August 13, 2016

மரண சான்றிதழை ஒருபோதும் ஏற்க மாட்டேன்; காணாமல் ஆக்கப்பட்டவரின் மனைவி கண்ணீர் !

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்களே தனது கணவரை கொழும்பில் வைத்து கடத்தினார்கள் என காணாமல் ஆக்கப்பட்ட மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த சந்திரலிங்கம் என்பவரின் மனைவி லலிதா தெரிவித்தார்.


இதற்கான தீர்வை அரசாங்கமே வழங்க வேண்டும் எனவும் மணரச் சான்றிதழோ, அல்லது நஸ்டஈடோ தனக்கு தேவையில்லை என்றும் சந்திரலிங்கம் லலிதா குறிப்பிட்டார்.

நல்லிணக்க பொறிமுறைகள் பற்றி கலந்துரையாடுவதற்கான செயலணியின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அணியின் செயலாளர் அ. காண்டீபன் தலைமையில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மரண சான்றிதழை ஒருபோதும் ஏற்க மாட்டேன் எனக் குறிப்பிட்ட அவர், தனது கணவர் இறந்துள்ளார் எனின் அவர் என்ன குற்றம் செய்தார் என்றும் சந்திரலிங்கம் லலிதா கேள்வியெழுப்பியுள்ளார்.

என்னுடைய பிள்ளைக்கு அப்பா என்று சொல்வதற்கு எனது கணவரை மீட்டுத் தாருங்கள். 2008.02.20 திகதி எனது கணவர் கொழும்பில் வைத்தே வெள்ளை வேனில் கடத்தப்பட்டார். எனது கணவர் என்ன குற்றம் செய்தார். அதனை வெளிக் கொண்டு வாருங்கள். அவர் எந்தவிதமான குற்றச் செயலிலும் ஈடுபட்டவர் அல்ல. மாறாக காப்புறுதி நிறுவனம் ஒன்றிலே கடமையாற்றி வந்தார்.

எனவே எனது கணவர் எதற்காக காணாமல் ஆக்கப்பட்டார் என்பதனை அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டும். எனது கணவர் அநியாயமாக கொல்லப்பட்டிருந்தால் இதனை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒருபோதும் நஸ்டஈட்டையோ அல்லது மரணச் சான்றிதழையே நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment