August 4, 2016

குமாரபுரம் கொலை வழக்கு மேன்முறையீடு சாத்தியமா? பி.மாணிக்கவாசகம்

குமாரபுரம் கொலை வழக்கின் தீர்ப்பு பொதுமக்கள் மத்தியில் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ஊடகங்கள் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்திகளை வெளியிட்டு வந்தன.
இப்போது தீர்ப்பளிக்கப்பட்டு, மேல் நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஊடகங்களில் அதன் முக்கியத்துவம் குறைந்ததாகத் தெரியவில்லை. குமாரபுரம் கொலைச் சம்பவமும், அது பற்றிய வழக்கு விசாரணையும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தன. அத்துடன் சமூகத்தில் உணர்வுபூர்வமானதோர் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தமையே அதற்கு முக்கிய காரணமாகும்.

குமாரபுரம் கொலைச் சம்பவம் கடந்த 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி நடைபெற்றது. அன்றைய தினம் குமாரபுரத்தின் அயல் கிராமமாகிய தெஹிவத்த இராணுவ முகாமில் இருந்து கிளிவெட்டி இராணுவ முகாமுக்கு உணவு கொண்டு சென்றதாகக் கூறப்படும் இரண்டு இராணுவச் சிப்பாய்கள் மீது சி ஐ டி பாலம் என அழைக்கப்படும் பாலத்தில் மறைந்திருந்த விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் அந்த இருவரும் கொல்லப்;பட்டனர்.

இவ்வாறு தாக்குதல் நடத்தியவர்கள் குமாரபுரம் கிராமத்திற்குள் தப்பியோடினார்கள் என கிடைத்ததாகத் தெரிவிக்கப்படும் தகவலையடுத்து. தெஹிவத்தை முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் குமாரபுரம் கிராமத்தின் உள்ளே புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 16 வயதுடைய மாணவி ஒருவரும், கர்ப்பிணிப் பெண் ஒருவரும் வன்புனர்வின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் படுகொலைச் சம்பவத்தில் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட 7 சிறுவர்கள், 13 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர். இந்த வெறியாட்டத்தில் சம்பந்தப்பட்ட இராணுவச் சிப்பாய்களில் சிலர் மது போதையில் இருந்ததாகக் கண்கண்ட சாட்சியங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருடன் தெஹிவத்த இராணுவ முகாமைச் சேர்ந்த சிங்களக் கிராமவாசிகளான ஊர்காவல் படையினரும் குமாரபுரம் கிராமத்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இணைந்திருந்ததாக சர்வதேச மன்னிப்புச் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கூட்டமாகக் கிராமத்தினுட் புகுந்து கண்ணில் அகப்பட்டவர்களைச் சுட்டுத்தள்ளிய இராணுவத்தைக் கண்டதும். ஊர் மக்கள் வீடுகளில் புகுந்து கதவுகளைச் சாத்திவிட்டு ஒளிந்து கொண்டனர். வீட்டுக் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த இராணுவத்தினர் கையெடுத்து கும்பிட்டவர்களையும் சுட்டுத் தள்ளியதாக, இந்தச் சம்பவத்தில் காயங்களுடன் உயிர் தப்பி சாட்சியம் அளித்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்த குமாரபுரம் படுகொலை வழக்கு முதலில் மூதூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதன் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டது. தெஹிவத்த இராணுவ முகாமைச் சேர்ந்த எட்டு இராணுவத்தி;னர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது எதிரிகள் தமக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என காரணம் காட்டி, இந்த வழக்கை, அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என விண்ணப்பம் செய்தனர். அதற்கமைவாக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு 2012 ஆம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது,

குற்றம் சாட்டப்பட்டிருந்த 8 இராணுவத்தினரில் 2 பேர் மரணமடைந்ததையடுத்து, 6 பேருக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிங்கள ஜுரி சபையினர் - அறங்கூறும் அவையோர் முன்னிலையில் வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என முன்வைத்த விண்ணப்பமும் நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, 7 பேர் அடங்கிய அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்றன.

அனுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ன தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையின் முடிவில் அறங்கூறும் அவையோர் எதிரிகள் 6 பேரும் நிரபராதிகள் என தெரிவித்து, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். அறங்கூறும் அவையோர் முன்னிலையில் நடைபெறுகின்ற வழக்கு விசாரணையின் சட்ட நடைமுறைக்கு அமைவாக, அந்தப் பரிந்துரையை ஏற்று, நீதிபதி மஞ்சுள திலகரட்ன எதிரிகளான 6 இராணுவ வீரர்களையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.



மயிலந்தனை படுகொலை வழக்கு

மட்டக்களப்பு மாவட்டம் மயிலந்தனையில் கடந்த 1992 ஆம் ஆண்டு 9 ஆம் திகதி இராணுவத்தினர் நடத்திய தாக்குதல் ஒன்றில ஒரு வயது தொடக்கம் 15 வயது வரையிலான சிறுவர்கள், ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட் 35 பேர் கொல்லப்பட்டனர்.

இராணுவ கட்டளைத் தளபதி உள்ளிட்ட 7 இராணுவத்தினர் விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டமைக்குப் பழி தீர்க்கும் வகையிலேயே மயிலாந்தனை கிராமவாசிகள் மீது இராணுவத்தினர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

மயிலந்தனை கிராமத்திற்குள் புகுந்த இராணுவத்தி;னர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், கத்திகள் கோடரிகள் என்பவற்றினால் வெட்டியும் கொத்தியுமே கிராமவாசிகள் படுகொலை செய்யப்பட்டதாக கண்கண்ட சாட்சிங்கள் தெரிவித்திருந்தனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற அடையாள அணிவகுப்பு ஒன்றில் இந்தச் சம்பவத்த்pல் சம்பந்தப்பட்டதாக 24 இராணுவத்தி;னர் அடையாளம் காட்டப்பட்டிருந்தனர். பின்னர் இந்த வழக்கு பொலன்னறுவைக்கும் அங்கிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இராணுவத்த்pனருக்கு பொலன்னறுவையில் பாதுகாப்பு இல்லையென்ற காரணத்தைக் காட்டியே வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது.

கொழும்பில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் அன்றைய யுத்த மோதல் சூழலில் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் கண்கண்ட சாட்சிகளான 30 பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியங்கள் அளித்திருந்தனர். இந்த வழக்கும் எதிரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க 7 பேர் கொண்ட அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது. விசாரணைகளின் முடிவில் எதிரிகளான 18 இராணுவத்தினரும் குற்றமற்றவர்கள் என அறங்கூறும் அவையோரினால் தீர்மானிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

அறங்கூறும் அவையோரின் முடிவுகளை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணைக்குத் தலைமை தாங்கிய தமிழராகிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி வேண்டுகோள் விடுத்த போதிலும், சுமார் 3 மணித்தியாலங்கள் நடைபெற்ற ஆலோசனைகளின் பின்னர், அறங்கூறும் அவையினர் மீண்டும் இந்த வழக்கின் எதிரிகள் குற்றமற்றவர்கள் என உறுதி செய்திருந்தனர்.

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற மயிலந்தனை படுகொலைகளுக்கு சுமார் பத்து வருட்ஙகளின் பின்னர் 2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அந்த வழக்கின் எதிரிகள் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தப் படுகொலைச் சம்பவமானது, அன்றைய காலப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் பதைபதைப்பையும் தமிழர் பிரதேசங்களில் ஏற்படுத்தியிருந்தது. கண் கண்ட சாட்சிகள் மட்டுமல்லாமல், இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்து பின்னர் உயிர் நீத்தவர்களின் மரண வாக்குமூலங்களும்கூட, கொழும்பு மேல் நீதிமன்ற விசாரணைகளின்போது முன்வைக்கப்பட்டிருந்தது. ஆயினும் குற்றவாளிகள் என எவரும் காணப்படவில்லை. தண்டனை வழங்கப்படவுமில்லை. மாறாக எதிரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்தத் தீர்ப்பையடுத்து, மயிலந்தனை கொலை வழக்கை மேன்முறையீடு செய்ய வேண்டும்  என்று அப்போதைய சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் அவர் அறங்கூறும் அவையோரின் முடிவுக்கமைய வழங்கப்படுகின்ற தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற மரபு ரீதியான வழக்கத்தைக் காரணம் காட்டி மேன்முறையீடு செய்ய மறுத்துவிட்டார்.



ஜுரி சபையினர் - அறங்கூறும் அவையோர் விசாரணை முறை

கொலை, கொலை முயற்சி, பாலியல் வன்புனர்வு (கற்பழிப்பு) ஆகிய குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்குகள் இலங்கையின் நீதிக்கட்டமைப்புக்கேற்ப, எதிரிகளின் விருப்பத்திற்கு அமைவாக அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணைகள் நடத்தப்படலாம்.

இத்தகைய வழக்கு ஒன்றை விசாரணை செய்யவுள்ள நீதிபதியிடமிருந்து நியாயமான நீதி கிடைக்காது என குற்றஞ்சாட்டப்பட்டவர் அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கருதினால், அவர்கள் அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய முடியும்.

அத்தகைய விண்ணப்பத்தை நீதிபதி நிராகரிக்க முடியாது. இரண்டு இனங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்படுகின்ற குமாரபுரம் படுகொலை போன்ற வழக்குகளில், எந்த இனத்தைச் சேர்ந்த  அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற வேண்டும் என்ற தெரிவை மேற்கொள்கின்ற உரிமையும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த உரிமையில் நீதிபதி தலையிட முடியாது. எனவே இந்த விடயத்தில் நீதிபதியின் கைககள் கட்டப்பட்டிருக்கின்றன என்றே கூற வேண்டும்.

அவ்வாறு நடைபெறுகின்ற விசாரணைகளின்போது, அறங்கூறும் அவையைச் சேர்ந்த ஒருவர் வெளிச்சக்திகளினால் செல்வாக்கு பிரயோகிக்கப்பட்டிருக்கின்றார் என நீதிபதிக்குத் தெரியவரும்போது அல்லது, விசாரணைகளின் போது அளிக்கப்படுகின்ற சாட்சியங்கள் அல்லது நீதிபதியினாலும், சட்டவாதிகளினாலும் அளிக்கப்படுகின்ற சட்ட நடைமுறை விளக்கங்களை சரியாகக் கிரகிக்கவில்லை என கண்டால், அந்த அறங்கூறும் அவையைக் கலைத்துவிட்டு புதிய அறங்கூறும் அவையை நீதிபதி தெரிவு செய்யலாம்.

இவ்வாறு சில வழக்கு விசாரணைகளில் அறங்கூறும் அவைகள் கலைக்கப்பட்டு புதிய அறங்கூறும் அவையினர் நியமிக்கப்பட்ட அனுபவம் தங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக சில சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

உரிய காரணத்தைக் காட்டி, அறங்கூறும் அவையொன்றைக் கலைத்து புதிய அவையோரை நியமனம் செய்யலாமேயொழிய, தீர்ப்பு தொடர்பான அவர்களின் முடிவுகளில் மாற்றம் செய்ய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை. அந்த அவையோரின் தீர்மானத்தை ஏற்று அதற்கேற்ற வகையிலேயே, நீPதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும்.

கடந்த 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய அரசியலமைப்பையடுத்து அறங்கூறும் அவையோர் விசாரணை முறைமை இலங்கையில் நடைமுறைக்கு வந்தது. ஆயினும், 38 வருடங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற அறங்கூளூறும் அவையோர் விசாரணை முறைமையானது, கடந்த 30 வருடங்களில் படிப்படியாகத் தேய்வடைந்து 98 வீதம் அழிவடைந்துள்ளது என சட்ட நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

நடைமுறை பாதிப்புகள்

அறங்கூறும் அவையோர் விசாரணை முறைமையானது அருகி வருகின்ற சூழலில் இராணுவத்தினரைத் தண்டிப்பதிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக அதனைக் கைக்கொள்கின்றதொரு போக்கு காணப்படுகின்றது என்பது சட்ட வல்லுனர்களின் கருத்தாகும். .

பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகவும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சிங்களவர்களான இராணுவத்தினராகவும் உள்ள சூழலில், சிங்களவர்களான அறங்கூறும் அவையோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்ற வழக்குகளில் அநேகமானவை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் காப்பாற்றுவதற்கே இந்த அறங்கூறும் அவையோர் விசாரணை முறைமை கைக்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுவதற்;கு இது காரணமாகியுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

இதற்கு சிறந்த உதாரணமாக மயிலந்தனைப் படுகொலை வழக்கின் அறங்கூறும் அவையோர் வழங்கிய தீர்ப்பும், இப்போது குமாரபுரம் படுகொலை வழக்கில் அதேபோன்று சிங்களவர்களான அறங்கூறும் அவையோர் வழங்கிய எதிரிகள் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பும் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவத்தினரைப் பாதுகாப்பதற்கே அறங்கூறும் அவையோர் விசாரணை பயன்படுத்தப்படுகின்றது என்ற சந்தேகத்திற்குச் சிறந்த உதாரணங்களாகியிருக்கின்றன.

அறங்கூறும் அவையோர் விசாரணை நடைமுறையில், ஒரு விசாரணையின் பின்னர் அளிக்கப்படுகின்ற தீர்ப்பை மாற்றி அமைக்க முடியாது. இந்த விசாரணை முறையில் அளிக்கப்பட்ட ஒரு தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்திலும், பின்னர் உயர் நீதிமன்றத்திலும் மேன் முறையீடு செய்வதற்கான உரிமை சட்டத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது,

ஆனால் ஒரு நீதிபதியினால் விசாரணை செய்யப்பட்டு அளிக்கப்படுகின்ற தீர்ப்புக்கு எதிரான  மேன்முறையீட்டு விசாரணையின்போது, எற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை நிராகரித்து புதிய தீர்ப்பு வழங்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உண்டு.

அதேபோன்று ட்ரையல் எட் பார் எனப்படுகின்ற 3 பேரைக் கொண்ட நீதிபதிகள் குழுhமினால் விசாரணை செய்யப்பட்டு வழங்கப்படுகின்ற தீர்ப்பையும் உச்ச  நீதிமன்றம் மாற்றியமைத்து புதிய தீர்ப்பை வழங்கலாம்.

ஆனால் அறங்கூறும் அவையோர் விசாரணை நடைமுறையின் மூலம் வழங்கப்படுகின்ற தீர்ப்பை மேன்முறையீட்டு விசாரணையின்போது நியாயமான காரணங்களைக் காட்டி, மீள்விசாரணைக்கு உத்தரவிடலாமேயொழிய, ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றுவதற்கு அதிகாரம் கிடையாது. ஆனால் நியாயமான காரணங்கள் இருக்குமேயானால் மேன்முறையீட்டின் போது அந்த வழக்கை மீள்விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியும். அதற்கான அதிகாரம் மேன்முறையீட்டைப் பரிசீலனை செய்கின்ற நீதிமன்றத்திற்கு உண்டு.

அறங்கூறும் அவையோரினால் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்றுக்கு எதிராக, அத்தகைய வழக்கைத் தாக்கல் செய்த சட்டமா அதிபரே மேன்முறையீடு செய்ய முடியும். அதேபோன்று குற்றம் சாட்டப்பட்டவராகிய எதிரியும் - தேவை ஏற்பட்டால், வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்குத் திருப்தி இல்லை என தெரிவித்து, மேன்முறையீட்டுக்குச் செல்ல முடியும்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களான  கொலையுண்டவர்கள் அல்லது கொலை முயற்சிக்கு உள்ளாகியவர் அல்லது பாலியல் வன்புனர்வுக்கு உள்ளாக்கப்பட்டவரும், பாலியல் வன்புனர்வின் பின்னர் கொல்லப்பட்டவர் சார்பானவர்களும் மேன்முறையீடு செய்ய முடியாது.

அவ்வாறு மேன் முறையீடு செய்வதற்கான உரிமை அந்த வழக்கைத் தாக்கல் செய்த சட்டமா அதிபருக்கே உள்ளது,

இதன் காரணமாகத்தான், குமாரபுரம் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி, குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் கையளித்திருக்கின்றார்கள்.

சாதாரணமாக அரச தரப்பினராகிய சட்டமா அதிபர் அறங்கூறும் அவையோர் விசாரணை முறையில் வழங்கப்படுகின்ற ஒரு தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்வது கிடையாது. அவ்வாறு செய்ததாகத் தெரியவில்லை. அரச தரப்பாகிய சட்டமா அதிபரே நீதிமன்றம் ஒன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் திருப்தி இல்லை எனக் கூறி மேன் முறையீட்டுக்குச் செல்வது நீதி நடைமுறைக்குப் பொறுப்பானவர்களே நீதி நடைமுறைமீது நம்பிக்கையில்லை என்று கூறியதாக அமைந்துவிடும் அல்லவா?

மறு புறத்தில் குற்றம் செய்துள்ளாகக் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமு; என்பதற்காகவே சட்டமா அதிபர் குமாரபுரம் கொலை வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த வழக்கில் அவருடைய சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த அரச தரப்புச் சட்டத்தரணி. இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தார். அதற்கான காரணங்கள், ஆதாரங்கள் குறித்தும் அவர் நீதிமன்றத்திற்கும்,  அறங்கூறும் அவையோருக்கும் தெளிவுபடுத்தியிருந்தார். ஆயினும் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பில் மேன் முறையீடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.



பலரையும் பல்வேறு உணர்வுகளுக்கு உள்ளாக்கியுள்ள குமாரபுரம் கொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு எதிராக, குமாரபுரம் மக்கள் விடுத்துள்ள நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி ஏற்பாரா, அவ்வாறு அதனை ஏற்று, சட்டமா அதிபரை மேன்முறையீடு செய்யுமாறு கூறி நீதித் துறையில் தலையீடு செய்வாரா என்பது தெரியவில்லை.

No comments:

Post a Comment