August 19, 2016

மாவீரர்களை நினைவுகூர முடியாத நிலையில் நல்லிணக்கம் எவ்வாறு ஏற்படும்? - மக்கள் கேள்வி !

தமிழ் மக்களின் விடுதலைக்காக இறுதிவரை போராடியவர்கள்தான் மாவீரர்கள். அவர்களை நினைவுகூர இந்த நாட்டு அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எப்படி இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும். என்று வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற நல்லிணக்க செயலணி அமர்வில் மக்கள் பலர் தெரிவித்தனர்.

 
அவர்கள் மேலும் கூறுகையில், "தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற நோக்குடனும், தமிழ் மக்கள் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக - நிம்மதியாக வாழவேண்டும் என்ற குறிக்கோளுடனும் இறுதி வரை போராடி மடிந்தவர்கள்தான் மாவீரர்கள். அவர்கள் வேறு பிறவிகள் அல்லர். அவர்களும் எம்மைப் போன்று தமிழ்த் தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்தான். அவர்களை நினைவுகூர இந்த நாட்டு அரசால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எப்படி இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும்?

யுத்தத்தில் இறந்த படையினருக்கு வடக்கில் நினைவுத் தூபிகளை அரசின் அனுமதியுடன் இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர். ஆனால், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி மரணித்த எமது மாவீரர்களுக்கு நினைவுத் தூபிகள் அமைக்க இங்கு அனுமதி இல்லை. வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் உடைத்துத் தூளாக்கியுள்ளனர். எனவே, உடைக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட வேண்டும். மாவீரர்களை நினைவுகூர அரசு அனுமதி தரவேண்டும்.

வடக்கு, கிழக்கை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் உடன் வெளியேறவேண்டும். போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளுடன் விசாரணை நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும்" என்றனர்.

No comments:

Post a Comment