August 12, 2016

இலங்கையில் சர்வதேச பாடசாலைகளுக்கு கால்கட்டு! - வரப்போகும் புதிய சட்டம் !

வர்த்தக நிலையங்களை போல சர்வதேச பாடசாலைகளை இனி ஆரம்பிக்க முடியாது. சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.


 
சர்வதேச பாடசாலைகள் தொடர்பாகவும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் விசேட கூட்டம் ஒன்று நேற்று கல்வி இராஜாங்க அமைச்சர் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான உட்பட கல்வி அமைச்சின் முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவது, அதற்கான நியமங்கள் என்ன, அதற்கான வரைமுறைகள், பதிவு தொடர்பாக இருக்க வேண்டிய அடிப்படை தகைமைகள் என ஒரு செயற்திட்டத்தை உருவாக்குவதற்காக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இது தொடர்பாக ஆராய்ந்து முழுமையான அறிக்கை ஒன்றை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றார்கள்.

அவர்களின் அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்பு அது தொடர்பாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். இந்த செயற்பாடுகளை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயில்கின்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும். எமது பெற்றோர்கள் மிகுந்த சிரமப்பட்டு பாடசாலை கட்டணங்களை செலுத்தி அவர்கள் எடுக்கும் முயற்சி வீணாக போய்விடும்.சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக தனக்கு 100 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இன்று இலங்கையில் சர்வதேச பாடசாலைகள் நாள்தோறும் ஆரம்பிக்கப்படுகின்றன. இவற்றின் தரம் தொடர்பாக அல்லது இவற்றின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்கென ஒரு அமைப்பு அல்லது ஒரு அமைச்சு இல்லை.கல்வி அமைச்சு இந்த தனியார் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. அதற்கு காரணம் அவர்கள் எங்களுடனான எவ்விதமான தொடர்புகளும் இல்லை.அவர்கள் கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.கம்பனி சட்டம் என்பது ஒரு சாதாரண தனியார் நிறுவனமாகவே கருதப்படுகின்றது.அது எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சுடன் தொடர்புபடுவதில்லை.

உலகத்திலே எங்குமே இல்லாத ஒரு நிலை சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக இலங்கையில் இருக்கின்றது. பெட்டிக்கடைகள் போடுவது போல நாள்தோறும் சர்வதேச பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. இந்த பாடசாலைகள் ஒரு சில வீடுகளிலும் நடைபெறுகின்றன. ஆசிரியர்கள் என்பவர்கள் கல்வித்தகைமையை மட்டும் அடிப்படையாக கொண்டு தெரிவு செய்யப்படமுடியாது. அவர்களின் பல்வேறுவிதமான திறமைகள் அவர்களுக்கான முறையான பயிற்சிகள் வழிகாட்டல்கள் என பல துறைகளிலும் ஒரு ஆசிரியரை செதுக்கி எடுக்க வேண்டும். க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் ஆகியவற்றின் பெறுபேறுகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒருவரை ஆசிரியராக நியமிக்க முடியாது. ஆனால் இன்று அநேகமான தனியார் சர்வதேச பாடசாலைகளில் இருக்கின்ற ஆசிரியர்களின் நிலை இப்படித்தான் இருக்கின்றது.இதற்கு கடந்த காலங்களில் இந்த நாட்டில் கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள் கட்டாயமாக பதில் கூற வேண்டும்.

சர்வதேச பாடசாலைகளுக்கென்று ஒரு நடைமுறை, அவை பின்பற்ற வேண்டிய ஒழுக்கக் கோவைகள் என ஒரு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.எமது கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசமும் இந்த சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக ஒரு நல்ல முறையான வேலைத்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருக்கின்றார் என்றார்.

No comments:

Post a Comment