June 5, 2016

தேசிய இனப்பிரச்சினைக்கு இந்தியா இல்லாமல் தீர்வு கிடைக்காது, அமைச்சர் மனோகணேசன் !

இந்தியா இல்லாமல் தேசிய இனப்பிரச்னைக்கு தீர்வு இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இந்தியா மீது இங்குள்ள சில மக்கள் வெறுப்புணர்வை வளர்த்தாலும், இந்தியா இல்லாமல் தீர்வு இல்லை என்பதுதான் நிஜம். அரசியல் சாசனத்தின் 13 ஆவது திருத்தத்தைக் கொண்டு வந்தது இந்தியாதான்.

அதனால் மற்ற அனைவரையும் விட இந்தியாவிற்கு அதிக பொறுப்பு இருக்கிறது என தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

“சிங்கள மக்களின் மனதை வென்றெடுக்காமல், அவர்களின் நம்பிக்கையைப் பெறாமல், தேசிய இனைப்பிரச்னைக்கு தீர்வு காணமுடியாது. அதற்காக அவர்கள் காலில் மண்டியிட்டு பிச்சைக் கேட்க வேண்டும் என்று கூறவில்லை. நியாயமான நம் கோரிக்கைகளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

புதிய ஆட்சியில் நாட்டிலே அரஜாகத்தை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதில் வெற்றி கண்டுள்ளோம். போலீஸ் மற்றும் நீதித் துறையின் அராஜகம் குறைந்துள்ளது. அரசை கண்காணிப்பதற்காக நாங்கள் சுயாதீன ஆணைக் குழுக்களை உண்டாக்கி உள்ளோம்.

அது மட்டுமல்லாமல் ஜனாதிபதியின் கட்டற்ற அதிகாரங்களை குறைத்து, பாராளுமன்றத்திற்கு பதில் கூறும் பிரஜையாக மாற்றி இருக்கிறோம். இவை தவிர இந்த தேசத்தின்அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக இருக்கக்கூடிய, தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாட்டினை துவங்கி இருக்கிறோம்.

புதிய அரசியலமைப்பை வடிவமைக்க, அனைத்து உறுப்பினர்களையும் கொண்ட அரசியல் அமைப்பு பேரவையை உருவாக்கி இருக்கிறோம். அந்தப் பேரவையை வழிநடத்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளின் தலைமையில், ஒரு வழிக்காட்டல் குழுவை அமைத்துள்ளோம்”

புதிய அரசியல் அமைப்பில் தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், “முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். முதலாவதாக, பிரதமர் தலைமையில் ஆட்சி நிர்வாகத்தை செயல்படுத்துவதா என்பதை ஆராய்ந்து வருகிறோம்.

அடுத்து, இப்போது விகிதாசார தேர்தல் முறை இங்கு உள்ளது. விகிதாசார முறையும், தொகுதி முறையும் கலந்த ஒரு முறைக்கு செல்லலாமா என்றும் ஆய்வு செய்து வருகிறோம். இது அனைத்தையும் விட மிக முக்கியமாக, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராய்ந்து வருகிறோம்.



அதாவது கொழும்புவில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள், அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்று நம்புகிறோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

கைதிகள் மற்றும் காணி விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்

“நாங்கள் பதவியேற்கும்போது மொத்தம் 220 அரசியல் கைதிகள் இருந்தார்கள். அதில் 40 பேர் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். மற்றவர்களையும் விடுதலை செய்வதவற்கான சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கணிசமான அளவில் காணிகள் திரும்பத்தரப்பட்டுவிட்டன.

பத்து ஆண்டுகளாக ராஜபஷ ஆட்சியில் நடக்காதவையெல்லாம் இந்த எட்டு மாதங்களில் நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அது பிழை. ஆனால், ஒவ்வொன்றாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. எல்லாமே நடந்துவிட்டது என்று நான் கூறவில்லை.

நாங்கள் நிம்மதி பெற்றுவிட்டோம் என்று சொல்லவரவில்லை. அப்படிச் சொன்னால் நான் பொய்யனாகதான் இருக்க வேண்டும். அதே வேளையில், ஒன்றும் நடக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால், சில நம்பிக்கையளிக்கும் நகர்வுகள் இருக்கின்றன.

அந்த நம்பிக்கை பொய்த்தால், என் பதவியை துறந்து தமிழ் மக்களுக்காக போராடுவேன். நான் அரசாங்க அமைச்சராக இருக்கலாம். ஆனால், என் முதல் விசுவாசம் எம் தமிழ் மக்களிடம்தான், அதன் பின்புதான் அரசெல்லாம்”

No comments:

Post a Comment