September 1, 2016

யுத்த நினைவாலயம் அழிப்பு ; மஹிந்த சாடல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பை மகிழ்ச்சிப்படுத்தவே குருநாகலில் உள்ள யுத்த வீரர்கள் நினைவாலயத்தை அரசாங்கம் அகற்றியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ச இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

யுத்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களால் குருநாகல், மலிகப்பிட்டி விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பிரசாரத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் யுத்தத்தில் அங்கவீனமடைந்த படைவீரர்கள், யுத்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், கூட்டு எதிர்கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் இந்த எதிர்ப்பு பிரசாரத்தில் பங்கேற்றிருந்தனர்.

யுத்த வீரர்களுக்கான நினைவாலயத்தை அழிக்கும் செயற்பாட்டை தீவிரமாக எதிர்ப்பதாகவும் இதன் ஊடாக யுத்த வீரர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் யுத்த வீரர்களை அனுசரிப்பதில் அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டிருப்பது புலப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

யுத்த வீரர்களின் நினைவாலயத்திற்கு பாதகம் ஏற்படாமல், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க முடியும் என குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச, அந்த நினைவாலயத்தை மீண்டும் நிர்மாணிக்காவிடின் அதற்கு எதிராக வழக்கு தொடரப் போவதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment