August 16, 2016

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும்! - அமெரிக்காவிடம் வடமாகாணசபை முறையீடு!

பயங்கரவாத தடைசட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்திற்கு அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என வடமாகாண சபை கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் இன்று பிற்பகல் வட மாகாணசபைக்கு விஐயம் மேற்கொண்டு வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையிலான வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

 
இதன்போது புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் உள்வாங்கப்படவேண்டும். அதனடிப்படையில் தீர்வும் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பை நினைவேற்றுவதாக அமைய வேண்டும் என அமெரிக்க குழுவிடம் வலியுறுத்தியதாக வட மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஐ.நா தீர்மானத்தை நிறைவேற்ற முன்னின்று உழைத்த நாடு என்றவகையில் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற அமெரிக்கா நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் படையினருக்கான நில அபகரிப்புக்கள் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான தடைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என வட மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அமெரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார்.


No comments:

Post a Comment