June 21, 2014

இரயில்வே கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்! - வைகோ!

காங்கிரசு கூட்டணி ஆட்சியில் கடந்த ஆண்டு, 2013, பிப்ரவரி மாதம் இரயில்வே பயணிகள் கட்டணம் 20 விழுக்காடு உயர்த்தப்பட்டது. மீண்டும் அக்டோபரில் 2
விழுக்காடு உயர்ந்தது. ஆக கடந்த ஆண்டு மட்டும் இரயில் பயணிகள் கட்டணம் 22 விழுக்காடு உயர்வு என்பது மக்கள் மீது தாங்க முடியாத சுமையை ஏற்றுவதாக இருந்தது.
அதே போல சரக்குக் கட்டணமும் கடந்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் ஒருமுறையும், அக்டோபரில் இரண்டு முறையும் 8.9 விழுக்காடு அளவுக்கு ஏற்றப்பட்டது. தற்போது மீண்டும் 6.5 விழுக்காடு அதிகரித்தால் சரக்கு போக்குவரத்துக் கட்டணம் உயர்ந்து, விலைவாசியும் கணிசமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விலைவாசி கடுமையாக அதிகரித்து, மக்களை வாட்டி வதைத்தது. டீசல் விலை உயர்ந்தால் இரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை அதிகரிப்பதற்காகவே முந்தைய அரசு இரயில் கட்டண நிர்ணய ஆணையத்தை உருவாக்கியது. மத்திய அரசு இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

பேருந்து கட்டண உயர்வால் ஏழை, எளிய சாதாரண மக்கள் இரயில் பயணத்தையே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் பயணிகள் கட்டணம் அதிகரித்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
எனவே மத்திய அரசு இரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்வை மறு ஆய்வு செய்து உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

‘தாயகம்’    வைகோ
சென்னை - 8    பொதுச் செயலாளர்,
21.06.2014    மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment