August 12, 2016

முன்னாள் ஜனாதிபதி பிரச்சினையை தீர்த்திருந்தால், புலிகளின் தலைவர் இன்று எம்மோடு இருந்திருப்பார்! விஜயகலா!

வடக்கின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாங்கம், அதே முக்கியத்துவத்தை நிரந்த அரசியல் தீர்வுக்கும் வழங்க வேண்டுமென சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதியின் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் தமிழ் மக்களது பிரச்சினைகளை தமிழ்த் தலைமைகள் சரியாக கையாண்டிருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் எம் மக்களும் எம்மோடு இன்று உடன் இருந்திருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச செயலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற குடிநீர் தாங்கி கையளிப்பு நிகழ்வில் உரை யாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

தற்போதுள்ள நல்லாட்சி அரசின் காலத்தில் லைக்கா மொபைலின் ஞானம் பவுண்டேசன் வடக்கில் 3 ஆயிரம் தண் ணீர் தாங்கிகளை அமைத்து கொடுக்க முன்வந்துள்ளனர். இதனை வரவேற்கிறோம்.

முன்னைய ஆட்சிக்காலங்களில் தீவுப்பகுதிகளில் சரியான பாதுகாப்பு இல்லை. தமிழ் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் இந்த பகுதிகள் இருந்தன. இதனால் இங்கு பல வருட காலமாக அபிவிருத்தி என்பதே இடம்பெறவில்லை.

இப்போது கூட இங்குள்ள பல கிணறுகள் மூடப்பட்டுள்ளன. அப்போது இங்கு வருவது அச்சுறுத்தலாக இருந்த காரணத்தினால் அவை புனரமைக்கப்படவில்லை. இவ்வாறு பல அபிவிருத்திகளும் பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதியின் காலத்தில் எமது பிரச்சினையை தீர்த்திருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட அனைத்து மக்களும் இன்று எம்மோடு உடன் இருந்திருப்பார்கள். எமது சொத்துக்களும் அழிவடைந்திருக்காது.

எமது அரசியல் தலைவர்கள் பல இடங்களில் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விட்டனர். இதனால் தான் நாம் காலம் காலமாக அழிவுகளை எதிர்நோக்கி வருகின்றோம்.

சந்திரிகா தலைமையில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. இதே போல் தமிழின தீர்வு திட்டத்திற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். இந்த அரசை தவறவிட்டால் எப்போதும் தீர்வை பெற்றுவிட முடியாது.

காணாமல் போனோருடைய பிரச்சினைகளை குறுகிய காலத்தில் தீர்த்து வைக்க வேண்டும். எனது குடும்பமும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்டிருந்தது.

இதே போல் வடக்கு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனது கணவனின் உயிரும் தமிழ் ஆயுதக்குழுக்களினால் தான் பறிக்கப்பட்டது.அன்று தீவகம் வரமுடியாத நிலை காணப்பட்டது ஆனால் இன்று மக்களின் வீடுகளுக்கு நாமே வந்து குடிநீர் வழங்கி வருகின்றோம்.

இது தான் உண்மையான அபிவிருத்தி என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment