July 10, 2016

வடக்கு ஊடகவியலாளர்கள், ஜனாதிபதி, பிரதமருடன் ‘போடோ சூட்’ செய்யவா கொழும்பு வந்தார்கள்?மனோ கணேசன் கேள்வி?

கடந்த காலத்தில் வடக்கு ஊடவியலாளர்களுக்காக போராடியவர்களை சந்திக்காமல் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் போட்டு சூட் செய்துகொள்ள மாத்திரமா வடக்கு ஊடகவியலாளர்கள் கொழும்பு வந்தார்கள் என்று அமைச்சர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


வடக்கு ஊடகவியலாளர்களின் கொழும்பு பயணம் தொடர்பில் முக நூலில் இட்ட பதிவொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவு பின்வருமாறு,  இந்த நொடியில் என் மனதில் - 09/07/16

வந்தார்கள்;கண்டார்கள்;போனார்கள், என்பதாக திடீரென வடக்கில் இருந்து தமிழ் ஊடக நண்பர்கள் (படத்தில் பார்த்தால் நிறைய பேர்) கொழும்பு வந்து போனதாக ஒருநாள் செய்திகளில் கண்டேன். அதற்கு முதல்நாள் முற்பகல் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பில், சில மணி நேர இடைவெளியில், அன்று மாலையே இலங்கை மன்ற கல்லூரியில், வடமாகாண ஊடகவிலாளருடன் ஒரு சந்திப்பு இருக்கின்றது, வாருங்கள் என்று சொல்லப்பட்டது.

அன்று மாலை, ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இருந்ததால், என்னால் அதில் கலந்துக்கொள்ள முடியவில்லை.அவ்வளவுதான். இது ஏதோ ஒருநாளுக்குள் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பயணமோ? அப்படியானால் அது ஏன்? ஏனப்பா இந்த அரைகுறை அவசர விஜயம்?

இதற்கு முன் இங்கே இருந்து ஒரு ஊடக குழுவினர் அங்கே வந்தார்கள். என்னையும் யாழ் வரும்படி ஒரு ஏற்பாட்டாளர் அழைத்தார். வேறு வேலை இருந்ததால் நான் வரவில்லை. ஆனால், என்னால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கினேன்.

நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், ஊடக அமைச்சர் ஆகியோரை சந்தித்தது மிக நல்ல விடயம். ஆனால், இவை மாத்திரம் போதும் என்று நினைத்து விட்டீர்களோ? தலைநகர மாவட்ட தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ கட்சியாக ஒரு அமைச்சரவை அமைச்சர், அதுவும் சகவாழ்வு, மொழி அமுலாக்கல் துறை அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், மாகாணசபை உறுப்பினர்கள் இருவர், மாநகரசபை உறுப்பினர்கள் ஆறு பேர் என்போரை கொண்ட நமது கட்சி இங்கே இருக்கிறது.

கட்சி அலுவலகம், அமைச்சரவை அலுவலகம், எங்களது தொலைபேசி இலக்கங்கள், முகநூல் உள்பெட்டிகள், நிலையான விலாசங்கள், என முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும், குறுஞ்செய்தி அனுப்பவும் எக்கச்சக்கமாக இருக்கின்றன. ஊடகவியாளர்களுக்கு இவை தெரியாமல் இருக்கவும் முடியாது.

தலைநகரம் வந்த உங்களை உடன்பிறப்புகளாக மகிழ்வுடன், அழைத்து, விருந்தோம்பல் செய்து, அனுப்பி வைக்க எம்மால் முடியாது என எண்ணி விட்டீர்களோ? முன்கூட்டியே ஏற்பாடு செய்திருந்தால், எத்தனையோ அரசியல், சமூக, கலாச்சார, ஊடக தலைப்புகளில் எவ்வளவோ விஷயங்களை மனம் விட்டு கலந்து உரையாடி, இருக்கலாமே? பல சிக்கல்களுக்கு விடை தேடியும் இருக்கலாமே?

அன்று கடந்த ஆட்சியில் அங்கே நீங்கள் கொல்லப்பட்ட போது, தாக்கப்பட்ட போது, கடத்தப்பட்ட போது, இங்கே இருந்து, அங்கே வந்து, என்னுடன் இணைந்து போராடி, வடக்கு ஊடக அடக்குமுறைபற்றி கொழும்பில் ஆர்ப்பரித்து பேசிய, சிறிதுங்க, விக்கிரமபாகு ஆகிய சிங்கள முற்போக்காளர்களையாவது சந்தித்தீர்களா என்றால் அதுவும் இல்லை. சிறிதுங்க, விக்கிரமபாகு ஆகியோரிடம் விசாரித்த போது, இல்லையே, அப்படியா வந்தார்களா? எப்போ? ஏன் எங்களை இவர்கள் சந்திக்கவில்லை என்று இருவரும் என்னிடம் வருத்தப்பட்டார்கள்.

ஆக, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை குசலம் விசாரிக்க வந்தீர்களோ? அதற்கு மொழிபெயர்ப்பாவது கிடைத்ததா? அல்லது அவர்களுடன் ‘போடோ சூட்’ செய்து படம்பிடிக்கதான் கொழும்பு வந்தீர்களோ? பிடித்த படங்களையாவது பத்திரமாக வீடுகளில் மாட்டி வைத்துக்கொள்ளுங்கள். நாளை உங்கள் வீடுகளுக்கு ஆமிக்காரன் வந்தால் எடுத்து காட்டலாம்.

No comments:

Post a Comment