June 28, 2016

தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை நிர்க்கதியாக்கிவிட்டது – அரியாலை மத்தி மக்கள் ஆதங்கம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் உணர்ச்சிப் பேச்சுக்களை நம்பி கடந்த கால தேர்தல்களில் தாங்கள் தவறான தெரிவுகளை மேற்கொண்டது மிகப்பெரிய தவறாகும் என்பதுடன் மக்களுக்காக உழைத்துவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரது கொள்கையுடன் இணைந்து இனிவரும் காலத்தில் செயலாற்ற உறுதிபூண்டுள்ளதாகவும் அரியாலை மத்தி மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளனர்.


அரியாலை மத்தி பகுதியில் நேற்றுமுன்தினம் (25) நடைபெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


அரியாலை திருமகள் பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இந்த குறைகேள் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தேவைப்பாடுகளையும் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தனர்.

இந்த குறைகேள் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் –

கடந்த காலங்களில் தாம் உணர்ச்சிப் பேச்சுக்களை நம்பி தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்தமை மிகப்பெரிய தவறு என்பதுடன் மக்களுக்காக உழைத்துவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரது கொள்கையுடன் இணைந்து பயணித்திருந்தால் இவ்வாறான ஒரு துன்பகரமான சூழ்நிலை தங்களுக்கு ஏற்பட்டிருக்காது என்றும் தாங்கள் தற்போது அடிப்படைத்தேவைகளை கூட பெற்றுக்கொள்ள பலநாட்கள் காத்திருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டள்ளதாகவும் தெரிவித்த குறித்த பகுதி மக்கள் இனிவரும் காலத்தில் மக்களது வாழ்வியலுக்காக பணிசெய்யும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து செயலாற்ற உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தனர்.


மேலும் உரிமைகளை பெற்றுத்தருவதாக கூறி தமது வாக்குகளை கபடத்தனமாக ஏமாற்றிப் பெற்றுவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் முடிந்த பின்னர் பல மாதங்கள் கடந்தும் இன்றுவரை தமது பகுதிக்கு வந்து வாக்களித்த எங்களது வாழ்வியல் நிலைமைகளை கேட்டறிந்துகொண்டது கிடையாது. நாங்கள் அவர்களை சந்திக்க சென்றாலும் எம்மை அவர்கள் சந்தித்து பேசுவதும் கிடையாது. ஆனால் நாங்கள் தேர்தல் காலங்களில் தவறுகளை செய்திருந்தும் எமது பகுதிக்கு வந்து எமது மக்களை சந்தித்து குறைநிறைகளை கேட்டறிந்து கொண்ட உங்களுக்கு நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என தெரிவித்தனர்.

மேலும் தாம் தற்போது எதிர்கொண்டுவரும் அன்றாட பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளையும் தமது பகுதி மக்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பத்தினருக்கான வாழ்வாதார திட்டங்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறும் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்தனர்.


மக்களது ஆதங்கங்களை கேட்டறிந்த பின்னர் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா -. கடந்த காலத்தில் நாம் மக்களுக்கு செய்த பணிகளுக்கான பிரதிபலன்களை  மக்களிடமிருந்து நாம் இன்றும் முழுமையாக பெற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவ பலத்தை தொடர்ந்தும் தவறானதாக மேற்கொண்டுவருவார்காளாக இருந்தால் எமது உரிமைகளை மட்டுமல்ல அபிவிருத்திசார்ந்த விடயங்களை கூட நாம் இழக்க நேரிடும். எனவே மக்கள் சிந்தித்து தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை தெரிவுசெய்யவேண்டிய கட்டாய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.


மேலும் குறித்த பகுதி மக்களது குறைநிறைகளை கேட்டறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா மக்களது தேவைகளை துறைசார்ந்தவர்களூடாக நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுதருவாக தெரிவித்தார்.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன் ஆகியோர் உடனிருந்தனர்.





No comments:

Post a Comment