July 9, 2016

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டத்திற்கு தடையுத்தரவு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சிவநாதன் ஜமுனானந்தாவை மனுதாரராகக் கொண்டு, சட்டத்தரணி திருக்குமரனால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த மனுவில் யாழ் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத் தலைவர், செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

தாதியர் சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதால் வைத்தியசாலையில் பல்வேறு பிரிவுகளிலும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களுக்கும், சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களுக்கும், அதேநேரத்தில், வைத்தியசாலைக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாகக் குறிப்பிட்டு, தாதியர் சங்க வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும், தாதியர் தொடர்ந்தும் கடமையில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி திருக்குமரன் தனது மனுவில் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த நீதிபதி இளஞ்செழியன், எதிர்வரும் 22ம் திகதி வரையில் 14 நாட்கள் அமுலில் இருக்கும் வகையில் யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத்தினரின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தாதியர் சங்கத்தினர் தமது பக்க நியாயங்களை எடுத்துரைப்பதற்கும் நீதிமன்றம் சந்தர்ப்பம் அளித்து, இந்த வழக்கை எதிர்வரும் 21ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அத்துடன், இந்தத் தடையுத்தரவையடுத்து, தாதியர் சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. 

No comments:

Post a Comment