July 22, 2016

யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை இப்படிப் பார்க்கிறார் மனோ

தெற்கிலே சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதற்கு பதிலடியாக வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் வடக்கில் தமிழ் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டால்

அதற்கு பதிலடியாக தெற்கில் சிங்களம் மட்டும் என்ற கொள்கை முன்னெடுக்கப்படும். யாழ் பல்கலைக்கழக சம்பவத்தை நாம் இப்படித்தான் பார்க்க வேண்டும். அது முழு நாட்டுக்கும் தந்து இருக்கும் செய்தி இதுதான்.

தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர் மற்றும் பேராசிரியர் சமூகத்துக்கு ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன். முடியுமானால், இங்கே உங்கள் பீடங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதிலே நாதஸ்வரம், மேளதாளம், பரதநாட்டியம் என்ற தமிழ் கலாச்சார அடையாளங்களை உள்வாங்கி, நீங்கள் பல்லின, பன்மொழி பன்மைத்தன்மை கலாச்சாரத்துக்கு தயார் என எடுத்து காட்டுங்கள்.

அப்படி செய்தால் மட்டுமே உங்களால், தமிழ் மட்டும் என்ற கொள்கையாளர்களை நாணமடைய செய்ய முடியும் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப குழு அறையில் நடைபெற்ற தொண்டு நிறுவன-ஊடக கூட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சா் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
சிங்களம், ஈழத்தமிழ், மலையக, முஸ்லிம் என்று இந்த நாட்டில் வாழும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட எல்லா இனங்களின் கலாச்சாரங்களையும் கலந்து ஒரு கலவை தேசிய கலாச்சாரம் ஏற்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ், சிங்கள, முஸ்லிம், மலையக தனித்துவ அடையாளங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை ஒரு மாலையாக கோர்த்துத்தான் இலங்கை தேசிய அடையாளம் உருவாக வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்.

தெற்கில் இன்று, இந்த யாழ் பல்கலைக்கழக பிரச்சினைபற்றி குரல் எழுப்பப்படுகிறது. குரல் எழுப்பும் இவர்கள் உத்தமர்களா? எல்லா இனங்களிலும் இன்று அடிப்படைவாத சிந்தனை இருக்கிறது. அனைத்து இன அடிப்படைவாத சிந்தனையாளர்களும் ஒருவருடன் ஒருவர் ஏச்சும், பேச்சுமாக மோதிக்கொள்வார்கள். ஆனால் இவர்கள் மத்தியில் எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை உண்டு.

வடக்கிலும், புலம்பெயர்ந்த சமூகத்திலும் இருக்கின்ற அடிப்படைவாதிகள் வாயை திறந்தால் அது, தென்னிலங்கையில் இருக்கின்ற அடிப்படையாளர்களுக்கு பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது. இவர்கள் வாய் திறந்தால், அது அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. கடல் கடந்து போய் சீமான், வைகோ ஆகியோருக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. இதுதான் இன்றைய யதார்த்தம்.

இந்நாடு பல இனங்கள், மதங்கள், மொழிகள் கொண்ட ஒரு நாடு என்ற பன்மை தன்மையை, நாம் அனைவரும் ஏற்றுக்கொள்வதில்தான் இந்த நாட்டின் எதிர்காலம், தங்கியுள்ளது. யாழ் பல்கலை சம்பவம், இந்த பன்மை தன்மையின் மீது விழுந்த அடி. அதுதான் உண்மை. அது ஏன் என நாம் யோசிக்க வேண்டும். அடிப்படைவாதத்தை தூக்கி எறிந்துவிட்டு மத்தியஸ்த பன்மைவாதத்தை முன்னெடுக்க நாம் முன்வர வேண்டும். உங்களுக்கு முடியுமானால், இங்கே உங்கள் பல்கலை பீடங்களில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதிலே நாதஸ்வரம், மேளதாளம், பரதநாட்டியம் என்ற தமிழ் கலாச்சார அடையாளங்களை உள்வாங்கி, நீங்கள் பல்லின, பன்மொழி பன்மைத்தன்மை கலாச்சாரத்துக்கு தயார் என எடுத்து காட்டுங்கள். அப்படி செய்தால் மட்டுமே உங்களால், தமிழ் மட்டும் என்ற கொள்கையாளர்களை நாணமடைய செய்ய முடியும். தென்னிலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர் மற்றும் பேராசிரியர் சமூகத்துக்கு இதை ஒரு யோசனையாக சொல்ல விரும்புகிறேன்.




No comments:

Post a Comment