July 22, 2016

வித்தியா கொலைச் சந்தேகநபர்கள் இருவர் தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பு!

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களான மகாலிங்கம் சசிகுமார், மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர் நேற்று அவரது தாயாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர்.


இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக மூன்றடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேற்படி இரு சந்தேக நபர்களும் நேற்றுக் காலை 8.30 மணி அளவில் சிறையிலிருந்து அவர்களது தாயாரின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த ஓட்டுமடத்திலுள்ள மலர்சாலை ஒன்றுக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

கடந்த ஜுன் மாதம் 17ம் திகதி சிறைச்சாலை அனுமதியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகாலிங்கம் சசிகுமாரது (சுவிஸ் குமார்) தாயார் மரணமானார்.

மரணமான மகாலிங்கம் தவநிதி என்ற குறித்த பெண்மணி மேற்படி வழக்கில் நீதிமன்ற தவணைக்காக வந்திருந்த படுகொலை செய்யப்பட்ட மாணவியின் தாயாரான சரஸ்வதி என்பவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சாட்சிகளை பாதுகாப்பதற்கான கட்டளை சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்ட அப்பெண்ணுடன் அவரது சம்பந்தியான சிவதேவன் செல்வராணி என்பவரும் குறித்த சாட்சியை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த வழக்கு தவணையின் போது ஜுன் 21ம் திகதி இறுதிக் கிரியைகள் நடத்த வேண்டி இருந்த காரணத்தினால் சட்டத்தரணி ஒருவர் ஊடாக விண்ணப்பம் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் குறித்த வழக்கில் 4 வது சந்தேக நபரான மகாலிங்கம் சசிதரன், 9ம் சந்தேக நபரான மகாலிங்கம் சசிகுமார் (சுவிஸ்குமார்) ஆகியோருக்கு இறந்த பெண்மணியுடன் சாட்சியை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்ட சிவதேவன் செல்வராணி ஆகியோருக்கும் நீதிமன்றம் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தது.

இவ்வனுமதி வழங்கும் போது ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ. சபேசன் சந்தேக நபர்கள் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ளும் போது சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸ் தரப்புக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டடுள்ளது.

சடலம் யாழ்ப்பாணம் ஒட்டுமடம் பகுதியில் அமைந்துள்ள கோம்பையன் மணல் இன்பம் மலர்சாலை சூழலில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் வைக்கப்பட்டிருந்த்து.

இறுதி கிரியைக்கு இறந்த பெண்மணியின் மகன்களாக மகாலிங்கம் சசிதரன், மகாலிங்கம் சசிகுமார் ஆகியோர் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கைவிலங்கு இடப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.

ஆனால் இறந்த பெண்மணியுடன் சாட்சியை அச்சுறுத்தியதாக கைது செய்யப்பட்ட சிவதேவன் செல்வராணி அழைத்து வரப்படவில்லை.

அத்துடன் 20 நிமிடம் வரை தாயாரின் இறுதிக் கிரியைகளை மேற்குறித்த இரு சந்தேக நபர்களும் கைவிலங்குடன் நிறைவேற்றினர்.

இறுதியாக தங்கள் சொந்த பந்தங்களுடன் இணைந்து அனுதாபங்களை பகிர்ந்ததுடன் சிறைச்சாலை அதிகாரிகள் இவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு கடும் பாதுகாப்புடன் ஏற்றிச் சென்றனர்.

No comments:

Post a Comment