July 8, 2016

103 முன்னாள் போராளிகள் புற்றுநோயினால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை கோருகிறது கூட்டமைப்பு!

புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள் 103 பேர் புற்றுநோயினால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தேசிய ஆராய்ச்சிப் பேரவை சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னரான காலப்பகுதியில் புற்றுநோயினால் உயிரிழப்பதற்கான காரணங்கள் முழுமையாக நம்பகத்தன்மை வாய்த முறையில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இராணுவ தடை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வு அல்லது விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட பல ஆண் போராளிகள் இடுப்பிற்கு கீழ் இயங்கமுடியாதவாறு காணப்படுகின்றனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விசாரணை காலப்பகுதியில் இராணுவத்தினரால் இடுப்பு பகுதியில் ஊசி எற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்  சுட்டிக்காட்டினார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பொஸ்பரஸ் குண்டுகளினால் பாதிக்கப்பட்ட பலரை தாம் சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் வடக்கு கிழக்கை மையப்படுத்தி இலங்கை தேசிய ஆராய்ச்சி பேரவையின் கிளை ஒன்று மாங்குளத்தில் அமைக்கப்படுவதன் மூலம் யுத்ததின் போது உயிரிழந்தவர்கள், யுத்ததின் வடுக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment