May 29, 2014

‘ஒப்ரேஷன் ஆஷ்போர்ட்’ புலிகளை வேரறுப்பதற்கு வகுக்கப்பட்ட வியூகம் - சேரமான்

தமது பொருண்மிய நலன்களைப் பூர்த்தி செய்வதற்கான புறநிலைகளைத் தோற்றுவிப்பதற்காக கீழைத்தேய நாடுகளில் ஆயுதப் போராட்டங்களை
உலக வல்லாதிக்க சக்திகள் ஊக்குவிப்பதும், ஆயுதப் போராட்டங்களால் தமது பொருண்மிய விரிவாக்கத்திற்கு இடையூறு ஏற்படும் பொழுது அவற்றை முன்னெடுக்கும் தேசச் சுதந்திர இயக்கங்களை நிராயுதபாணிகளாக்குவதற்கு முற்படுவதும் புதிய விடயங்கள் அல்லவே.
ஈழத்தீவைப் பொறுத்தவரை ஆயுத எதிர்ப்பியக்கமாக தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முகிழ்த்த நாள் முதல் அதனைத் தலைமையேற்று முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிராயுதபாணிகளாக்குவதற்கு பல தடவைகள், பல்வேறு முயற்சிகளை உலக வல்லாதிக்க சக்திகள் எடுத்திருந்தன. 1985ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியின் மேற்பார்வையில் திம்புவில் நடைபெற்ற சமரசப் பேச்சுக்களிலிருந்து முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் வெளிநாட்டு இராசதந்திரிகளால் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசித் தொடர்பாடல்கள் வரை தமிழீழத் தேச சுதந்திர இயக்கத்தை நிராயுதபாணிகளாக்கும் முயற்சிகளாகவே இருந்தன.
ஆயுதம் தாங்கிய பலம்பொருந்திய சக்தியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கும் வரை தமிழீழ மண்ணிலோ அன்றி ஈழத்தீவின் ஏனைய பாகங்களிலோ உலக முதலாளித்துவம் பொருண்மிய விரிவாக்கத்தை மேற்கொள்வது என்பது சாத்தியமில்லை என்ற கற்பிதத்தின் அடிப்படையிலேயே தமிழீழ தேச சுதந்திர இயக்கத்தை நிராயுதபாணிகளாக்குவதற்கான பகீரத பிரயத்தனங்களை திம்பு முதல் முள்ளிவாய்க்கால் வரை உலக வல்லாதிக்க சக்திகள் எடுத்திருந்தன. இது ஆச்சரியத்திற்கோ அன்றி அதிர்ச்சிக்கோ உரிய ஓர் விடயம் அல்ல.
ஆனால் உலக வல்லாதிக்க சக்திகளின் இம்முயற்சிகளுக்குத் தமிழ் அமைப்புக்கள், அதுவும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழத் தேச விடுதலைப் போராட்டத்தை அரசியல்மயப்படுத்துவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள், உடந்தையாக நின்றதும், ‘தடைநீக்கம்’ என்ற ஆசை வார்த்தையை உயர்த்திப் பிடித்து உலக வல்லாதிக்க சக்திகளின் முன்மொழிவுகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை மீது திணிக்க முயன்றதும் உலகத் தமிழர்களால் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை.
இவ்வாறானதொரு நடவடிக்கையின் குறியீட்டுப் பெயர்தான் ‘ஒப்ரேஷன் ஆஷ்போர்ட்’.2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நடவடிக்கையை உலக வல்லாதிக்க சக்திகளின் சார்பில் முன்னெடுத்த நாடு வேறேதுமல்ல. ஆயுதப் போராட்டத்தின் ஊடாகவும், சமகாலத்தில் அமைதிவழி தழுவிய அரசியற் போராட்டங்கள் வாயிலாகவும் தமது உரிமைக்காக நீண்டகாலமாகப் போராடிய தென்னாபிரிக்காவே அந்த நாடு.
கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பன்னாட்டு சுயாதீன விசாரணையை வலியுறுத்தி மேற்குலக நாடுகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும், சிங்களத்திற்கு ஆதரவாகவும் தென்னாபிரிக்கா வாக்களித்தது உலகத் தமிழர்களின் இதயங்களில் ஆறாத வடுவதாகப் பதிந்த ஒன்று. தவிர தேசிய நல்லிணக்கத்திற்கான அனுசரணையின் போர்வையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை சிறுமைப்படுத்தும் முயற்சிகளில் இப்பொழுது தென்னாபிரிக்கா ஈடுபடுவதும் உலகத் தமிழர்களைப் பொறுத்தவரை வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சும் விதமாகவே உள்ளது.
இப்படிப்பட்ட தென்னாபிரிக்கா 2008 ஆம் ஆண்டிலேயே, அதுவும் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுக்கு வருவதற்கு ஓராண்டுக்கு முன்னரே, உலக வல்லாதிக்க சக்திகளின் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கு முயற்சித்தது என்று இப்பொழுது நாம் வெளியிடும் தகவல் உலகத் தமிழர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியளிக்கும் செய்தியாகவே இருக்கும். ஆனால் இதனை விட அதிர்ச்சியான செய்தியொன்றை உலகத் தமிழர்களிடம் வெளிக்கொணரப் போகின்றோம்.
உலக வல்லாதிக்க சக்திகளின் சார்பில் தென்னாபிரிக்கா முன்னெடுத்த இந்நடவடிக்கைக்கான முகவர் அமைப்பாகப் பிரித்தானிய தமிழர் பேரவை செயற்பட்டது என்பதுதான் அந்த அதிர்ச்சிகரமான செய்தி. முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் இந்நடவடிக்கை பற்றியும், இதில் தென்னாபிரிக்காவும், பிரித்தானிய தமிழர் பேரவையும் வகித்த பாகங்கள் பற்றியும் ஏன் இப்பொழுது நாம் வெளிக்கொணர வேண்டும்? என்ற கேள்வி வாசகர்களிடம் எழுவது இயல்பானதே. இது ஒருவகையில் நியாயமானதும் கூட.
ஆனால் இத்தகவல்களை நாம் இப்பொழுது வெளிக்கொணர்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று அன்று இந்நடவடிக்கையை முன்னெடுத்த தென்னாபிரிக்கா இன்று பகிரங்கமாகவே சிங்களத்திற்கு பக்கபலமாக நின்று தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் கூர்முனையை மழுங்கடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. மற்றையது இந்நடவடிக்கையில் தென்னாபிரிக்காவின் முகவர் அமைப்பாக அன்று இயங்கிய பிரித்தானிய தமிழர் பேரவை, இன்று உலகத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் தமிழீழ தேசியக் கொடியை வீசியெறிந்து விட்டுத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு மாற்றீடாக இந்திய உள்ளகப் புலனாய்வு அமைப்பான ஐ.பி நிறுவனத்தின் முகவரும், கே.பியின் வாரிசுமான உருத்திரகுமாரனை உலகத் தமிழர்களின் தலைமைத்துவமாக முன்னிறுத்த முனைவதும்தான்.
தொடர் பத்திகளாக நாம் வெளிக்கொணரப் போகும் இத்தகவல்கள் 2008ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்குப் பிரித்தானிய தமிழர் பேரவை அனுப்பிய இரகசிய ஆவணங்கள் சிலவற்றையும், அவற்றை மையப்படுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையால் மேற்கொள்ளப்பட்ட எழுத்துவடிவிலும், தொலைபேசி உரையாடல் வடிவிலுமான தகவல் பரிமாற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டவை.
சரி. இந்நடவடிக்கைக்கு ‘ஒப்ரேஷன் ஆஷ்போர்ட்’ என்று ஏன் பெயர் சூட்டப்பட்டது என்று இப்பொழுது நீங்கள் கேட்கலாம். இது மிகவும் சுவாரசியமான ஒன்று. இந்நடவடிக்கையை முன்னின்று முன்னெடுத்த தென்னாபிரிக்காவின் பொது சேவைகள் மற்றும் நிர்வாக விவகாரங்களுக்கான அமைச்சராக விளங்கிய ராதாகிருக்ஷ்ண லட்சுமண ரோய் படையாட்சி அவர்களாலேயே இக்குறியீட்டுப் பெயர் சூட்டப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாளன்று எதியோப்பியாவில் தங்கியிருந்த பொழுது இயற்கை மரணம் எய்திய படையாட்சி அவர்கள், தமிழகத் தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள ஊரமங்களம் பகுதியை தனது பாட்டனாரின் பூர்வீக ஊராகக் கொண்டவர். தென்னாபிரிக்காவில் பிறந்த படையாட்சி அவர்கள், 1972ஆம் ஆண்டு தென்னாபிரிக்க தேசிய கொங்கிரஸில் இணைந்து, 2004ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அரசாங்கத்தில் துணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். ‘ஒப்ரேஷன் ஆஷ்போர்ட்’  தொடங்கப்பட்ட பொழுது தென்னாபிரிக்காவின் தொலைத்தொடர்பு விவாகரங்களுக்கான துணை அமைச்சராகப் படையாட்சி அவர்கள் பதவி வகித்தார். அக்காலப் பகுதியில் அடிக்கடி பிரித்தானியாவிற்குப் பயணங்களை மேற்கொண்ட படையாட்சி அவர்கள், இலண்டனின் புறநகர பிரதேசமான ‘ஆஷ்போர்ட்’  எனும் நகரில் தனக்கான வைப்பக கணக்கொன்றை திறந்திருந்தார். இந்நகரின் பெயரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவதற்கான தென்னாபிரிக்காவின் நடவடிக்கைக்கு படையாட்சி அவர்கள் பெயர் சூட்டியிருந்தார்.
இந்நடவடிக்கையில் தென்னாபிரிக்காவின் முகவர் அமைப்பாக பிரித்தானிய தமிழர் பேரவை செயலாற்றிய அக்காலப் பகுதியில் நடுநாயகப் பாத்திரத்தை தற்பொழுது பிரித்தானிய தமிழர் பேரவையின் செயலாளர் நாயகமாகப் பதவி வகிக்கும் ரூட் ரவி என்பவரே வகித்திருந்தார். கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம் வகித்த பொழுது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்களால் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இயக்கத்தை விட்டு விலகிய இவரது கடந்த காலப் பின்னணி பற்றி எமது கடந்த பத்தியில் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தோம். எனவே இத்தகவல்களை இங்கு மீண்டும் நாம் குறிப்பிடத் தேவையில்லை.
‘ஒப்ரேஷன் ஆஷ்போர்ட்’ நடவடிக்கையின் முழுமையான பரிமாணங்களைப் பார்ப்பதற்கு முன்னர் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தொடர்பாகப் படையாட்சி அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி முதலில் சுருக்கமாகப் பார்ப்பது அவசியமானது. 1990களின் இறுதியில் இருந்து தென்னாபிரிக்காவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட படையாட்சி அவர்கள், தமிழின உணர்வாளர்களால் நடாத்தப்படும் நிகழ்வுகளில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றி வீராவேசமான கருத்துக்களை வெளியிடுவார். ஆனால் ஏனைய இடங்களில், அதுவும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், இராசதந்திரிகள் போன்றோரின் பிரசன்னம் இருக்கும் இடங்களில் இதே வீரியத்தை படையாட்சியிடம் காண முடியாது. அவ்விடங்களில் வார்த்தைகளைப் படையாட்சி அளந்தே பேசுவார்.
இப்படியானதொரு சுவாரசியமான நிகழ்வு 21.03.2008, 22.03.2008 ஆகிய நாட்களில் கிழக்கு இலண்டன் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஈழப்பிரச்சினை தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கில் நிகழ்ந்தேறியது. இக் கருத்தரங்கில் கலந்து கொண்ட படையாட்சி அவர்கள், அங்கு நின்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களிடம் தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை தென்னாபிரிக்கா ஏற்றுக் கொள்வதாகக் கூறியதோடு, மேடையில் உரையாற்றும் பொழுது தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரிக்கும் தொனியிலான கருத்துக்களையும் வெளியிட்டிருந்தார். இவை பிரித்தானிய தமிழர் பேரவையால் திரிவுபடுத்தப்பட்டு தமிழீழ மக்களின் தன்னாட்சியுரிமைக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் உறுதுணை நிற்பது போன்ற தோற்றப்பாடு தமிழீழத் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ஏற்படுத்தப்பட்டது.
எனினும் இதுபற்றி அடுத்து வந்த நாட்களில் படையாட்சியை பி.பி.சி சிங்கள சேவை செவ்வி கண்ட பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளும், சிறீலங்கா அரசாங்கமும் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க வேண்டும் என்ற கருத்தைத் தவிர வேறு எதனையும் படையாட்சி அவர்கள் தெரிவிக்கவில்லை. அத்தருணத்தில் ‘தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமையை தென்னாபிரிக்கா அங்கீகரிப்பதாக நீங்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றதே?’ என்று பி.பி.சி சிங்கள சேவையின் செய்தியாளரான சந்தன பண்டார வினவிய பொழுது, தான் அவ்வாறான கருத்துக்கள் எதனையும் கூறவில்லை என்று படையாட்சி மறுத்தார். இதனை ஒரு மாதத்திற்குப் பின்னர் இலண்டன் வெஸ்ற்மின்ஸ்ரர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் மாநாட்டில் பங்கேற்று தன்னாட்சியுரிமை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் பொழுது பண்டார பகிரங்கமாக போட்டுடைத்தார்.
இவ்வாறு தமிழின உணர்வாளர்களின் மத்தியில் ஒரு கருத்தையும், வெளிநாட்டவர்கள் மத்தியில் அதனை மறுத்துரைக்கும் கருத்தையும் வெளியிட்டு, பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காண்பிக்கும் விலாங்கு மீனின் பாணியில் ஈழப்பிரச்சினையைக் கையாண்டு வந்த படையாட்சி அவர்கள் ‘ஒப்ரேஷன் ஆஷ்போர்ட்’  நடவடிக்கையின் ஓர் அங்கமாக பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடாக, அதுவும் அதன் தற்போதைய செயலாளர் நாயகமாக விளங்கும் ரூட் ரவி அவர்கள் ஊடாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு அனுப்பிய தகவல் என்ன தெரியுமா? மேற்குலக நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதுள்ள தடைகளை நீக்குவதற்கும், சீனாவின் மீதான இராசரீக அழுத்தங்களை அதிகரித்து சிறீலங்கா அரசாங்கத்திற்கு அது வழங்கி வரும் ஆயுத உதவிகளை தடுத்து நிறுத்துவதற்குமான முழு உதவிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புரிவதற்கு தென்னாபிரிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்பதுதான் அது!
(தொடரும்)
நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment