August 18, 2014

தமிழ்த் தேசிய ஆசானை இழந்து விட்டோம்! பொருளியல் ஆசான் வரதராஜனின் மறைவுக்கு சிறீதரன் எம்.பி இரங்கல்

தமிழ்த் தேசியத்தின் அபிமானியும் மாணவர்களின் மனங்கவர்ந்த பொருளியல் ஆசானுமான வரதராஜனின் மறைவையொட்டி
பா.உறுப்பினர் சி.சிறீதரன் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
வரதராஜன் ஆசிரியரின் மறைவை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சில நாட்களுக்கு முன் அவரை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டபோது சில வார்த்தைகள் அந்த பெரும் ஆசான் என்னோடு பேசி இருந்தார். அது இறுதி வார்த்தைகள் என்பதை உணரமுடிந்தது.
எங்களோடு நெடுங்காலம் வாழ வேண்டிய மனிதர்களில் வரதராஜன் சேர் மிக முக்கியமானவர். அவரிடம் மாணவனாக இருந்திருக்கின்றேன். அவரிடம் மாணவனாக இருந்த காலங்கள் என் வாழ்வில் பொற்காலங்கள். வரதராஜன் சேரிடம் பொருளியல் மாணவனாக இருக்கின்ற ஒவ்வொரு மாணவனுக்கும் அக்காலங்கள் பொற்காலங்கள் என்பது மறுக்க முடியாத யதார்த்தம். அவரிடம் கற்றவர்கள் பொருளியலை ஆய்வுக் கண்ணுடன் பார்க்கும் பேராற்றலை பெற்றுக்கொள்வார்கள்.
மதிப்பிற்குரிய வரதராஜன் மறைந்துவிட்டார் என்பது பல கல்விமான்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி. ஏனெனில் அவர் வெறுமனே பொருளியல் ஆசானாக மட்டும் வாழ்ந்ததில்லை.
தமிழ் மண்ணின் எதிர்கால கனவு பொருளியல் கட்டமைப்பை உருவாக்குவதில் உழைத்தவர். தமிழ்த் தேசியத்தோடு பயணித்தவர். அதற்காக தேய்ந்தவர். வாழ்ந்தவர். எனக்கு நல்ல நினைவிருக்கின்றது 1988ல் ஒட்டுக்குழுக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல பொருளியல் ஆசிரியர் கிருஸ்னானந்தனும் ஆசிரியர் வரதராஜனும் இந்த மண்ணில் இரண்டு பொக்கிசங்கள்.
துயர் சுமந்த எமது மண்ணின் வரலாற்றில் வரதராஜன் ஆசிரியரும் விடுதலைக்காக துயர்களை சுமந்தார் என்பதே வரலாறு.
இறுதி வரை தேசியத்தின் விசுவாசியாக அதற்காக சிந்தித்தவராக வாழ்ந்த அந்த மனிதருக்கு எமது மக்கள் சார்பில் வணக்கத்தையும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
varatharajan

No comments:

Post a Comment