August 23, 2014

இராணுவத்திற்காக யாழில் 6381 ஏக்கர் தனியார் காணிகள் சுவீகரிப்பு- காணி அமைச்சர்!

தேசிய பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, பலாலி இராணுவ முகாமை பலப்படுத்துவதற்காக யாழ் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலத்தை அரசாங்கம்
சுவீகரித்துள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தனியார் காணிகளை அரசாங்கம் இவ்வாறு சுவீகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த காணிகள் சுவீகரிக்கப்பட்டதால், வடக்கில் மக்களுக்கு எவ்விதமான அநீதியும் ஏற்படவில்லை. அரசாங்கம் சுவீகரித்துள்ள 6381 ஏக்கர் நிலத்தில் 220 ஏக்கர் வீடமைப்புத் திட்டம் ஒன்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்பு தொகுதி வளலாய் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளது.  இராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்ட பல நிலங்கள் வெற்று நிலங்களாக காணப்பட்டவை.
போர் நடைபெற்ற காலத்தில் இந்த நிலங்களில் இருந்த மக்களை விடுதலைப் புலிகள் விரட்டியிருந்தனர் எனவும் அரசாங்கம் சுவீகரித்துள்ள சகல காணிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனவும் இதற்காக 400 மில்லியன் ரூபாவுக்கும் மேல் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ள நிலத்தில் நிர்மாணிக்கப்படும் வீடமைப்பு தொகுதியில் இராணுவத்தினரின் குடும்பங்கள் குடியேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment