August 17, 2016

சம்பந்தன் மீது தாக்குதல் நடத்தவில்லை! - அன்ரனி ஜெகநாதன் மறுப்பு!

எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசித் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார்.
இன்று நடந்த வட மாகாண சபையின் மாதாந்த அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
“கடந்த ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியலை சாந்தி சிறிஸ்கந்தராசாவுக்கு வழங்கியமை தொடர்பில் நான் கடுமையான வாதத்தை முன் வைத்தேன். அப்போது கடுமையான கருத்து மோதல் இடம்பெற்றது. அப்போது ஒரு கட்டத்தில் நான் கோபமாக 'ஒலிவாங்கியை' மேசை மீது வைக்கும் போது அது கீழே வீழ்ந்து விட்டது.

அதனை சில இணைய ஊடகங்கள் நான் எதிர்கட்சி தலைவர் மீது ஒலிவாங்கியை வீசித் தாக்கினேன். அவர் மயிரிழையில் உயிர் தப்பினார் என செய்தி வெளியிட்டுள்ளனர். அது முற்றிலும் பொய். எனது கட்சிக்குள் நான் கருத்து மோதலில் ஈடுபடுவேன்.

ஆனால் எதிர்க்கட்சி தலைவர் மீது மைக் வீசி தாக்குகிற அளவுக்கு நான் செல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர் முன்பாக யாருமே கை நீட்டி பேச மாட்டார்கள். அவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு மைக் வீசி தாக்குவேன்” என தெரிவித்தார்.

No comments:

Post a Comment