May 7, 2014

பிரான்சில் நடைபெற்ற புலன்மொழித் தேர்வு 2014

பிரான்சு தமிழ்ச்சோலைப்பணியகம் தமிழ்க்குழந்தைகளின் வாசிப்புத்திறன், மற்றும் கேட்டல், பேசுதல் போன்ற முத்திறனையும் ஊக்குவிக்கும் வகையில் “ புலன்மொழித்தேர்வினை  ’’ நடாத்தி வருகின்றனர். ஆண்டு தோறும் வருடத்தின் மே மாதத்தில் பிரான்சு நாடுரீதியாக மாநிலம், மாவட்ட வாரியாக இத்தேர்வு நடைபெற்று வருகின்றது.


04.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்த இத்தேர்வு எதிர்வரும் 10ம் திகதி, 11ம் திகதியிலும் காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ளது. தமிழ்ச்சோலைகளில் கல்விகற்பித்து வரும் ஆசிரியர் கள் தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தின் திட்டமிடலுக்கும், பயிற்சிக்கு அமைய அனைத்துப் பாடசாலைக்கும் சென்று தமது தேர்வுகளை நடாத்தி வருகின்றனர். ஒவ்வொரு தமிழ்க் குழந்தைகளின் தமிழ் மொழி மீதானதிறன் ஒவ்வொரு ஆண்டும் எத்தகைய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது என்பதையும் இதன்மூலம் காணக்கூடியதாக இருக்கின்றது. இத்தேர்வின் பின்னர் யூன் மாதம் நடைபெறவுள்ள தமிழ்மொழிபொதுத்தேர்விற்கும் ஒத்தசையாகவும் இது இருந்து வருகின்றது.


புலம் பெயர் மண்ணில்  எம் தமிழ்க்குழந்தைகள் பல்வேறு மொழியை கற்றுக் கொண்டுவருவதும், அதனால் சகதமிழ் மாணவர்களிடமோ நண்பர்களிடமோ தாய்மொழியான தமிழ்மொழியில் உரையாடுவதை விட்டு தமக்கு சுலபமான வாழ்விட மொழியில் உரையாடுவதை வழக்கமாக கொண்டு வருகின்றனர். இதற்கு காரணம் தம் தாய்மொழியில் அவர்கள் சரியாக கதைக்க முடியாதுள்ளமையும், கூச்சப்படுவதும்  இன்னும் பெற்றோர்கள் சிலரின் அக்கறையின்மையும், தாய்மொழியின் மகிமையை தெரியாமையுமே காரணமாக அமைந்துள்ளது என்பது தமிழ் அறிஞர்களின் கருத்தாக இருந்து வருகின்ற போதும் , தமிழ்ச்சோலை தலைமைப்பணியகம் நடாத்தும் இவ்புலன்மொழித்தேர்வானது தமிழ்க்குழந்தைகள் தமிழை சரளமாக ஓரளவு பேசுவதற்கும், உச்சரிப்பதற்கும் பேருதவியாக இருந்து வருகின்றது. ஆனாலும் தமிழ்க்குழந்தைகளின் முத்திறனை ஊக்குவிக்கும் செயற்பாடு தனியே தமிழ்ச்சோலைகளுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு பெற்றோர்களும் உரிய பொறுப்பான விடயமுமாகும்.




No comments:

Post a Comment