July 18, 2016

ஆடிக் கலவரத்தை நினைவுபடுத்தும் யாழ்.பல்கலை மோதல்?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் மீண்டும் இனவன்மம் சார்ந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏகப்பட்ட சிங்கள மாணவர்கள் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்-குறித்த சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் முழுவதிலும் வெசாக் கூடுகளைக் கட்டி தமது பெளத்த அடையாளங்களை காட்சிப்படுத்துவதில் மிகத் தீவிரமாக இருந்தனர்.

இது தொடர்பில் பலரும் தமக்குள் ஆதங்கப்பட்டுக் கொண்டாலும் ஒரு பல்கலைக்கழகத்தில் அமைதியை பேண வேண்டும் என்ற நல்ல நோக்கில் பல்கலைக்கழக நிர்வாகம் இவற்றைக் கண்டும் காணாமல் விட்டிருந்தது.

இதேநிலைப்பாடு பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்களிடையேயும் இருந்தது.

இன ஒற்றுமை, மத ஒற்றுமை; பல்கலைக்கழகத்தில் ஏற்படுகின்ற இன உறவு இந்த நாட்டின் இன ஒற்றுமையை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் சிங்கள மாணவர்களின் திட்டமிட்ட மத அடையாளப்படுத்தல்கள் ஜீரணிக்கப்பட்டன.

வெசாக் தினங்களில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குச் சென்று வழிபாடு செய்யாத சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முழுமையிலும் வெசாக்கூடு கட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டதன் பின்னணியில் ஏதோ ஒரு சக்தி செயற்படுகின்றது என்ற உண்மை உணரப்பட்டது.

இருந்தும் சிங்கள மாணவர்கள் தம்மை மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நிலைமைகள் கையாளப்பட்ட போதிலும், நேற்று முன்தினம் விஞ்ஞானபீடத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டி நடனம் ஆடும் ஏற்பாடுகள் வெளியில் இருந்து செயல்படுத்தப்பட்டு அரங்கேற்றப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வந்த சிங்கள மாணவர்களுக்கு கண்டி நடனம் ஆட வேண்டிய தேவை என்ன? என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

மங்கள வாத்தியங்களுடன் விருந்தினர்களும் புதுமுக மாணவர்களும் அழைத்துச் செல்லப்படுவதே வழமை.

அந்த வழமையை உடைத்து கண்டி நடனத்தை ஆடச் செய்வதன் மூலம் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் தென்பகுதியில் இனக்கலவரத்தை உண்டு பண்ணும் சதித் திட்டங்கள் இதற்குள் இருப்பது தெரிகிறது.

அதேநேரம் சிங்கள மாணவர்கள் அனைவரும் பல்கலைக்கழக மாணவர்கள்தானா? அல்லது இவர்களால் சிலர் , மாணவர்கள் என்ற போர்வையில் உரிய ஏற்பாடுகளுடன் வந்தவர்களா? என்ற ஐயம் தமிழ் மாணவர்களிடையேயும் அவர் தம் பெற்றோர்களிடையேயும் ஏற்பட்டுள்ளதால் அச்ச உணர்வு மீண்டும் தலையெடுத்துள்ளது.

ஆடி மாதப்பிறப்பாகிய நேற்று முன்தினம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே கண்டி நடனம் ஏற்பாடு செய்யப்பட்டது என்ற சந்தேகமும்,ஆடிக் கலவரத்தை மீண்டும் ஆரம்பிக்க எடுத்த திட்டமே இது என்று தமிழ் மக்கள் தமக்குள் பேசிக் கொள்வதும் நல்லாட்சியினர் அறியவேண்டியவை.

எதுவாயினும் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது மிகவும் அவசியம்.

இல்லையெனில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலகத்தை ஏற்படுத்தி தென்பகுதியில் ஆடிக்கலவரத்தை நடத்துகின்ற தீய சக்திகளின் நோக்கம் கைகூடி விடும் கவனம்.

No comments:

Post a Comment