July 21, 2016

சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அவலம்!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர் கிராமத்தில் இறுதிக்கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.


2006 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக சம்பூர் பிரதேசத்தை விட்டு இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் வசித்துவந்த நிலையில் 9 வருடங்களின் பின்னர் முழுமையாக மீளக் குடியமர்த்தப்பட்டனர். எனினும் இதுவரை தமக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இறுதிக்கட்ட யுத்தம் ஆரம்பமானதை அடுத்து 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி சம்பூர் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், 2016 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் 25 திகதியே முழுமையாக மீற்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கமைய இறுதிக் கட்டமாக மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு கிராமசேவகர் பிரிவுகளில் வசித்துவரும் மக்கள் தாம் மீள்குடியேற்றப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் இதுவரை தமக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

குடி நீர்வசதி விநியோகமும் மட்டப்படுத்தபட்ட அளவிலேயே இடம்பெறுவதாகவும் இதனால் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது 6 மாதங்களுக்கு உலர் உணவு வழங்கப்படும் என அரச அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்ட போதும் 15 நாட்களுக்கு மாத்திரமே உலர் உணவே வழங்கபட்டதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேறியுள்ள தமது பிள்ளைகள் கல்வி கற்பதற்கு கூட எந்தவொவரு வசதியும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கும் சம்பூர் கிழக்கு மற்றும் மேற்கு மக்கள் இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட சம்பூர் பிரதேச மக்களுக்கு தொடர்ச்சியாக பல உதவிகள் வழங்கப்படுவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் தமக்கு, தற்காலிக வீடொன்றை கூட வழங்கவில்லை என சம்பூர் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவக்கொழுந்து விமலா கூறுகின்றார்.

2007 ஆம் ஆண்டு காணமல் போன தனது மகன் இருந்திருப்பாரானால் தனக்கு இந்தநிலை ஏற்பட்டிருக்காது என அடிப்படை வசதிகள் அற்ற சிறிய குடிசையில் வாழ்ந்து வரும் தாயார் கூறுகின்றார்.

போர் காரணமாக அனைத்தையும் இழந்து குறிப்பாக தமது வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை முகாம்களுக்கு தொலைத்துவிட்டுள்ள சம்பூரைச் சேர்ந்த இந்த மக்களுக்கான அத்திவசிய வசதிகளையும் பெற்றுகொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment