எனது உயிர் நண்பர் த. மணிவண்ணன் அவர்களின் தந்தையார் தமிழ்த்திருகு. தர்மலிங்கம் அவர்களின் முதலாமாண்டு நினைவாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தமிழில் படித்து அதிலும் தமிழ்ப்பாடத்தில் முதல் மூன்று
நிலைகளில் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழ் இனத்தின் அரும் பெரும் அடையாளங்களான அய்யா இரா. நல்லகண்ணு, அய்யா பழ. நெடுமாறன், அய்யா த. வெள்ளையன் மூவரும் திருக்குறளோடு தங்களின் கையெழுத்திட்ட சான்றிதழ் வழங்கி- பத்தாம் வகுப்பிலும் பனிரெண்டாம் வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுத்த ஒவ்வொரு மாணவிக்கும் ரூபாய் இருபத்தைந்தாயிரமும் (இரண்டு நபர்) இரண்டாம் நிலை வந்த மூன்று மாணவிகளுக்கு பதினைந்தாயிரமும் மூன்றாம் நிலை வந்த ஒரு மாணவிக்கு ரூபாய் பத்தாயிரமும் வழங்கப்பட்டது. நிகழ்வில் பாடம் சொல்லிக்கொடுத்த தமிழ் ஆசிரியைகளுக்கும், தலைமை ஆசிரியைகளுக்கும் சிறப்பு செய்யப்பட்டது. கூடுதல் சிறப்பு பரிசு பெற்ற அனைவரும் மாணவிகள் என்பது. தமிழையும், தமிழினத்தையும் பெரிதும் நேசிக்கக்கூடிய நாங்கள் - சமீபத்தில் உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் திருமிகு கிருபாகரன் அவர்கள் " செம்மொழியை கொண்டாடுவது இருக்கட்டும்.. தமிழை வளர்க்க அரசிடம் என்ன திட்டம் இருக்கிறது " என்ற கேள்வி எங்களையும் பார்த்து கேட்டதுபோல் ஒரு பெருஉணர்ச்சி. அதன் வெளிபாட்டினால்தான் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த நம் வீட்டுப்பிள்ளைகளுக்கு எங்களால் முடிந்த இந்த படிப்புதவி. எங்களைப்போன்று தமிழையும் தமிழ் மண்ணையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களில் இருக்கும் அரசு பள்ளியில் படித்த நம் வீட்டுப்பிள்ளைகளுக்கு நீங்களும் உதவினால் நம் மொழியும் சிறக்கும், நம் மண்ணும் சிறக்கும். விழா ஏற்பாடுகளை நண்பர் த. மணிவண்ணனோடு இணைந்து இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், பாவலர் அறிவுமதி, ஏகலைவன், ஜான், அம்பத்தூர் மணி, இயக்குநர் வ. கெளதமன் ஆகியோர் செய்திருந்தனர்.வெற்றி பெற்ற நம் மாணவிகளுக்கு மீண்டும் எங்களது நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment