September 7, 2014

தமிழின அழிப்பிற்கு சிறீலங்காவின் கையில் புதிய ஆயுதம்!

தமிழர் தாயகப் பகுதியில் நிலைகொண்டுள்ள சிறீலங்கா ஆயுதப் படையினருக்கு தற்போது போருக்கான எவ்வித வேலையுமில்லை.
இருந்தாலும், தமிழர்களின் தாயக பூமியில் நிலைகொள்ள வேண்டும் என்பதற்காக மதுபானத்தையும், கஞ்சாவையும் தொடர்புபடுத்தி தேடுதல் வேட்டையாடுவதாகக் கூறிக்கொண்டு, பெரும்பாலும் குற்றவாளிகளை விட்டுவிட்டு, போலிக் குற்றச்சாட்டில் அப்பாவிப் பொதுமக்களை கைது செய்கின்றனர். அடக்குமுறைக்கெதிரான போராட்டத்திற்கு பயங்காரவாத முத்திரை குத்திய சிறீலங்கா பேரினவாதிகள் தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைக்கு எவ்வாறான முத்திரையை குத்தப் போகின்றார்கள்.
சிங்கள அரசாங்கத்தின் பஷப்புவார்த்தைகளை நம்பி ஏமாந்துள்ள சர்வதேச சமூகம், காலம் காலமாக ஆண்ட நீண்டவரலாற்றைக் கொண்ட தமிழ் இனம் அழிக்கப்படும்போது வேடிக்கை பார்த்தது மட்டுமின்றி அவர்களை கொன்றொழிப்பதற்கான அனைத்து உதவிகளையும் புரிந்தனர். காலம் கடந்தாலும் கூட இன்னும் அழிக்கப்பட்ட தமிழ் இனத்திற்கான நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. 2009ம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என சித்தரித்து தாயகப் பகுதியில் அநியாயங்களை மேற்கொண்ட சிங்களப் படைகள் இன்றும் அதே நாசகாரச் செயல்களையே செய்கின்றன.
வடக்கு, கிழக்கு தாயக பூமியில் ஏராளமான அடாவடித்தனங்களை மேற்கொண்டுவரும் சிங்கள ஆயுதப்படைகள் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா என்ற போர்வையில் தமிழ் பெண்களை தனது இச்சைக்கு பலியாக்கி வருகின்றனர். இதில் ஒரு கட்டமாக தென்தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரையிலுள்ள கொக்கட்டிச்சோலை பகுதியை அண்மித்த பகுதியான பனையறுப்பான் பகுதியில் அண்மையில் கள்ளச்சாராயம் தேடுதல் வேட்டையில் இரு பெண்களை சுட்டுக்காயப்படுத்தியுள்ளனர். இந்தக் கிராமமானது கொக்கட்டிச்சோலையில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் மேற்கே உள்ளது.
அத்துடன், கடந்தகால சிறீலங்கா ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது முற்றுமுழுதாக இடம்பெயர்ந்து எவ்விதமான அடிப்படை வசதிகளும் சிறீலங்கா அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படாது, அவர்கள் சுயமான தமது சொந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்பதற்காக சென்ற தமது சீவியத்தை நடாத்திவருகின்றனர். இங்கு 25ற்கும் குறைவான குடும்பங்களே வசிக்கின்றனர். பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைந்துள்ள இவர்கள் அருகிலுள்ள உன்னிச்சைக்குளத்தில் மீன்பிடியிலும், அருகிலுள்ள காடுகளிலும் விறகு மற்றம் தேன் எடுத்தல் போன்ற தொழில்களை மேற்கொண்டு தமது வயிற்றுக்காக உழைக்கின்றனர்.
தாம் உண்டு தமது வேலை உண்டு என்று தமது வாழ்வாதாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் போராடும் இவர்களை இந்த சிங்களப் படைகள் விட்டுவைக்கவில்லை. கடந்த 11ம் திகதி செவ்வாய்க்கிழமை (11.08.2014) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் அப்பாவி பெண்கள்.
காயமடைந்த கிராமவாசியான வள்ளியம்மை (வயது 52) என்பவர் வயிற்றில் காயம்பட்ட நிலையிலும், ஆறுமுகம் சறோஜினி (வயது 24) என்பவர் கையிலும் காயமடைந்த நிலையிலும் மற்றம் இரு ஆண்கள் அடிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இரவு 8.00 மணியளவில் சாதாரண உடையில்தான் அங்கு படையினர் சென்றுள்ளார்கள். குறித்த வீட்டிற்கு சென்று அந்த வீட்டுப் பெண்ணை கைது செய்து வாகனத்தில் ஏற்ற முற்பட்டபோது அந்தப் பெண்ணின் மகன் தடுத்துள்ளார். மகனைத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த பெண்கள் சிவில் உடையில் எந்தவித பதிவுகளுமின்றி கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இதனையடுத்து அவர்களைச் சமாளிக்க முடியாது சாதாரண உடையில் சென்றமையினால் காவல்துறையினர் அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்கள். ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்கள் கைவிட்டுச்சென்ற கப்ரக வாகனத்தை தீ மூட்டியுள்ளனர்.
இவர்கள் சீருடையில் சென்றிருந்தால் பொதுமக்களைப் பார்த்து பயந்து ஓடவேண்டிய அவசியமில்லை. அத்துடன், சட்டவிரோதமான மதுபானம் கைப்பெற்றும் நடவடிக்கை ஒரு சாதாரண விடயம். அதற்கு காவல்துறைதான் செல்லவேண்டும் என்பதற்கில்லை. மாறாக தற்போது சிவில் நிர்வாகம் நடைபெறுவதாக கூறும் அரசாங்கம் ஏன் இரகசிய நடவடிக்கைபோன்று சிவில் உடையில், துப்பாக்கியுடன் செல்லவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. எனினும் சிங்கள காவல்துறையினர் கள்ளச்சாராயம் பிடிக்க வேண்டும் என்றால் சிறீலங்காவின் அதிபர் மற்றும் அவர்களின் அமைச்சர்களை முதலில் கைது செய்து நீதிமன்றில் ஏற்றவேண்டும். இவர்கள்தான் அளவுக்கு அதிகமாக மதுபானசாலைகளை அமைக்க உத்தரவுப் பத்திரங்களை பெரும் பண முதலைகளில் கையூட்டல்களைப் பெற்று வழங்குகின்றார்கள்.
வர்த்தமானி அறிவுறுத்தலுக்கமைய கிழக்கு மாகாணத்தில் மொத்தம் 84 மதுச்சாலைகளே இருக்க முடியும். ஆயினும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 60 மதுச்சாலைகள் உள்ளன. அதிலும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 29 மதுச்சாலைகள் உள்ளன. இவை பாடசாலைகள், மத ஸ்தலங்கள், பிரதான வீதிகள், மக்கள் கூடும் இடங்கள் என்பனவற்றிற்குப் பக்கத்தில் திறக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் மாதமொன்றிற்கு 41 கோடி 36 இலட்சத்து 99 ஆயிரத்து 680 ரூபாய் (413,699,680) மதுவுக்காகச் செலவு செய்யப்படுவதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு மகளிர் அமைப்புக்களின் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் குடும்பங்களைத் தவிர்த்து மீதியாகவுள்ள 115,555 குடும்பங்களைப் பிரித்துப் பார்த்தால் ஒரு குடும்பம் மதுவுக்காக மாதாந்தம் 3,580 ரூபாவினைச் செலவிடுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டம் கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுப் போயுள்ள நிலையில் தற்போது மதுப்பாவனையும் மட்டக்களப்புக்கு ஒரு கேடாக அமைந்துள்ளது. வறுமை, புற்று நோய், மதுப்பாவனை ஆகியவற்றில் மட்டக்களப்பு மாவட்டம் முதன்மை இடத்திலுள்ளது என்பது வேதனைக்குரியது. பாடசாலை மாணவர்களும், பெண்களும் இத்தகைய மதுச்சாலைகளால் பெரிதும் உபத்திரவத்திற்கு உள்ளாகின்றார்கள்.
எனவே, அரசாங்க வர்த்தமானி அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பில் மதுபானச்சாலைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். பாடசாலைகள், மத ஸ்தலங்கள், பிரதான வீதிகள், மக்கள் கூடும் இடங்கள் என்பனவற்றிற்குப் பக்கத்தில் திறக்கப்பட்டுள்ள மதுச்சாலைகளை அகற்ற வேண்டும். இலங்கையில் தயாரிக்கப்படும் அதிக செறிவுள்ள உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் மதுபானங்கள் மட்டக்களப்பில் விற்பனையாவதைத் தடை செய்ய வேண்டும்.
இதேவேளை, சிறீலங்கா அரசாங்கம் சமாதானம் என்று கூறும் 5 வருட காலகட்டத்தில் வடகிழக்கு மாகாணங்களை பொறுத்தளவில் கலாசார சீரழிவுகள், மாணவர் தற்கொலை அதிகரிப்பு, மதுபான சாலைகளின் அதிகரிப்பு ஆகியவையே அதிகரித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் படுவாங்கரை பிரதேசத்தினை எடுத்து நோக்கும் போது (ஐந்து வருடங்களுக்கு முன்பு) எந்த ஒரு மதுபான சாலைகள் கூட இருந்ததில்லை. ஆனால் அரசாங்கம் கூறும் சமாதான காலப்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்ட மதுபானசாலைகள் புதிதாக திறக்கப்பட்டு மக்களின் பொருளாதாரத்தினை சீரழித்து வருகின்றது. இதுதான் அரசாங்கம் செய்த மிகப்பெரிய சேவையாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த வரையில் ஏனைய மாவட்டங்களை விட வறுமை நிலை கூடிய மாவட்டமாக கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக இலங்கையின் வறுமை நிலை இன்று 8.5 வீதமாகும். ஆனால் 25 மாவட்டங்களையும் எடுத்துக்கொண்டால் மட்டக்களப்பு மாவட்டமே 21.6 வீதமான வறுமைக் கோட்டினை காட்டி நிற்கின்றது. இந்த மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் வறுமைக்கும், மதுபான பாவனைக்குமிடையே நெருங்கிய தொடர்பிருக்கின்றது என்பதனை யாவரும் அறிந்திருப்பது கட்டாயமானதாகும்.
இவ்வாறான நடவடிக்கை என்பது சிங்கள பேரினவாத சக்திகளினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பின் ஒரு அம்சம். தமிழர்களின் கல்வியை சீரழிக்க சிங்களப் படைகளினுடாக தமிழ் மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமாத்திரமல்ல மாலை வேளைகளில் செறிவுகுறைந்த மதுபானங்கள் வழங்கப்படுகிறது.
அதேபோன்று மாணவிகள், கணவனை இழந்த பெண்கள், சிறார்கள் என அனைவரையும் பாலியல் ரீதியாக சீரழிக்கின்றனர். அவ்வாறு தாய் மண்ணை அபகரிக்கின்றனர். இவையனைத்தும் இன அழிப்பின் ஒரு கருவியாகவே பயன்படுத்துகிறது சிங்கள பேரினவாத சக்திகள். இவற்றுக்கு துணைபோகிறது சில புல்லூருவிக் கூட்டங்கள். இன்று சமாதானம் என்று கூறி தமிழர்களுடைய கலாச்சாரத்தினை மலினப்படுத்தி அதற்கு மாறான செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது.
எனவே, சிங்களம் போட்டுள்ள சதித்திட்டத்தை முறியடிக்க தமிழ் தரப்பிலுள்ள அரச அதிகாரிகள், வர்த்தகர்கள், விவசாயிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புக்கள், தமிழ் அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டு முறியடிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு.
- கிழக்கில் இருந்து எழுவான் 
நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment