வடமாகாண பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனை அபிவிருத்திக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை (22.07.2016) ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 28ஆம் திகதி வரை
நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்துள்ளார்.
வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சுடன் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களும் பனை அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இக்கண்காட்சியில் 13 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பனைசார் கைப்பணிப்பொருட்கள் மற்றும் பனை உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக்கண்காட்சி தினமும் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை இடம்பெறவுள்ளது.
கண்காட்சியில் பனைசார் உற்பத்திப்பொருட்களைக் கொள்வனவு செய்பவர்களில் தினமும் 5 அதிஸ்டசாலிகள் தெரிவுசெய்யப்பட்டு கண்காட்சி இறுதிநாளில் அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அத்தோடு மாவட்ட ரீதியாகத் தினமும் மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வடமாகாண கூட்டுறவு ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி திறப்பு விழாவில் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் வே.சிவயோகன், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் பொ.மோகன், கனகம்மா நல்லதம்பி, உ.சுபசிங்க, கு.இரவீந்திரநாதன், அ.செபமாலை ஆகியோருடன் அதிக எண்ணிக்கையில் பொதுமக்களும் கலந்துகொண்டி ருந்தார்கள்.
No comments:
Post a Comment