February 1, 2015

கிளிநொச்சியில் காணாமல் போனோரின் உறவுகளால் நாளை கவனஈர்ப்பு போராட்டம்!

நாளை காலை 9 மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள் அவர்களுக்கான முறையான தீர்வினைக் கருத்தில் கொண்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட காணாமல்போன உறவுகளின் அமைப்பு இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஒழுங்குபடுத்தியுள்ளது.
நாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் இந்த அரசிடம் நீண்ட காலமாக எந்த தீர்வுகளும் இன்றி காணப்படும் காணாமல் போனார் மற்றும் சிறையில்வாடும் அரசியல் கைதிகளின் பிரச்சினையை கவனத்திற்கு கொண்டு வந்து, விரையில் நல்லதொரு தீர்வையெட்டும் நோக்கத்துடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே நாளை காலை 9 மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் காணாமல் போன மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை ஒன்றுதிரளுமாறு ஏற்பாட்டாளர்கள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதே வேளை எதிர்வரும் 9ம் நாள் யாழ்ப்பாண நகர் பகுதியில் இதே போன்றதொரு கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment