்கியமான எதனையும் செய்யவும் கூடாது, ஐ. நா விவகாரமும் முடக்கப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட நாடுகள் இதற்கு ஒத்தே போகும். ஏனெனில் மைத்திரி – ரணில் அரசு அவற்றின் குழந்தையே. இன்று ஜனநாயகம் இலங்கையில் நிலைநாட்டப்பட்டுவிட்டது, சிறுபானமையினர் தமது உரிமைகளை அனுபவிப்பதை அவர்களின் முகத்தில் காணக்கூடியதாக உள்ளது என்றெல்லாம் இந்த நாடுகள் கூறும். அவர்களுக்கு வலிகாமம் மக்களின் உயிர் வாழும் உரிமையானது கழிவு எண்ணெய்களால் பறிக்கப்பட்டு விட்டது என்பதும், காணாமல் போனவர்களின் உறவுகள் இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும், பறிக்கப்பட்ட நிலங்கள் இன்னமும் வழங்கப்படவில்லை என்பதும் தெரியாது. தெரிந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாது. காரணம்இ தற்போதைய நிலையில் இலங்கையில் மேற்கு நாடுகள் நினைத்ததைச் சாதித்துக் கொண்டன. இதுவே மாற்றம்.” பெயர் குறிப்பிட முடியாதவர் முடித்தார்.
இதுமட்டும்போதுமா? இன்னொருவரும் பேசினால் நன்றாக இருக்குமே என்றுதோன்றியது. சமூகம் சார்ந்தும், போருக்குப் பின்னரான நிலைமைகள் சார்ந்தும் பேசுபவராக இருந்தால் பொருந்தும். யாரைப்பிடிக்கலாம், சிக்கினார் பாலமுருகன் திருநாவுக்கரசு. சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருபவர். முன்னோக்கிய அரசியல் பார்வையுடையவர். தொலைபேசியில் கேட்டு டைப் செய்துகொள்வது பஞ்சியாக இருந்தது. பேஸ்புக்கில் ஒரு மெசேஜ் அனுப்பினேன். பார்த்துவிட்டு அமைதியாக இருக்காமல் உடனடியாகவே சிரமம் பராது பதில் எழுதியிருந்தார்.
தமிழர்களைப்பொறுத்தவரையில், அவர்களிடமிருந்த கடைசித் துரும்புச்சீட்டும் இழக்கப்படுவதற்கான முன்னெடுப்பாகவே அதைப் பார்க்க முடியும்.
மாற்றத்திற்கான இந்த ஆட்சி மாற்றத்தில், திரை மறைவில் பலம் மிக்க அரசுகள் சில இருந்தன என்பது பரகசியமானது.
அந்த அரசுகளின் நலன்கள் நிறைவேற்றப்படுவதற்காக எமது நலன்கள் பலியிடப்படுள்ளன.இது தமிழர்களின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த தோல்வி எனவும் கூறலாம்.
இறுதிப்போரில், சர்வதேசத்தால் எதிர்வு கூறப்பட்டது போலவே பெரும் இரத்தக்களரி ஒன்று ஏற்பட்டு அவர்களின் கண்முன்னே ஒரு இனம் கொத்துக்கொத்தாக கொலைசெய்யப்பட்டு அழிக்கப்பட்டிருந்தது. தமது நிகழ்ச்சி நிரல் ஒன்றிற்காக அதை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்த சர்வதேச சமுகம், தனது எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சிநிரல் தடம் புரளத்தொடங்கியதை அடுத்து, தான் கை கட்டிப்பார்த்துகொண்டிருந்த அந்த கொடூர யுத்தத்தை, இரண்டு வருடங்களின் பின் மனித உரிமை மீறல் என விசாரிக்க முற்பட்டது. இங்கும் மனித உரிமை மீதான அக்கறை என்பதை விட, பலம் மிக்க சக்தியொன்றின் நலன்சார்ந்த நிகழ்ச்சிநிரலை மீளக் கட்டமைத்தல் என்பது தான் உண்மையானது.
இங்கு அவர்களின் நிகழ்ச்சி நிரலும் எமது நலன்களும் சந்திக்கின்ற புள்ளி ஒன்றை நோக்கி எமது தமிழ்த் தரப்பு நகர்ந்திருக்க வேண்டும்.
அதாவது, அவர்களுக்கு தமது நலனை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடும்போது எமது தரப்பு உரியமுறையில் அதைக் கையாண்டு, எமது நலன்களை முன்னிறுத்தி, ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு ஒத்துழைத்திருக்கலாம்.
இந்த ஆட்சியை மாற்றுவதற்கு அந்த வெளிநாட்டரசு, என்ன விலைகளையும் கொடுக்கத்தயாராக இருந்தது, பலதரப்பட்ட நபர்கள். நிறுவனங்களை, அமைப்புகளை இது தொடர்பில் அவ்வரசு பல்வேறுவடிவங்களில் அணுகியிருந்தது.
இவ்வேளையில் அவர்களுக்கு வேண்டிய அந்த ஆட்சி மாற்றத்திற்காய் தமிழர் தரப்பையும் அது உபயோகித்துக்கொண்டது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தமிழர் பிரதிநிதிகள் அவர்களுக்கு நிபந்தனை அற்ற ஆதரவைவழங்கித் தமது நல்லபிள்ளைத்தனத்தைக் காட்டிக்கொண்டனரே தவிர இனத்தின் நலன்சார்ந்த எதுவித பேரம் பேசலுக்கும் போயிருக்கவில்லை.
அதன் விளைவுகளில் ஒன்றுதான், ஆட்சிமாற்றம் ஏற்பட்டபின்னர் தமிழர் பிரச்சினையானது சர்வதேச அரங்கிலிருந்து லாவகமாக அகற்றபட்டு வருகிறது.
இந்த விசாரணை பிற்போடலின் பின்பான முழு அரசியலையும் அவர் சொல்லிவிட்டார். இதுவேபோதும் என்றிருக்கையில், இப்படியே விட்டால் போதாது என்றும் மூளைசொல்லியது. யாராவது அரசியலில் ஈடுபாடுடைய இந்தத் தலைமுறையினரின் கருத்தொன்றை முடிவாகச் சொன்னால் நன்றாக இருக்கும் எனவும் சொன்னது மூளை. பேஸ்புக்கை பார்த்துக்கொண்டு, முழுசிக்கொண்டிருக்கையில் அவராகவே வந்து சிக்கினார். தீவிரமாக அரசியல் எழுதும் ஒருவர். நான் கேட்டதும், கொழும்புமிரரில் வெளியாகும் என்றதும் பெயர் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
“சரி சொல்லுங்கோ”.
“சிறீலங்கா படைகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் போது மனிதவுரிமைகள் மீறப்பட்டது என்றும்,அது தொடர்பாக விசாரணைசெய்த குழுவினது ஆய்வறிக்கை பங்குனிமாத ஐநா மனிதவுரிமை ஆணையத்தின் கூட்டத் தொடரில் வெளியிடப்படும் என்றும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருந்தது. புதிய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டதால் அவர்களுக்கு உள்நாட்டில் விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காகக் கால அவகாசம் தேவை என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேலும் ஆறு மாசம் வழங்கப்படுள்ளது என்பது, எந்தவிதத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. ஆனால் இந்த முடிவை மாற்றும் வல்லமை பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடையாது. எனவே உண்மையாக சிறிலங்கா விடுதலையடைந்த நாள் முதல் இன்றுவரை ஈழத்தமிழினம் எதிர்கொண்டு நிற்கும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு உள்ளான மக்களுக்கு பரிகாரநீதி கிடைப்பதற்காக ஐநாவின் குழுவினர் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களிடம் இனவழிப்புக்கான விசாரணையை மேற்கொண்டு (இந்த ஆறுமாத கல அவகாசத்தினுள்) அதனையும் இணைத்து முழுமையான அறிக்கையை வெளியிட வேண்டும்.
இனவழிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடியான பங்குபற்றலுடன் அவர்களுக்கான அரசியல் தீர்வுகாணப்படவேண்டும். அதற்காக அந்த மக்களிடம் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வை அவர்களே முடிவு செய்வதற்குப் பன்னாட்டு ரீதியான பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும். அது உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்”.
சரி தீர்வையும் அவர் சொல்லிவிட்டார். இனியென்ன? ஆறுமாதத்துக்குப் பிறகும் இப்படியே ஒரு தள்ளிப் போடல் வந்தால்? ………………………………………………….யாரைக் கேட்பது?
நன்றி - கொழும்புமிரர்
No comments:
Post a Comment