June 15, 2016

தமிழினத்தின் அரசியல் வரலாற்றில் ஏமாற்றமும், அவநம்பிக்கைகளும்!

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று கடந்த எட்டாம் திகதியுடன் ஒன்றரை வருட காலம் கடந்தோடி விட்டது. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் ஒரு வருட காலம் நிறைவு பெறப் போகின்றது.


இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமானது நாட்டின் வரலாற்றில் மாத்திரமன்றி உலகின் பார்வையிலும் கூட முக்கியம் மிகுந்ததொரு பதிவு ஆகும்.

சர்வாதிகாரமும் கொடுங்கோன்மையும் மிகுந்த முன்னைய ஆட்சியானது இத்தனை விரைவில் முடிவுக்கு வந்து விடுமென மக்கள் ஒருபோதுமே நம்பியிருக்கவில்லை. அராஜகம் நிறைந்த பத்து வருட கால ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை இப்போது நினைத்தால் கூட நம்ப முடியாததைப் போலவே இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியை மறுபக்கம் புரட்டிப் போடுவதற்குக் காரணமாகவிருந்தவர்கள் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் என்பது வெளிப்படையான உண்மை.

நாட்டின் அரசியல் வரலாற்றில் தமிழர்களும் முஸ்லிம்களும் முன்னொரு போதுமே இவ்வாறு பொதுநோக்கு ஒன்றில் ஒன்றிணைந்து நின்றது கிடையாது.

அதேசமயம் தமிழ் இனத்தின் இடர்மிகுந்த காலப் பகுதியில் முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் துன்ப வேளைகளில் தமிழர்களோ அரசியல் ரீதியில் பெரிதாகக் குரலெழுப்பியதும் இல்லை.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் மோசமான விதத்தில் ஒடுக்கப்பட்டதனாலேயே அவ்விரு இனங்களும் ஆட்சி மாற்றத்துக்காக பொதுவான குறிக்கோள் ஒன்றின் கீழ் இணைய வேண்டிய தேவை இருந்தது.

அதாவது, இவ்விரு இனங்களும் தமது எதிர்கால நலன் கருதியே மஹிந்தவைத் தோற்கடித்து புதிய ஆட்சியொன்றை மலரச் செய்வதற்கு முற்பட்டன.

தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களது நலன் கருதி அவ்வாறானதொரு தீர்மானத்துக்கு வந்தது ஒருபுறமிருக்க, இன்றைய அரசாங்கத்தின் பெரும் நன்றிக்குரியவர்கள் அவ்விரு இனங்களைச் சேர்ந்த மக்களேயாவர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவினரும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஏனைய முற்போக்கு சிந்தனையுடைய கட்சிகளும் முன்னைய ஆட்சியை வீழ்த்தி புதிய அரசு ஒன்றை ஏற்படுத்த முனைந்த போதிலும், தமிழர்களும் முஸ்லிம்களும் ஆதரவாளித்திருக்காது போனால் ராஜபக்சாக்களின் அராஜகமே இன்றும் கூட தொடர்ந்து கொண்டிருக்குமென்பதில் சந்தேகமில்லை.

எனவே இன்றைய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை அவர்களது இலட்சியம் வெற்றியடைவதற்கு கைகொடுத்து உதவிய தமிழர்களும் முஸ்லிம்களும் என்றுமே நன்றிக்குரியவர்களாகின்றனர்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றாகக் கைகொடுத்துள்ள போதிலும் இரு இனங்களினதும் குறிக்கோளுக்கான நோக்கங்கள் ஒன்றானவையல்ல.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை தமது மத அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்பதே பிரதான எண்ணமாக இருந்தது.ஏனெனில் முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதைப் போன்று முஸ்லிம்கள் முன்னொரு போதுமே மத நிந்தனைக்கு உள்ளாக்கப்பட்டதில்லை.

முன்னைய ஆட்சி தோற்கடிக்கப்பட்டமை முஸ்லிம்களின் பார்வையில் வஞ்சம் தீர்க்கப்பட்ட நடவடிக்கையென்பதே உண்மை.

advertisement


வடக்கு, கிழக்குத் தமிழர்கள் மிக நீண்ட காலமாக அரசியல் அபிலாஷைகளையும் ஏக்கங்களையும் தம்வசம் கொண்டிருப்பவர்கள்.

அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் அவர்கள் தொடர்ச்சியாகவே ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள்.

இந்நாட்டில் சிங்கள மக்களுக்கு இருப்பதைப் போன்ற தொன்மையான வரலாறு வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு உண்டு.

ஆங்கிலேயர்கள் 1948 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுதந்திரத்தை வழங்கிய வேளையிலும் வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை.

அதன் பின்னரான சுதந்திர இலங்கையின் வரலாற்றில் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை தமிழர்கள் இன்று வரை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றனர்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னராவது அரசியல் தீர்வுக்கான புதிய முயற்சிகள் ஆரம்பமாகுமென தமிழர்கள் நம்பியிருந்த போதிலும் மஹிந்தவின் ஆட்சியில் ஏமாற்றமே மிஞ்சியது.

முன்னைய ஆட்சி மீதான அவநம்பிக்கையும், எதிர்கால அரசு மீதான நம்பிக்கையுமே தமிழர்களை மைத்திரி – ரணில் அணியை நோக்கி அணி திரள வைத்தது.

தங்களது அரசியல் அபிலாஷைகளை மைத்திரி – ரணில் கூட்டணி புரிந்து கொள்ளுமென வடக்கு, கிழக்குத் தமிழர்கள் முழுமையாக நம்பினர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்து விட்ட இன்றைய சூழலில் காட்சிகளும் நிறையவே மாறிப் போயிருக்கின்றன.

ஆட்சி மாற்றத்தின் ஆரம்பத்தில் தமிழர்கள் மத்தியில் காணப்பட்ட நம்பிக்கைகள் இன்று படிப்படியாகவே அகன்று கொண்டிருக்கின்றன.

இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்னெடுப்புகள் அரசாங்க மட்டத்தில் குறைந்த பட்சமேனும் இடம்பெறுகின்றனவா என்பதைக் காண முடியாதிருக்கிறது.

தமிழர்கள் விடயத்தில் அரசுக்குள் இன்று இடம்பெறும் நகர்வு என்னவென்பதையே கண்டு கொள்ள முடியாதிருக்கிறது.

வடக்கு, கிழக்குக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதை முறியடிப்பதற்குத் தயாராக தென்னிலங்கையில் எவ்வேளையிலும் பலமான எதிரணியொன்று காத்திருக்கிறது.

எதுவித அரசியல் தர்மங்களையும் கடைப்பிடிக்காத நிலையில், அந்த அணியினர் வெளிப்படையாகவே இனவாதத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

அதேசமயம் அரசாங்கமோ இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தனது அத்தனை முயற்சிகளுக்கும் மஹிந்த அணியினர் தடை போட்டுக் கொண்டிருப்பதாக இன்னும் கூறிக்கொண்டேயிருக்கின்றது.

எதிரணியின் தடைக்கற்களை முறியடித்து தீர்வு முயற்சியை முன்கொண்டு செல்லக்கூடிய ஆளுமையையும் அரசிடம் காண முடியாதிருக்கிறது.

இவ்வாறான அரசியல் சூழ்நிலையின் மத்தியில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சாத்தியப்படுமென்பதில் நம்பிக்கைகள் மறைந்து கொண்டேயிருக்கின்றன.

தென்னிலங்கையினால் தாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அரசியல் தீர்வு என்பது வெறும் கானல் நீர் என்றுமே அவர்கள் நம்புகின்றனர்.

No comments:

Post a Comment