July 21, 2016

ஜெனீவா தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது குறித்து ஸ்ரீலங்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்கா கூட்டு ஆணைக்குழுவின் 20ஆவது கூட்டத்தின்போதே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்தல் அல்லது அவர்கள் தொடர்பில் வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையை கண்டறிவதற்கான நிலைமாற்று நீதிப்பொறிமுறையை உருவாக்குதல், நல்லிணக்கம், நீதியை நிலைநாட்டுதல் மற்றும் நட்டஈட்டினை வழங்குதல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஒக்டோபர் முதலாம் திகதி ஸ்ரீலங்காவின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பு இதன்போது கிடைத்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் சில முன்னெடுப்புகளை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிககள் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு கிழக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்துதல் பொது மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வரா உள்ளிட்ட பிரதிநிதிகளும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment