July 21, 2016

தாஜுதீன் கொலை - மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிகள் நால்வரிடம் விசாரணை!

றகர் வீரர் மொஹமட் தாஜுதீனின் கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நால்வர் மற்றும் இராணுவ அதிகாரி ஒருவரிடமும் இரகசிய பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாக நேற்று நீதிபதி நிஷாந்த பீரிஸிடம் இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.


 
முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய பாதுகாப்பு அதிகாரியொருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு அவரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்கு மூலத்தையடுத்து தாஜுதீன் கொலை தொடர்பில் முக்கிய விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் இரகசிய பொலிஸார் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதற்கிணங்க ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளான போர ஒபெல் லகே ரஞ்சித் பிரேமலால் சில்வா, மதுர தாரியலாகே தயானந்த, தென்னகோரலலாகே பிரேம குமார சந்திரதிலக்க, குடலான ஆரச்சிகே பிரதீப் ருவன் குமார ஆகியோரிடமே வாக்கு மூலம் பெற்றப்பட்டதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ள இராணுவ உயரதிகாரி ராஜஹவத்த ஆரச்சியிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் இரகசிய பொலிஸார் தெரிவித்தனர்.

நாரஹென்பிட்டி முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரி டேமியன் பெரேராவின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் குற்றத் தடுப்புத் திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment