August 17, 2016

கேப்பாப்பிலவு காணிமீட்பில் வடமாகாணசபை முழுமுயற்சியுடனுள்ளது ; ரவிகரன் தெரிவிப்பு!

கேப்பாபிலவு மக்களின் பூர்வீக காணிகள் விடுவிப்பு தொடர்பில் வடக்கு மாகாணசபை ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மீள்குடியேற்றத்தின்போது கேப்பாபிலவு மக்களை அவர்களின் சொந்த இடத்தில் குடியேற்றவில்லை. மாறாக, பிலக்குடியிருப்பு என்ற இடத்தில் “கேப்பாபிலவு மாதிரிக் கிராமம்” என்னும் பெயரில் தற்காலிகமாகத்தான் குடியேற்றினார்கள்.

பல நாட்கள் கடந்த போதிலும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பவில்லையே என்ற ஆதங்கத்துடன், அவ்வூர் மக்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து பல தடவை போராட்டங்கள் நடாத்தியும் தீர்வுகள் எட்டப்படவில்லை.

இதனொருகட்டமாக, தாம் தமது சொந்த இடத்திலேயே வாழ்வதற்கான வழி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2016.03.24ஆம் திகதி க.வேலாயுதம்பிள்ளை அவர்கள் சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்.

இம்முன்னெடுப்பினை எமது மாகாணமுதல்வரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியபோது கேப்பாபிலவு மக்களுக்கும், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வேலாயுதம்பிள்ளை அவர்களுக்கும் முதலமைச்சர் அவர்கள் எழுத்து மூலமான அறிவித்தலை வழங்கினார்.
அவ்வறிவித்தலைத்தொடர்ந்து 2016.03.26ம் திகதி உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

இதன்பின்பு முதலமைச்சர்  அவர்கள் இச்சிக்கல்நிலையை ஆய்வுசெய்யவென ஓய்வுபெற்ற உயரதிகாரிகள் ஐவர்கொண்ட நிபுணர் குழுவை நியமித்திருந்தார்.
சம்மந்தப்பட்ட அனைவரிடமும் இக்காணிகள் தொடர்பாக விரிவாக ஆராய்ந்து, இராணுவ முகாமை மக்களின் குடியிருப்பு பகுதிகளிலிருந்து நகர்த்த வேண்டுமென்ற அறிவித்தலுடன் அக்குழுவினர் சிபார்சு செய்திருந்தனர்.

அவர்களின் அறிக்கையானது கடந்த 2016.07.26 இல் கௌரவ முதலமைச்சர் அவர்களால் மீள்குடியேற்ற அமைச்சர்க்கு அனுப்பப்பட்டிருப்பதோடு அதன் பிரதியானது சனாதிபதியின் செயலாளருக்கும் பிரதமரின் செயலாளருக்கும் பிரதமரின் ஆலோசகருக்கும் எனக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
எமது மக்களின் பூர்வீக காணிகள் விடுவிப்புக்கான ஆக்கபூர்வ செயற்பாடுகளை வடமாகாணசபை தொடர்ந்தும் முன்னெடுக்குமென ரவிகரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment