September 3, 2014

பிரகடனங்கள் தோல்வியடைந்தால் மாத்திரமே, கூட்டமைப்பு மாநாடு நடத்துவாராம் மாவை!

தேர்தல் சட்டத்திட்டங்களுக்கு அமைய, தேர்தல் திணைக்களத்தில் தம்முடைய கட்சிகளின் பதிவை தக்க வைப்பதற்காக ஒவ்வொரு கட்சிகளும்
தங்களது வருடாந்த கூட்டத்தையோ அன்றி, சிறப்பு மாநாட்டையோ நடத்த வேண்டிய தேவையிருக்கிறது. அவ்வாறு செய்யத்தவறின் கட்சிகளின் பதிவு இரத்துச்செய்யப்படும்.
இதற்காக, தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் நான்கு கட்சிகளும் மாநாடோ அன்றி, பொதுக்கூட்டமோ நடத்துவது தவறில்லை. ஆனால் இந்த நான்கு கட்சிகளும் தத்தமது தனித்துவத்தை பேணுவதற்கு பதிலாக, கூட்டமைப்பின் ஐக்கியத்தையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டையும் வலியுறுத்தி, மக்கள் மயப்படுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் (தமிழரசுக்கட்சியை தவிர), தமிழ் தேசியக்கூட்டமைப்பை வலிமை மிக்க சட்டவலுவுள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளீர்க்கின்ற “ஒரே கட்சி, ஒரே கொள்கை” அமைப்பாக மிளிரச்செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் ஏக்கத்துடனும் உழைக்கின்றன. அதற்காகவே காத்திருக்கின்றன.
நடைபெற்று முடிந்துள்ள (யாழ்ப்பாணத்தில்) ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினதும், புளொட்டினதும் (சுவிஸ்ஸில்) வருடாந்த மாநாட்டில், இவ்விரு கட்சிகளும் ஐக்கியம் எனும் தமது நிலைப்பாட்டை மிகத்தெளிவாக அறிவித்து விட்டன. ரெலோ கட்சியினது நிலைப்பாடும் அதுவாகவே உள்ளது என்று அக்கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் தமது விருப்பத்தை கூறி விட்டார்.
இந்நிலையில் தமது 15வது மாநாட்டுக்காக தயாராகிவரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை.சேனாதிராசா, தமது கட்சியின் பிரகடனங்களில் ஒன்றாக,
“கேள்வி குறியாக்கப்பட்டிருக்கும் காணாமல் போனோர் விடயம், திட்டமிட்ட நில அபகரிப்பு, குடிப்பரம்பல் மாற்றம், பௌத்த பிக்கு அமைப்புகள் மற்றும் கடும்போக்கு சிங்கள அமைப்புகளின் தீவிரவாத போக்கு போன்றவற்றை தடுத்து நிறுத்துவதற்கு, இலங்கை தமிழரசுக்கட்சி வழங்கும் குறிப்பிட்ட கால அவகாசத்தை அரசு காலம் கடத்துமெனில், உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் விசேட மாநாடொன்றைக்கூட்டி பின்னர் ஒன்று திரண்ட சாத்வீக போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து, பிரகடனம் வெற்றி பெற்றால் கூட்டமைப்பை உடைத்துக்கொண்டு தனிவழி போகும் நினைப்பில் இருப்பதும், பிரகடனம் தோல்வியடைந்தால் மாத்திரமே தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதென்ற முடிவிலும், தமிழரசுக்கட்சி இருக்கிறது என்பது தெளிவாகத்தெரிகிறது.
ஏற்கனவே, இலங்கை தமிழரசுக்கட்சியை கூட்டமைப்பிலிருந்து ஒதுக்கி வைப்பதற்கு சூழ்ச்சி நடைபெறுகின்றது என்று தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் கூறியிருந்த கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.

No comments:

Post a Comment