‘இலங்கையில் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாதிகளின் செயற்பாடுகள்
அதிகரித்துள்ளதாகவும், இது ஒட்டுமொத்த பிராந்திய வலயத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது` என்று சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான பேராசிரியர் ரொஹன் குணரட்ன தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ரொகான் குணரட்ண சிறீலங்காவின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பில் முக்கிய பங்காற்றுபவர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான புலனாய்வு வலையமைப்பிலும் கணிசமான அளவில் பங்களிப்பவர். கடந்த வாரத்தில், இந்தியப் புலனாய்வுப் பிரிவினரால் இலங்கையைச் சேர்ந்த சாகீர் ஹசெய்ன் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்ட பின்னர் பேராசிரியர் ரொஹன் குணரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியகச் செயற்பட்ட முகமது சாகீர் ஹசெய்ன் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தையும், பெங்களூரில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தையும் தகர்ப்பதற்கான சதித் திட்டங்களுக்கு உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஏராளமான நிழற்படங்களும், இந்திய கள்ள ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவர், கைது செய்யப்பட்ட மறுநாள், சென்னை மத்திய தொடருந்து நிலையத்தில் இரு குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன.
இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதோ, இல்லையோ, தீவிரவாதிகள் தமிழகத்தைக் குறி வைத்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்தியாவில், பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் செயற்படுவதும், தீவிரவாதிகள் மூலம் தாக்குதல் நடாத்துவதும் வழமையானது எனினும், அதன் செயற்பாடுகள் இப்போது தமிழகத்தை மையப்படுத்தி, விரிவடைந்து வருகின்றது. கடந்த வருடத்தில், இதே குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவரையும், கொழும்பிலுள்ள பாகிஸ்தான் துதரக உளவுத் துறையினரே இயக்கி வந்ததற்கான ஆதாரங்களும், தமிழகத்தின் முக்கிய இலக்குக்கள் குறித்த தகவல்களும், நிழற்படங்களும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால், சிறீலங்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் இந்த உளவு நடவடிக்கையில் சிறீலங்கா அரசின் பங்கு என்ன என்பதே. ஏற்கனவே, பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்திடம் பயிற்சி பெறும் இந்தியர்கள், இலங்கை ஊடாகவே பயணத்தை மேற்கொள்கின்றார்கள். இலங்கை செல்லும் இவர்களுக்கு, பாகிஸ்தான் தூதரகத்தால் விசேட ஏற்பாடுகள் செய்யப்படுவதால், இவர்கள் பாகிஸ்தான் சென்று வந்ததற்கான அடையாளங்கள் எவையும் இவர்களது கடவுச் சீட்டில் பதியப்படுவதில்லை. இவர்கள், இலங்கைக்கு சுற்றுலா செல்வது போன்ற தோற்றப்பாட்டுடன் இந்தியாவில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கான பயிற்சியை பாகிஸ்தானில் மேற்கொண்டு வருகின்றார்கள். இது, சிறீலங்கா அரசுக்குத் தெரியாது நடைபெறுவது சாத்தியமே இல்லை. இந்தியா மீதான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் களம் அமைத்துக் கொடுத்துள்ளது என்பதே உண்மை.
இலங்கைத் தீவில் தமிழ் மக்களது இராணுவ, அரசியல் பலம் நொருக்கப்பட்ட பின்னர், பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள ஈழத் தமிழர்கள் வேகமாகப் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். தொடரும் கைதுகளும், கடத்தல்களும், கலாச்சார சீரழிவுகளும், கட்டாய கருக்கலைப்புக்களும், படுகொலைகளும் தமிழ் மக்களது புலப்பெயர்வை அதிகரிக்க, அதே வேகத்தில் தமிழர் தாயகத்தின் மீதான சிங்களக் குடியேற்றங்களும், நில அபகரிப்புக்களும் தொடர்கின்றது. இவ்வளவு காலமும், இந்தியாவின் தென்பகுதிக்கான பலத்த அரணாக இருந்த தமிழ் மக்களது அழிவும், வீழ்ச்சியும் இந்தியாவுக்குத் தொடர் அச்சுறுத்தலை உருவாக்கப்போகின்றது.
சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் மிகவும் நெருக்கத்தைப் பேணும் சிங்கள ஆட்சியாளர்கள் எப்போதுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே இருக்கப் போகின்றார்கள். இந்திய ஆட்சியாளர்களது தவறான வெளியுறவுக் கொள்கை, தமிழகத்தின் அமைதிக்குப் பலத்த சவாலினை உருவாக்கியுள்ளது. சிங்கள தேசத்தின் நட்புறவுக்காக இதுவரை தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையின் வெறியாட்டத்திற்குப் பலி கொடுத்த இந்திய ஆட்சியாளர்கள், அதே நட்புறவுக்காகத் தமிழகத்தின் அமைதியையும், தமிழர்களது உயிர்களையும் பலி கொடுக்கப் போகின்றார்களா? இந்திய - சிறீலங்கா நட்புறவுக்கான அடுத்த பலிபீடம் தமிழகமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment