August 12, 2016

புனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு உண்மையில் நடந்தது என்ன?

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் பன்னிரண்டாயிரம் பேர் வரையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தொழில்
உதவிகளையும் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் தொழில் வசதிக்கான உதவிகள் சரியான முறையில் கிடைக்காமல் இன்றும் பலர் அல்லல்படும் நிலையே காணப்படுகின்றது. பல முன்னாள் போராளிகள் குடும்பங்கள் அடுத்த நேர சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. சமூகத்தில் அவர்களுக்கு உரிய கௌரவம் கிடைப்பதில்லை. காரணம் புனர்வாழ்வின் பின் வந்தவர்களை தற்போது எமது மக்கள் பார்க்கும் விதம் வேறு விதமாக உள்ளது. இவ்வாறாக பல நெருக்கடிகளை அவர்கள் எதிர் கொண்டு வரும் நிலையிலேயே புனர்வாழ்வு பெற்று வந்த 107 முன்னாள் போராளிகள் தற்போது மர்மான முறையில் இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இளம் வயதினர். இதுவே புனர்வாழ்வின் போது இவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை எழச்செய்துள்ளது.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான அமர்வுகள் கடந்த 26ஆம் திகதி முதல் வெள்ளிக்கிழமை வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது. முன்னர் இருந்து வந்த நெருக்குதல்கள், இராணுவ அச்சுறுத்தல்கள் ஓரளவு தற்போதைய ஆட்சியில் குறைந்துள்ளமையால் பலரும் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதன்போது புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் சாட்சியமளித்துள்ளனர். இவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பூதாகரமாக மாறியுள்ளது. முன்னாள் போராளி ஒருவர் சாட்சியமளிக்கையில் ‘தமக்கு புனர்வாழ்வின் போது ஊசி ஏற்றப்பட்டதாகவும், அந்த ஊசி ஏற்றப்பட்ட பின் தமது உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அந்த ஊசியால் தான் முன்னாள் போராளிகள் மரணமடைகின்றார்கள் என்ற சந்தேகத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். அத்துடன் புனர்வாழ்வின் போது தமக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட உணவுகளில் கூட இரசாயனங்கள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் தமக்கு வழங்கப்பட்ட உணவுகளை இராணுவத்தினர் உண்ண மறுத்ததாகவும், தமக்கு வீட்டில் இருந்து வந்த உணவுகளை இராணுவத்தினரும் வாங்கி உண்டாதாகவும்’ கூறி அந்த சந்தேகத்தை வலுப்படுத்தும் வகையில் கூறியுள்ளார். உண்மையில் புனர்வாழ்வின் போது முன்னாள் போராளிகளுக்கு என்ன நடந்தது…?, அவர்களுக்கு ஏன் ஊசிகள் ஏற்றப்பட்டன…?, அந்த ஊசிகளுக்குள் இருந்தது என்ன…? போன்ற பல வினாக்கள் உள்ள நிலையில் இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கு அவர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் தற்போது வலுவடையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் புனர்வாழ்வின் போது அவ்வாறு நடந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதா என்ற சந்தேகம் பலரிடம் தற்போது எழுந்துள்ளது. சாதாரணமாக ஒரு சந்தேகத்தின் பெயரில் அல்லது ஒரு குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்படுபவருக்கு விசாரணைகளின் போது பொலிசாரால் பின்பற்றப்படுகின்ற நடைமுறை வெளியில் தெரியாது. உடலில் வெளித்தெரியாத வகையில் உட்காயங்கள் ஏற்படும் வகையிலான சித்திரவதைகளும் விசாரணைகளுமே அங்கு நடைபெறும். அது தொடர்பில் பொலிசாருக்கும் பயற்சிகள் வழங்கப்பட்டிருக்கும். சாதாரணமாக பொலிசாரால் கைது செய்யப்படுவர்கள் 24 மணித்தியாலத்திற்குள் நீதிமன்றில் முற்படுத்தப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கே விசாரணைகளின் போது உட்காயம் ஏற்படும் வகையிலான சித்திரவதைகள் இடம்பெறுகின்ற போது முன்னாள் போராளிகளுக்கு அவ்வாறு இடம்பெற்றிருக்க முடியாது என கருத முடியாது. பொலிஸ் விசாரணையில் நீண்டகாலம் இருந்தவர்கள் சமூகத்தில் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்ததாக இல்லை. அவர்கள் உடல் ரீதியாக பலவீனமாவர்களாக அல்லது நோய்வாய்ப்பட்டவர்களாக அல்லது அவர்களது ஆயுட்காலம் குறைவாகவே இருந்துள்ளது. சிலர் சிறைச்சாலைகளில் கூட மரணமடைந்த சம்பவங்களும் உள்ளது.
முன்னாள் போராளிகள் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு விசாரணைகள் என்பது வேறு விதம். அவர்களிடம் இருந்து பல தவல்களை பெற வேண்டிய தேவையில் இராணும் இருந்தது. மறுபுறம் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் கூட முன்னர் இருந்திருக்கவில்லை. அப்படியாயின் சாதாரணமாக 24 மணித்தியாலயத்திற்குள் நீதிமன்றில் ஒப்படைக்கப்படுபவருக்கே அந்த நிலை என்றால் நீதிமன்றமே செல்ல வேண்டியதில்லை என்ற நிலையில் இருந்தவர்களுக்கு எவ்வாறான சித்திரவதை மற்றும் விசாரணைகளின் போது எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்கும் என்பது இயல்பாகவே புரிந்து கொள்ளக் கூடியதே.
யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த நிலையிலேயே தற்போது 107க்கும் மேற்பட்ட முன்னாள் பேராளிகள் மர்ம சாவுகளை எதிர்கொண்டுள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் சாதரணமாக 20 வயதில் இருந்து -40 வயதிற்குட்பட்ட இளம்பராயத்தினர். அவ்வாறெனில் புனர்வாழ்வின் போது குறிப்பிட்ட வயதினை உடைய இளைஞர்கள், யுவதிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகம் உள்ளது. ஒரு இனத்தின் இனவிருத்தியையும், அவர்களது நாளாந்த செயற்பாடுகளையும், குடும்ப கட்டமைப்புக்களையும் சீர்குலைக்கும் வகையில் உடலியல் தாக்கங்களை ஏற்படுத்துவதற்காக இவை இடம்பெற்றனவா என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் தற்போது புனர்வாழ்வின் பின் வெளியில் வந்த பல முன்னாள் போராளிகள், பயங்கரவாத தடைச்சட்டதின் கீழ் இருந்து வந்தவர்கள் தமது கண்பார்வை குறைவடைவதாகவும், உடல் நிலை சோர்வடைவதாகவும், குடும்ப வாழ்வியல் வெறுப்பதாகவும், கடினமான வேலைகளை செய்ய முடியாதுள்ளதாகவும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கிட்டத்தட்ட புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த அதேயளவு தொகையினர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் சிலர் தடுப்பின்போது இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் அங்கு பின்பற்றப்பட்ட நடைமுறைகளால் மரணமடைந்தார்களா என்ற கேள்வியும் எழுகிறது.
ஆனால், இராணுவம் அவ்வாறான ஊசி மருந்துகள் எவையும் ஏற்றப்படவில்லை என மறுத்துள்ளது. இந்நிலையில் இவை தொடர்பில் அறிய இவர்களுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இலங்கை மருத்துறையில் அதற்கான வசதி வாய்ப்புக்கள் இருக்கின்றதா அல்லது அதற்கு இடம் கொடுக்குமா என்ற கேள்வி உள்ளது. ஏனெனில் 107 முன்னாள் போராளிகளும் மரணடைந்த போது அவர்களது இறப்பை இலங்கை மருத்துவ துறையால் தடுக்க முடியாமல் போயிருந்தது. அவர்களது இறப்புக்கான காரணம் தொடர்பிலும் தெளிவற்ற தன்மையே காணப்படுகின்றது. எனவே, இதற்கு ஒரு முறையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற வேண்டும். அதற்கு இந்த அரசாங்கள் இடம் கொடுக்குமா அல்லது குறைந்த பட்சம் மனிதாபிமான ரீதியிலாவது நடந்து கொள்ளுமா என்பதே இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி.

No comments:

Post a Comment