June 25, 2016

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்!

சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு அளித்த தீர்ப்பின்படி, நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசால் முடியாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


சென்னை ஐகோர்ட்டில் எஸ்.நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை தமிழக அரசு 2000-ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக மாற்றியது. நான் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன்.

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து, 1994-ம் ஆண்டு அரசாணையும் பிறப்பித்தது.

இந்த அரசாணையின்படி, என்னை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசுக்கு அனுப்பிய மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, அந்த மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை கடந்த 14-ந் தேதி விசாரித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழக உள்துறை துணை செயலர் டேனியல் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இவர்களுக்கான தண்டனையை குறைக்க மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால், மேற்கண்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.

அந்த கடிதத்துக்கு பதில் தருவதற்கு பதிலாக, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச், இது தொடர்பாக 7 கேள்விகளை எழுப்பி, இந்த வழக்கை அரசியல்சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டது.

இந்த வழக்கை விசாரித்த அரசியல்சாசன பெஞ்ச், அனைத்து மாநில அரசுகளும் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு தடை விதித்து 2014 ஜூலை 9-ந் தேதி உத்தரவிட்டது. பின்னர், இந்த உத்தரவை 2015 ஜூலை 23-ந் தேதி மாற்றியமைத்து உத்தரவிட்டது.

அதன்படி, வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டாலோ, 20 அல்லது 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலோ, சி.பி.ஐ. விசாரித்த வழக்காக இருந்தாலோ, அந்த வழக்குகளில் மாநில அரசு தாமாக முன்வந்து தண்டனை குறைப்பு செய்ய முடியாது என அரசியல்சாசன பெஞ்ச் தீர்ப்பளித்தது.

பின்னர், இந்த வழக்கை மீண்டும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அரசியல்சாசன பெஞ்சின் தீர்ப்பினால், நளினியை தமிழக அரசால் விடுவிக்க முடியாது.

தற்போது அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிற்கு நளினி தரப்பு வக்கீல்களும் ஆஜராகி வருகின்றனர். அந்த வழக்கில் இன்னமும் இறுதி தீர்ப்பு வராததால், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் நளினியின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு 27-ந் தேதி(திங்கட்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.

No comments:

Post a Comment